Published : 04 Jun 2016 11:31 AM
Last Updated : 04 Jun 2016 11:31 AM
தனியார் கல்லூரிகள் போட்டி போட்டுக்கொண்டு தம் கல்லூரியின் சிறப்பை நிலைநாட்டப் பயன்படுத்தும் ஒரு அதிஅற்புதக் கருவி வளாகத் தேர்வாகும். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு ஒருங்கிணைப்பாளர் இருப்பார். அவர் தனியார் நிறுவனங்களைத் தொடர்புகொண்டு, தங்கள் கல்லூரிக்கு வளாகத் தேர்வு நடத்தக் கெஞ்சி அழைப்பார்கள். பித்தலாட்டங்களும் முறைகேடுகளும் இருக்கும். படிப்பு முடிக்கும் முன்னரே எங்கள் கல்லூரியில் இத்தனை மாணவர்கள் பிரபலமான நிறுவனங்களில் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்று பெரிய விளம்பரங்களை வெளியிடுவார்கள்.
கல்லூரி மாணவர்களை ஈர்க்கப் பயன்படுத்தும் உக்தியே இது என்று அறியாது, இளம் மாணவர்கள் இந்த வலையில் விழுகின்றனர். படிப்பு முடிந்து மாதங்கள் பல ஆகியும் பணி நியமன ஆணை வராது. ஒருங்கிணைப்பாளரை அணுகினால் நீங்கள் நிறுவனத்தை அணுகுங்கள் என்று சொல்லித் தட்டிக்கழித்துவிடுவார். பணி நியமனம் கிடைக்கப்பெற்றோரில் பலரும் ஒராண்டிலேயே பணித் திறன் இல்லை என்று பணி நீக்கம் செய்யப்படுவார்கள். பல ஆண்டுகளாயினும் ஊதிய உயர்வே கொடுக்கப்படாத சூழ்நிலையும் உண்டு. நாட்டில் நிலவும் வேலையின்மையை நிறுவனங்கள் தங்கள் லாப நோக்குக்குப் பயன்படுத்திக்கொள்வார்கள்.
சமீபத்தில் இந்தியாவின் மிகப் பெரிய கட்டுமான நிறுவனம், வளாகத் தேர்வில் தேர்ந்தெடுத்தவர்களில் ஆயிரத்துக்கு மேற்பட்டோரைக் கழற்றிவிட்ட கொடுமையும் நிகழ்ந்துள்ளது. ஐ.ஐ.டி. போன்ற அரசு நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், தனியார் நிறுவனங்களோடு பேரம் பேசும் சக்தி படைத்தவர்களாக இருக்கின்றனர். அவர்கள் குறைந்த செலவில் மீத்திறன் மிக்க கல்வி பெறுவதே காரணம். வளாகத் தேர்வு என்ற மாயையினின்று மாணவர்களைக் காப்பாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது. இப்பொறுப்பினைத் தொழிற்கல்வி இயக்ககம் மேற்கொள்ள வேண்டும்.
- ச.சீ.இராஜகோபாலன், கல்வியாளர், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT