Published : 28 Apr 2017 10:01 AM
Last Updated : 28 Apr 2017 10:01 AM
வரலாறு காணாத வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகளுக்காக, மாநிலம் தழுவிய எதிர்க் கட்சிகளின் முழு அடைப்புப் போராட்டம் அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவோடு வெற்றிபெற்றது கவனத்துக்குரியது. தமிழகத்தில் பெரும் அரசியல் ஆளுமைகள் இல்லாத நிலையில், மத்திய அரசுக்குச் சரியானதொரு எதிர்ப்பு சமிக்ஞையைக் கொடுத்திருக்கிறது இப்போராட்டம். ஆட்சி, அதிகாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் பலவீனமாக உள்ள அதிமுகவை மத்தியில் ஆளும் பாஜக, தன் வசப்படுத்திக்கொள்ள நினைத்து, அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ள நிலையில், தமிழக மக்களின் இந்த மாநிலம் தழுவிய போராட்டம் அவர்களின் விஸ்வரூபத்தை மட்டுப்படுத்தும்.
விவசாயிகளின் போராட்டத்தை பொருட்படுத்தாத பிரதமர் நீதி ஆயோக் கூட்டத்தில், தமிழ் மற்றும் தமிழகம் குறித்து அவர் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது. எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட கடையடைப்புப் போராட்ட வெற்றியை, அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசென்று, மத்திய அரசுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும் வகையில், ஆளும் கட்சியோடு இணைந்து முழுமையான அனைத்துக் கட்சித் தலைவர்களும் மத்திய அரசை அணுகி அழுத்தம் கொடுத்தாலொழிய, விவசாயிகளின் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியாது.
- முருகன் கோவிந்தசாமி, புதுச்சேரி.
இரு அணிகளுக்கும் என்ன வித்தியாசம்?
எம்.சரவணன் எழுதிய, ‘சசிகலாவின் எழுச்சியும் வீழ்ச்சியும்’(ஏப். 27) கட்டுரை வாசித்தேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்திருந்தால், சசிகலாவின் நிலையும், தமிழகத்தின் நிலையும் வேறு மாதிரியாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ஓ.பன்னீர்செல்வம் அணியின் ‘தர்மயுத்தம்’ சசிகலா குடும்பத்தின் வீழ்ச்சிக்குக் காரணமாக இருந்தது உண்மைதான். ஆனால், சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தும் பன்னீர்செல்வம் அதற்கான காரணங்களை இன்னமும் வெளியிடாதது மர்மமாக இருக்கிறது. சசிகலா என்னென்ன தவறுகள் செய்தார், அவை ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் நடந்தவையா? சசிகலா அரசு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார் எனில், எப்போது பயன்படுத்தினார்? அதிகாரத்தில் இருந்தவர்களில் யாரெல்லாம் சசிகலாவுக்கு உதவியாக இருந்தனர் போன்ற எல்லாவற்றையும் பன்னீர்செல்வம் வெளிப்படுத்தியிருந்தால், அவரைப் பாராட்டலாம். அதுவரையில் அதிமுகவின் இரு அணிகளுமே ஒரே தரம்கொண்டவையாகவே மக்களால் பார்க்கப்படும்.
- வெற்றிப்பாண்டியன், சிவகங்கை.
மாற்றத்தை கம்யூனிஸ்ட்டுகள் புரிந்துகொள்ள வேண்டும்
உண்மையை ஒப்புக்கொள்ளாமல், வெறுப்பை மட்டுமே உமிழ்பவர்கள் மத்தியில், ‘மோடியின் காலத்தை உணர்தல்’ குறுந்தொடர் திறந்த மனதோடு சில விஷயங்களை விவாதிக்கிறது. நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும், ஏதாவது ஒரு குறிப்பிட்ட கட்சிகள் மட்டுமே தொடர்ந்து வென்று வருகின்றன. ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு தொண்டு நிறுவனமும் ஏதோ ஒரு கொள்கையினை முன்வைத்துத் துவங்கியதுதான். ஆனால், அதை யார் காலத்தின் தன்மை அறிந்து செயல்படுத்துகிறார்கள் என்பதுதான் முக்கியம். அதை இந்தத் தொடர் தெளிவுபடுத்துகிறது.
- கார்த்தி குமார், பரமக்குடி.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது மார்க்சிய தத்துவம். காலத்திற்கேற்ப மாறிக்கொண்டிருக்கும் மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்குத் தகுந்தபடி இடதுசாரிகள் தங்களது திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும். தற்போதைய அரசியலில் வெற்றி பெறுவதற்கு நல்ல நோக்கங்கள் மட்டும் போதாது. நடைமுறைச் சாத்தியமுள்ள செயல்திட்டங்களும் தேவை!
- ஆர்.குமரேசன், மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT