Published : 03 May 2017 10:25 AM
Last Updated : 03 May 2017 10:25 AM
ஏப்ரல் 27-ல் வெளியான, ‘மோடி உலகமயமாக்கலின் ஏக பிரதிநிதியானதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு என்ன?’ என்ற கட்டுரையில் ‘காலத்துக்கேற்ற மாற்றங்களுக்கும் சமரசங்களுக்கும் கம்யூனிஸ்ட்டுகள் முகம் கொடுத்திருந்தால், இந்திய பாணி கம்யூனிஸம் இன்று சர்வதேசத்துக்கான முன்னுதாரணங்களில் ஒன்றாக இருந்திருக்கும்.’.. ‘எளிய மக்களைப் பரிவுணர்வோடு அணுகும் கம்யூனிஸ்ட்டுகள் உலக மயமாக்கல் சட்டகத்துக்குள் வந்து, ஒரு சோஷலிச மாற்றை முன்வைத்திருந்தால், இந்தியாவில் உலகமயமாக்கலின் இன்றைய கோரங்களை எவ்வளவோ கட்டுப்படுத்தியிருக்க முடியும் என்றே கருதுகிறேன்’ என்ற கட்டுரையாளரின் கருத்து, இந்திய கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றிய சரியான மதிப்பீடாகும்.
தமிழகத்தில் முதன்முதலாகப் பொதுஉடமைக் கருத்துகள் அடங்கிய சிங்காரவேலரின் நூல்களை யாருமே அச்சிட முன் வராமல் அச்சப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில், துணிச்சலாக அந்நூல்களை அச்சிட்டு சிறைத் தண்டனையும் பெற்ற பெரியார் சொன்னதுதான் இங்கே நினைவுக்கு வருகிறது. ‘இந்தியாவில் கம்யூனிஸம் வளர்ந்துவிடாதபடி இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கவனமாகப் பார்த்துக்கொள்கிறார்கள்’.
- பொ. நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.
நிழற்படமாக ஓடிய எழுத்துகள்!
புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளரான புதுமைப்பித்தனின் முன்னோடிகளும் மூத்த இதழாளர்களுமான டி.எஸ்.சொக்கலிங்கம், டி.கே.சி, க.நா.சு. போன்றோர், அவருக்கு அன்பளிப்பாகக் கையொப்பமிட்டுத் தந்த புத்தகங்களைப் பற்றியும், அதேபோல் சொ.விருத்தாசலம் எனும் இயற்பெயர் கொண்ட புதுமைப்பித்தன் தனக்கே உரிய அங்கதச் சுவை, நையாண்டி நடையோடு எழுதிய கதைகளைப் பற்றியும், தன் வாழ்க்கைத் துணைவிக்கு எழுதிய கடிதங்களையும், நூல்களையும் பற்றி விளக்கிய கட்டுரையைப் படித்து மகிழ்ந்தேன்.
அவரது சிறுகதைகளைப் படித்து, அவரது எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு, அன்றைய காலத்தில் எழுத்தாளர்களானவர்களில் என் தந்தையார் கவிஞர். கு.மா.பா உள்பட பலரையும் கலை உலகமும் எழுத்துலகமும் நன்கறியும். தொடர்புப் பிரதிகளான நூல்கள் மூலமாக எழுத்தாளர்களுக்கிடையே இருந்த உறவு நூலிழையாகப் பின்னப்பட்ட வரலாற்றினை அறிந்திட முடிகிறது. மெல்ல வளர்ந்து, நாலு காசு சம்பாதிக்கும் தருணத்தில், காச நோயால் அவர் இறந்தது வரையிலான நிகழ்வுகளை நிழற்படமாக ஓடவைத்த கட்டுரையைப் படித்தபோது, விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் உரிய ஒரு எழுத்தாளர் தூவிய விதைகள், இன்று எண்ணற்ற விருட்சங்களாக வளர்ந்து நிற்பதை எண்ணி, மனம் பெருமை கொள்கிறது.
- கு.மா.பா.கபிலன், சென்னை.
என்ன அநியாயம்?
இந்தியாவின் 53 சதவீத சொத்துகள் 1 சதவீத பணக்காரர்கள் வசம் என்ற ஐ.நா. அறிக்கையைப் படித்ததும் மனம் பொங்கிற்று. சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் ‘இருப்பது எல்லாம் சிலருக்கே’ என்ற நிலை மிகவும் வருந்தத்தக்கது. 1% பேரிடம் இருக்கும் சொத்துகள் நாளுக்கு நாள் அதிகமாகி, என்றாவது ஒருநாள் இந்தியா முழுதும் இவர்கள் வசம் என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆள்பவர்கள் இனியாவது இந்தியாவின் இறையாண்மையையும், இந்தியாவின் வளத்தையும் இந்திய மக்களின் நலனையும் காப்பதுபோல் நடவடிக்கை எடுக்கக் கூடாதா? ‘அரசன் என்பவன் மக்களின் பிரதிநிதி. மக்களையும் நாட்டையும் காப்பதுதான் அவன் கடமை’ என்று பால பாடம் படித்த தலைவர்கள், பொறுப்புக்கு வந்ததும் அதை மறக்காமல், எல்லாருக்கும் எல்லா வளமும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT