Published : 09 Feb 2017 10:18 AM
Last Updated : 09 Feb 2017 10:18 AM
நீதியரசர் கே.சந்துருவின் கட்டுரை, பொதுநுழைவுத் தேர்வு சரியானதே என்ற கருத்தை முன்வைக்கிறது. தமிழக மாணவர்களிடம் வகுப்புக்கேற்ற கற்றல் திறன் இல்லை என்பதையும், 12-ம் வகுப்பு விடைத்தாள்களை ஆய்வுசெய்தால், தேர்ச்சி விகிதம் 52%ஐத் தாண்டாது என்ற உண்மையையும் போட்டு உடைத்திருக்கிறார். அதேநேரத்தில், அந்தத் தேர்வுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதைவிட, நமது பள்ளிகளைத் தரம் உயர்த்தி, பாடத்திட்டத்தை மத்திய பாட வாரியத்துக்கு இணையாக மேம்படுத்தினால், தமிழக மாணவர்கள் ‘நீட்’ தேர்வை எதிர்கொள்ளும் சூழல் உருவாகும்.
தேர்வு என்பது மனப்பாடம் செய்தவற்றை எழுதிப்பார்க்கிற இடமாக இல்லாமல், கற்றுக்கொண்டதை வெளிப்படுத்துகிற இடமாக மாற வேண்டும். விடை திருத்தும் பணி என்பது மாணவர்களின் அறிவாற்றலை, கற்றல் திறனை ஆய்வுசெய்யும் இடமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். இதை நோக்கிச் செல்லுமாறு தமிழக அரசை நிர்ப்பந்திக்க வேண்டிய பொறுப்பு சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், அறிஞர் பெருமக்கள், நீதியரசர்களுக்கு உண்டு. இப்படியான ஒரு நல்ல சூழலை உருவாக்கிய பிறகு ‘நீட்’ தேர்வு வருவதில் நமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அதுவரையில் இந்தத் தேர்வு தேவையில்லை.
- க.துளசிதாசன், திருச்சி.
‘உயர்வு நவிற்சி’தூக்கல்!
‘என்னருமை தோழி’ தொடரில் (பிப்ரவரி 7), முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகழ்பாடுவதாக அமைவது இயல்பான ஒன்று. ஆனால், ‘பகுத்தறிவு பேசும் கட்சியில் முக்கியப் பிரமுகராக இருந்த எம்.ஜி.ஆரா இப்படி...’ என்ற வரிகள் தேவையற்ற சந்தேகங்களை எழுப்புகின்றன. அது உண்மைதானா என்று எதிர்வினையாற்ற, சம்பந்தப்பட்ட இருவருமே இல்லாத நிலையில், இதுபோன்ற விஷயங்கள் எழுப்பப்படுவது சரியல்ல. இந்த இடத்தில், ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். பகுத்தறிவு என்றாலே அது விதண்டாவாதம் என்பதும் பகுத்தறிவு பேசுபவர்களுக்குத் தனிநபர் நம்பிக்கைகள் எதுவுமே இருக்கக் கூடாது என்பது சரியான பார்வை அல்ல.
- வி.சந்திரமோகன், பெ.நா.பாளையம்.
தமிழில் தொழிற்கல்வி
மணவை முஸ்தபாவின் மறைவுக்கு ஆயிஷா நடராஜன் எழுதிய கட்டுரை ஆழமானதாக அமைந்திருந்தது. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பு களுக்குச் சரியான கலைச்சொற்களை ஆய்ந்தாய்ந்து, ஆயுளைச் செலவிட்டவர் மணவை. அறிவியல் கலைக்களஞ்சியங்களை உருவாக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சியைவிட, அவற்றை நூல்களாக வெளியிடுவதற்குப் பட்டபாடுகளே அதிகம். பொறியியல், மருத்துவம் போன்ற தொழிற்படிப்புகளை முழுமையாகத் தமிழில் நடைமுறைப்படுத்துவதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி. இதற்குத் தமிழக அரசும் முயற்சிக்க வேண்டும்.
- கோமல் தமிழமுதன், திருவாரூர்.
சுனாமியில் இஸ்லாமியர்கள்
பிப்ரவரி 7-ம் தேதி வெளியான, மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவின் நேர்காணல் நேர்த்தியாக உள்ளது. அதில் “இஸ்லாமியர் அல்லாத பிரச்சினைகளுக்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலுடன் கூடுதலாக ஒரு தகவல். ஆழிப்பேரலையில் சிக்கி மாண்டோரில் கிறித்தவர்களும் இந்துக்களும் அதிகம். கடல்நீரில் ஊறி.. ஊதிப் பெருத்து அழுகிய நிலையில் இருந்த உடல்களை எந்தவித அருவருப்புமின்றி அகற்றும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் மமகவின் ஒரு அங்கமான தமுமுக தொண்டர்களே. வேளாங்கண்ணி மற்றும் நாகையில் நேரில் அவர்கள் பணியைக் கண்டவன் என்ற முறையில் நெகிழ்வுடனும் நன்றியுடனும் இங்கே பதிவுசெய்கிறேன்.
- வெற்றிப்பேரொளி, சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT