Published : 09 Mar 2017 09:41 AM
Last Updated : 09 Mar 2017 09:41 AM

இப்படிக்கு இவர்கள்: இன்னும் இரு உதாரணங்கள்!

மார்ச் 6-ல் வெளியான, ‘எல்லையை மீறுகிறது உச்ச நீதிமன்றம்’ கட்டுரையில் ‘கட்டுப்படுத்த யாரும் இல்லாததால் அதிகமான அதிகாரங்களுடன் - அதற்கேற்ற பொறுப்பு இல்லாமலே நீதித் துறை செயல்படத் தொடங்கியிருக்கிறது’ என்று கூறப்பட்டிருப்பதற்கு இன்னொரு உதாரணமும் உண்டு.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், திமுக பொதுச்செயலாளர் அன்பழகனால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் (77 மற்றும் 78/2003) மீது 18.11.2003-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், இந்த வழக்கை கர்நாடக சிறப்பு நீதிமன்றம் தினசரி விசாரணையாக நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தும், 11 ஆண்டுகள் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டதைக் கண்டுகொள்ளாமல் இருந்தது உச்ச நீதிமன்றம்.

அதேபோல, இந்திய அரசியல் சட்டத்தில் முதல் திருத்தமாக, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் கூடாது என்று நாடாளுமன்றத்தில் 243 உறுப்பினர்கள் ஆதரவுடன் (3 நபர்கள் மட்டுமே எதிர்ப்பு) நிறைவேற்றிய தீர்மானத்துக்கு எதிராக, ‘கிரீமிலேயர்’ என்ற பொருளாதார அளவுகோலைப் புகுத்தியதும் உச்ச நீதிமன்றம்தான்.

நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ செய்ய வேண்டிய வேலையைத் தாம் செய்ய முயல்வதும், நாடாளுமன்ற முடிவுக்குப் புறம்பான வகையில் செயல்படுவதன் மூலமும் உச்ச நீதிமன்றம் எல்லையை மீறுவதை உறுதிப்படுத்துகிறது.

- பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.



இனியொரு இயந்திரம் செய்வோம்

மார்ச் 6-ல் வெளியான ‘கக்கூஸ்’ ஆவணப்பட இயக்குநர் திவ்யா பாரதியின் பேட்டியை வாசித்தேன். ‘நம் நவீன வாழ்க்கை, துப்புரவுப் பணியாளர்களை மலத்தைக் காட்டிலும் மோசமான கழிவுகளை அள்ள வைத்திருக்கிறது’ என்ற வரிகள் சிந்திக்க வைத்தன. கூடவே, எப்படி ‘ஆண்கள் சமையல் கட்டுக்குள் நுழைந்த பிறகு, மிக்ஸி, கிரைண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டனவோ, அதைப் போலவே இது தலித் மக்களுக்கான வேலை மட்டுமில்லை என்ற உணர்வு ஏற்படும்போது, நவீன இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படும்’ என்று அவர் தெரிவித்திருப்பது நியாயமான கருத்து.

அறிவியலில் எத்தனையோ சாதனைகளைச் செய்த மனித சமுதாயத்தின் பார்வை இனியாவது கழிவு அகற்றலை நோக்கித் திரும்ப வேண்டும்.

- கே.ரோஸ்லின், தேவகோட்டை.



மாற்றத்தை நோக்கி அணி திரள்வோம்!

மார்ச் 3-ம் தேதி ‘5 கேள்விகள்.. 5 பதில்’ பகுதியில், ‘இன்றைய இளைய தலைமுறையினர் எந்த ஒரு செயலுக்கும் உடனடித் தீர்வை எதிர்பார்க்கிறார்கள்’ என்று கல்லூரிப் பேராசிரியர் பிரபாகர் தெரிவித்துள்ள கருத்து மிகவும் சிந்தனைக்குரியது. அது ஒருவிதத்தில் நல்லதுதான். ஆனால், எல்லா பிரச்சினைக்கும் அவ்விதம் தீர்வு காண முடியாது என்ற யதார்த்தத்தையும் அவர்கள் உணர வேண்டும். தற்போது ஒரு சில ஊர்களில் தாங்களே ஒரு குழு அமைத்து, நல்ல செயல்களைச் செய்துவருகிறார்கள். ஊடகங்களும் அதை ஊக்கப்படுத்துகின்றன. அது பாராட்டுதற்கு உரியதுதான். ஆனால், ஒரு நல்ல ஆரம்பம் அத்துடன் முடிந்துவிடக் கூடாது. சிறுபொறி பெருவிளக்காக மாறினால்தான் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுக்கும் வெளிச்சம் தரும்.

- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x