Published : 01 Mar 2017 10:28 AM
Last Updated : 01 Mar 2017 10:28 AM
சீமைக் கருவேல மரங்களை அகற்ற நீதிமன்றம் உத்தரவிடுவதும், அரசு இயந்திரம் துரிதமாகச் செயல்படுவதும் பாராட்டுக்குரியது. ஆனால், சீமைக் கருவேல மரங்களைக் காட்டிலும் சுற்றுச்சூழலுக்கும், விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகத் திகழ்கிறது மணல் கொள்ளை. அதன் மீது இந்த அளவுக்கு நடவடிக்கை இல்லை. அதுகுறித்தும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. ‘மரங்கள் வளர்ப்பதால் மட்டுமே மழை பெய்யும் என்று சொல்ல முடியாது; காற்றின் ஈரப்பதமே மழையைத் தீர்மானிக்கிறது’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார் வானிலை ஆய்வாளர் ரமணன். ஆற்றுப் பகுதியில் உள்ள மணலின் அளவுக்கும், காற்றில் உள்ள ஈரப்பதத்துக்கும் தொடர்பிருக்கிறது. எனவே, அரசும் தன்னார்வலர்களும், அரசியல்வாதிகளும் மணல் கொள்ளையைத் தடுக்கும் முயற்சியில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
- சி.பிரகாஷ், முத்தரசநல்லூர்.
மாற்றம் தொடரட்டும்
சமீப காலத்தில் இளைஞர்களிடம் வாசிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதற்கு ‘தி இந்து’ நாளிதழுக்கும் பங்குண்டு. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்குப் பொன்னாடைகள் தவிர்த்துப் புத்தகம் வழங்கும்படி கோரியுள்ளதும், அதனை நடுப் பக்கத்தில் பிரசுரித்ததும் பாராட்டுக்குரியது. புத்தகங்களால் சமூகம் அறிவும் விழிப்புணர்வும் பெறுவதுடன், பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு ஊக்கமும் கிடைக்கும். இதனை திமுக மட்டுமல்ல, எல்லாக் கட்சிகளின் வட்ட, ஒன்றிய, மாவட்ட, மாநில நிர்வாகிகளும் பின்பற்றினால் நூலகங்கள் புத்துணர்வு பெறும்.
- நிலவளம் கு.கதிரவன், நல்லாண்பிள்ளைபெற்றாள்.
‘அறிவோம் நம் மொழியை’ தொடர் மிக அருமை. இந்த வாரம் ‘எழுத்தைக் கண்டு ஏமாற வேண்டாம்’ என்று ஆங்கிலத்தில் உள்ள எழுத்துகளை வைத்து, இருப்பதை அப்படியே நமக்குத் தெரிந்த உச்சரிப்புப்படி எழுதுவதையும் பேசுவதையும் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள். இன்றைய தொழில்நுட்ப வளாச்சியை வைத்து, தவறின்றி மொழியைப் பயன்படுத்துவது மொழியாளுநருக்கு அழகு. இதுபோன்ற ஆராய்ச்சியை ஆங்கிலத்தில் நான் கண்டதுண்டு. ‘Know Your English?’ என்று ‘தி இந்து’ ஆங்கில செய்தித்தாளில் படித்தது ஞாபகத்துக்கு வந்தது. இது போன்று நம் தாய்மொழி தமிழில் இல்லையே என்ற ஏக்கம் என்னுள் பல காலம் இருந்தது. அந்தக் குறையை ‘தி இந்து’ தமிழ் போக்கிவிட்டது. தமிழ் மொழி ஆர்வலர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றால் மிகையில்லை.
- வி.சிவகுமார், கோயம்புத்தூர்.
ஊழியர்களையும் திருத்துங்கள்
நியாயவிலைக் கடைகளின் எதிர்காலம் பற்றிய கூட்டுறவு சங்க ஊழியர் சங்க நிர்வாகி பேட்டியை (பிப். 27) வாசித்தேன். அரசின் போக்கைச் சரியாகச் சுட்டிக்காட்டியிருந்த அவர், கடை ஊழியர்களின் முறைகேடு குறித்து மழுப்பியிருந்தார். நான் ஒரு மூத்த குடிமகன். நியாயவிலைக் கடை ஊழியர்கள் செய்யும் அநியாயங்களைப் பட்டியல் போட்டால் பக்கம் கொள்ளாது.
உளுத்தம் பருப்பை அரை கிலோ போட்டுவிட்டு 1 கிலோ எனப் பதிவுசெய்வது, பொருள் வரவில்லை என்று சொல்லிவிட்டு, மறு மாதம் ரேஷன் அட்டையின் முன்பக்கத்தைத் திருப்பி, அந்தப் பொருட்களை வழங்கிவிட்டதாகப் பதிவுசெய்வது, உப்பு, சோப்பு போன்ற பொருட்களை வாங்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது என்று மக்களைப் பாடாய்ப்படுத்துகிறார்கள். ஏழைகளுக்கான கடை இது. ஆனால், இங்கேயும்கூட பெரிய மனிதர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும்தான் முன்னுரிமை தருகிறார்கள். கூட்டுறவு சங்க ஊழியர் சங்க நிர்வாகி தங்கள் ஊழியர்களையும் திருத்த முயற்சிக்க வேண்டும்.
- முருகேசன், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT