Published : 26 May 2017 09:52 AM
Last Updated : 26 May 2017 09:52 AM
நடப்பு சித்திரை மாதம் (ஏப்ரல் கடைசி வாரம்) நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எனக்கு ‘சுந்தரனார் விருது’ வழங்கிக் கெளரவித்தது. நேரில் போய்ப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை. ஒரு தாளில் நன்றி தெரிவித்ததோடு, இரண்டு கோரிக்கைகளைத் துணைவேந்தருக்கு எழுதியிருந்தேன்: 1. ரசிகமணி டி.கே.சி-க்கு சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒரு இருக்கை அமைக்க வேண்டும். 2. நவீனத் தமிழ் உரைநடை இலக்கியத்துக்குத் தனியாக ஒரு துறை அமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளைப் படித்த துணைவேந்தர் கி.பாஸ்கர், “இந்த இரண்டு கோரிக்கைகளையும் சுந்தரனார் பல்கலைக்கழகம் இப்போதே ஆவன செய்யும்” என்று பலத்த கரவொலிகளினிடையே ஒப்புதல் தந்தார்.
நான் அதை இப்போது ‘தி இந்து’வில் தெரிவித்து வாசகர்களோடு மகிழ்ச்சியடைவதோடு, இரண்டாவது கோரிக்கையான நவீன உரைநடைத் தமிழ் இலக்கியத்துக்கென்றே ஒரு தனித் துறை ஆரம்பிக்க வேண்டும் என்பதைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.
தமிழ்நாட்டில் உள்ள மற்ற பல்கலைக்கழகங்களையும் இதேபோல் செய்யும்படி நாம் செய்ய வேண்டும். உலகத் தமிழ் மாநாடுகள் ஏழு அல்லது எட்டு நடந்திருக்கின்றன. ஒரு மாநாட்டில்கூட தமிழ் உரைநடைப் படைப்பாளியான எழுத்தாளனை அழைத்துக் கெளரவித்ததாகவோ, ஒரு ஆய்வுத் தாளை வாசிக்கச் சொன்னதாகவோ, ஒரு ஆய்வரங்கம் நடத்தியதாகவோ தெரியவில்லை.
இவர்களுடைய எழுத்து தமிழ்ப் படைப்பு இல்லையா? இவனிடம் தரம்வாய்ந்த நாவல் இலக்கியம் உண்டு. குறுநாவல்கள் உண்டு. உலகத் தரத்துக்கு இணையான சிறுகதைகள் உண்டு. கட்டுரை வடிவங்கள் பல வகை உண்டு. கடித இலக்கியம், பதிவுகள் என்று படைத்துக்கொண்டே இருக்கிறான். கடேசியில், இனி இவனே ஒரு உலகத் தமிழ் இலக்கிய மாநாடு கூட்டும்படி ஏற்பட்டுவிடுமோ? மொழியின் முன்பாய்ச்சல் எவை எவை என்று கண்டறிகிறவனுக்கே காத்திருக்கிறது எதிர்காலம்.
- எழுத்தாளர் கி.ராஜநாராயணன், புதுவை.
அரசும் கல்வியும்
தமிழகக் கல்வித் துறையின் புதிய அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை. பதினோராம் வகுப்பிலும் பொதுத்தேர்வை நடத்துவது, பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வு முடிவையும் இணைத்து ஒருங்கிணைந்த சான்றிதழை வழங்குவது போன்ற முடிவுகள் பாராட்டுக்குரியவை. பள்ளிக் கல்வியின் பாடத்திட்டத்தைச் செழுமைப்படுத்தும் முடிவுக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கிறது. அதேவேளையில், பள்ளிகள் அனைத்தையும் தமிழக அரசே முழுப் பொறுப்பில் நடத்துவதே நாட்டின், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உகந்தது.
- ஒப்புரவாளன்,தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்.
மனநலமும் நகைச்சுவையும்!
மே 24-ல் வெளியான, ‘மக்களைச் சிறைப்படுத்தும் மன அழுத்தம்’ கட்டுரை பரபரப்பு மிகுந்த இக்காலத்துக்கு அரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளது. நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்திக்கொள்வதும், தினமும் யோகா / தியானம் மேற்கொள்வதும் மன அமைதிக்கு வழிவகுக்கும் எனக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பது பல ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. ஏனெனில், அவருக்கு எந்தவித மன அழுத்தமும் இல்லை. எனவே, மன அழுத்தத்தைக் குறைத்தால் எந்தவித வியாதியும் ஏற்படாது என்று தென்கச்சி கோ.சாமிநாதன் சொன்னது ஞாபகத்துக்கு வருகிறது. வாழ்க்கையில் அதீதமான கச்சிதத்தை எதிர்பார்த்தால் மன அழுத்தம்தான் மிஞ்சும். முழுவதும் சரியாக உள்ள எதுவும் உலகத்தில் இல்லை. கட்டுரையின் இறுதியில் தெரிவித்ததைப் போல் எல்லா மாவட்ட மருத்துவமனைகளிலும் மனநல மருத்துவர்களையும், மனநல ஆலோசகர்களையும் நியமிக்க வேண்டும். செய்யுமா அரசு?
- எம்.லோகநாதன், சிகரலப்பள்ளி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT