Published : 06 Jan 2017 10:32 AM
Last Updated : 06 Jan 2017 10:32 AM

இப்படிக்கு இவர்கள்: பாதுகாப்பற்ற நிலை அவமானகரமானது

கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, சில சமூக விரோதிகள் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, சாலையில் தனியாகச் சென்ற பெண்ணைக் கடத்த முயற்சித்தது ஆகிய சம்பவங்களால், அங்கு பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை உள்ளதாகப் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். விழாக் காலங்களில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல், அவமானகரமானது. தேசியப் பெண்கள் உரிமை ஆணையம், வழக்குப் பதிவுசெய்ய தாமதப்படுத்திய காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் புகார் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சட்டப்படி பெண்களை இழிவுபடுத்தும் செயல்களில் முதல் தகவல் அறிக்கையைக் காவல்துறையே தாமாகவே முன்வந்து பதிவுசெய்யலாம். பெண்கள் அரை ஆடையுடன் வருவதே பிரச்சினைக்குக் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. இதுபோன்ற விழாக் காலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

- சி.பிரகாஷ், முத்தரசநல்லூர்.



கீழடியைக் காப்போம்

கீழடி ஆய்வுப் பணிகளை முழுமை பெறச் செய்யவும் அதில் வெளிக்கொணரப்படும் தொல்பொருட்களைப் பாதுகாத்து வைக்கவும் வேண்டி, தமிழ் மக்கள் குரல்கொடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது. தமிழரின் தொன்மையை உறுதிப்படுத்தும் இது போன்ற ஆய்வுகளுக்குத் தமிழக அரசும் தமிழகப் பல்கலைக்கழகங்களும் முழுமையாக உதவ வேண்டும். தேவைப்பட்டால், யுனெஸ்கோவின் உதவியை நாடலாம். வெறுமனே மேடை முழக்கங்களாலும் உணர்ச்சிமிகு கவிதை வரிகளாலும் தமிழினத்தின் சிறப்பினைச் சொல்லிவிட்டு, ‘தமிழ்ப் பணி’ ஆற்றும் பகட்டு பாணியைக் கைவிட்டு, உண்மையான தமிழ்ப் பணியாற்ற முன்வர வேண்டும்.

- வீரா பாலச்சந்திரன், திருச்சி.



ஜெயலலிதா தொடர்!

டி.வி.நசிம்மனின் ‘என்னருமை தோழி!’ தொடர் வித்தியாச அனுபவம் தருகிறது. அரசியலுக்கு வெளியே நின்று, அவர் ஜெயலலிதாவுடனான தனது நட்புறவை விளக்கி வியக்க வைக்கிறார். அதிமுக தலைவியாக ஆளுமை செலுத்தியவரை சாதாரணமானவராகக் காணும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்திருக்காது. அந்த நெகிழ்வான அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கு நன்றி!

- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.



ஊனம் ஒரு தடையல்ல

உலகெங்கிலும் உள்ள நான்கு கோடிப் பார்வையற்றவர்களின் கல்விக் கண்ணைத் திறந்து வைத்த லூயி பிரெய்லின் சாதனைச் சரிதத்தை ‘முத்துக்கள் பத்து’ பகுதியில் படித்தேன் (ஜன 4). தன் தந்தையின் தோல் தொழிற்கூடத்தில் தோல் தைக்கும் ஊசியை எடுத்து விளையாடிய மூன்று வயதுச் சிறுவனான பிரெய்ல், ஊசி கண்ணைக் குத்தியதால் பார்வை இழந்தான். தன்னை ஆட்டமிழக்கச் செய்வதற்காக வீசப்பட்ட பந்தையே திருப்பி அடித்து ரன் குவிப்பதைப் போல, எந்த ஊசியால் தன் பார்வையைப் பறிகொடுத்து படிக்க முடியாமல் போனதோ அதைப் போன்ற ஒரு ஊசியால் தாளில் விதவிதமாகக் குத்தித் துளையிட்டு, அந்த துளையின் மேடான அடையாளத்தைத் தொடுவதன் மூலம் படிக்க முடியும் என்று கண்டறிந்தார் பிரெய்ல். அப்போது அவருக்கு வயது 12 தான். சாதிக்க வயதும் ஊனமும் தடையல்ல என்பதை நிரூபித்தவர் அவர். 43 ஆண்டுகளே வாழ்ந்தாலும் உலகம் உள்ளளவும் அவரை மக்கள் நினைவுகூர்வர்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x