Published : 08 Feb 2017 10:24 AM
Last Updated : 08 Feb 2017 10:24 AM
பொது நுழைவுத் தேர்வுகள், தரத்தை உயர்த்தும் என்பது நிறுவப்படாத கூற்று. மாறாக, அவற்றின் முக்கியப் பணி வடிகட்டுதலே. அத்தேர்வுகளை எதிர்கொள்ள சமநிலையில் மாணவர்கள் சூழல் இல்லை. தனிப் பயிற்சி நிறுவனங் களில் பெரும் பொருட்செலவில் கற்போரே அவற்றில் வெற்றிபெறும் வாய்ப்பு பெறுகின்றனர். தனிப் பயிற்சி மையங்களை ஒழிக்காமலும் பொதுப் பள்ளிகளில் ஆசிரியர்களைப் போதிய அளவில் நியமிக்காமலும் இருந்தால், எங்கே சமநிலை உருவாகும்? ‘நீட்’ அறிவிக்கப்பட்டதிலிருந்து புதிய பயிற்சி மையங்கள் ஏராளமாக முளைத்துள்ளன.
அடுத்து, பாடத்திட்டத்தை சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மேம்படுத்த வேண்டும் என்று கூறுவோர், பாடத்திட்டங்களைப் பார்த்தவர் அல்ல என்று கூற முடியும். தமிழ்நாடு மேனிலைக் கல்விப் பாடத்திட்டம் வகுப்பதில் என்.சி.ஈ.ஆர்.டி.யைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றார்கள். வகுப்பறைக் கற்பித்தலில்தான் குறை உள்ளது. தேர்வை மையப்படுத்திய கற்பித்தலில் கல்வி நோக்கங்கள் மறக்கப்பட்டு, வினா - விடை முறையைக் கையாளும் போக்குக்கு மாறிவிட்டது தர வீழ்ச்சிக்கு அடிப்படையாகும். தேர்வு வினாத்தாள்களில் சீரிய மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். இதற்குத் தடையாக இருப்பவர்கள் வணிகமுறைத் தனியார் பள்ளி நிர்வாகங்களே.
அவற்றின் பிடியிலிருந்து கல்வித் துறையை மீட்க வேண்டும். பல கல்விக் குழுக்களை அமைத்த தமிழக அரசிடம், அரசுப் பள்ளிகளைப் பற்றி ஆய்ந்திட ஒரு உயர்மட்டக் குழு அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக வற்புறுத்தி வருகிறேன். அரசு முன்வராதது, உண்மைகள் தெரிந்தும் சந்திக்கத் தயாரில்லை என்பதன் வெளிப்பாடே. பள்ளிகள் சீரடைய கல்வி நிர்வாகத்திலும் சீரிய மாற்றங்கள் தேவைப்படுகிறது.
- ச.சீ. இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.
எழுத்தின் ஜீவனே பிரதானம்
பிப்ரவரி 4-ல் வெளியான, ‘படைப்பாளிகளுக்கு நிதானமும் அவசியம்’ தலையங்கம் படித்தேன். துரித உணவைப் போல, நம் படைப்பாளர்களும் தங்கள் நூல்களை அவசரப் பிரசவம் செய்வதைத் தலையங்கம் அழுத்தமாகப் பிரதிபலித்தது. படைப்புகளின் எண்ணிக்கையைவிட அவற்றின் காலங்கடந்த உயிரோட்டமே பெரிது என்பதை எழுத்தாளர்களுக்கு உணர்த்த முனைந்தது நன்று. எழுதுவதை இயந்திரத்தனமாகச் செய்யாமல் தங்கள் படைப்பின் கரு, கதைக்களம், கதை மாந்தர்களோடு வாழ்ந்து அனுபவித்து, அதனை வெளிப்படுத்தினாலே இது சாத்தியம்.
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.
விரைவான நீதி
கோடிக்கணக்கான வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கின்றன. நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி, அபராதம் விதிக்கின்றன நீதிமன்றங் கள். ஆனால், முக்கியத்துவம் வாய்ந்த ஊழல் வழக்குகளில், சம்பந்தப்பட்டவர்களிடம் பத்து, இருபது ஆண்டுகள் விசாரணை செய்துவிட்டு, குற்றம் நிரூபிக்கப்பட வில்லை என்று விடுவிப்பது எந்த வகையில் நியாயம்? இந்தச் செயல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது ஆகாதா? ‘நீ எத்தனை வழக்கு வேண்டுமானாலும் பதிவுசெய்துகொள், நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன்’ என குற்றவாளிகள் சொல்லும் நிலை மாற வேண்டுமானால், அவர்களுக்கு நீதிமன்றம் மீது பயம்வர வேண்டும். அதற்கு நியாயமான, விரைவான நீதிதான் ஒரே வழி.
- சி.பிரகாஷ், முத்தரசநல்லூர்.
அரசியல் ஆசான் அண்ணா
நூல்வெளியில் வெளியான, ‘அண்ணா: தம்பிகளின் ஆசிரியர்!’ கட்டுரை வாசித்தேன். தேசத்திலும் மாகாணத்திலும் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸை எதிர்க்கத் தன் தம்பிகளை அவர் தயார்படுத்தினார், பயிற்றுவித்தார் என்பது 100% சரி. எங்கோ தஞ்சைப் பக்கம் வடுவூரிலுள்ள ஒரு ஏழை விவசாயி, சாக்ரடீஸ், ஷேக்ஸ்பியர், ரஷ்யப் புரட்சி, கருப்பின மக்களின் போராட்டம் பற்றி மட்டுமல்லாது, திராவிடம், கம்யூனிஸம் உள்ளிட்ட அரசியல் கோட்பாடுகள் பற்றிப் பேசுகிறார் என்றால், அதற்கு அண்ணாவின் பேச்சுகளும் எழுத்துகளும்தான் காரணம். தமிழ்நாட்டின் அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணா என்பது மிகையல்ல.
- ஆட்டோ ரமேஷ், வடுவூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT