Published : 13 Jun 2016 10:34 AM
Last Updated : 13 Jun 2016 10:34 AM
மருதனின் 'வாசிப்பின் அரசியல்' கட்டுரை அதிகம் பேசப்படாத ஒரு விவாதப் பொருள் மீது வளமான உரையாடல்களை உருவாக்கித் தந்துள்ளது. முரண்பட்ட கருத்துகளைக் கொண்டிருந்ததையும் மீறி பரஸ்பர நட்பு பாராட்டிய தலைவர்கள் பலர் வாழ்ந்த நாடு இது. தொழிற்சங்கத் தலைவர் வி.பி.சிந்தனின் புத்தக அலமாரியில் பகவத் கீதை உள்ளிட்ட நூல்கள் இருந்ததை, அவரது நேர்காணலை வெளியிடுகையில் ஒரு வார இதழ் வியப்போடு பேசியது. குஜராத் மாநிலத்தில் மத வெறியர்களால் சூறையாடப்பட்ட ஓர் இஸ்லாமிய அறிஞர் இல்லத்தில் ராமாயண, மகாபாரத நூல்களும் உள்ளடக்கியதாகவே இருந்த அவரது வாசிப்பு குறித்த செய்தி வியப்பளிக்கிறது.
தினமணி நாளேட்டின் ஆசிரியராக இருந்த ஏ.என்.சிவராமன், குர்ஆன் உள்ளிட்ட இஸ்லாமிய நூல்களை நேரடியாக வாசித்துணரத் தமது முதுமையைப் பொருட்படுத்தாது அரபு மொழியைக் கற்றுக்கொண்டிருந்ததாக அவரது மறைவுச் செய்திக் கட்டுரை ஒன்றில் வாசித்தேன். பொதுவுடைமை இயக்கத்தின் அற்புதச் சொற்பொழிவாளர் ஜீவானந்தம் கம்ப ராமாயணத்தின் இலக்கிய நயத்தை மாநிலம் முழுக்க விதந்தோதியவர். வெறுப்பற்ற கருத்துப் பரிமாற்றங்கள், ஆக்கபூர்வமான சுதந்திரத் தேடல், உயிர்களிடத்து அன்பு, உள்ளம் திறந்த உரையாடல்கள் நிறைந்த ஒரு சமூகப் பண்பாட்டு வெளியை உருவாக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கிறது.
- எஸ்.வி.வேணுகோபாலன்,சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT