Published : 07 Feb 2017 10:25 AM
Last Updated : 07 Feb 2017 10:25 AM

இப்படிக்கு இவர்கள்: சசிகலாவுக்கும் மன்னார்குடிக்கும் என்ன சம்பந்தம்?

சசிகலா தொடர்பான ‘தஞ்சை மாவட்டத்தின் 2-வது முதல்வர்’ என்ற செய்தியில் (5.2.17) மன்னார்குடியைச் சேர்ந்தவர் சசிகலா என்று குறிப்பிட்டிருகிறீர்கள். அதே பக்கத்தில் வெளியாகியிருக்கிற, ‘திருத்துறைப்பூண்டி முதல் புனித ஜார்ஜ் கோட்டை வரை’ செய்தியில் உள்ளபடி சசிகலா பிறந்த ஊர் திருத்துறைப்பூண்டி. அவர் திருமண வாழ்க்கைப்பட்ட நடராஜனின் சொந்த ஊர் தஞ்சாவூர் பக்கத்திலுள்ள விளார்.

பின்னாளில் இருவரும் சேர்ந்த இடம் சென்னை. இதில் மன்னார்குடி எங்கே வருகிறது? சசிகலாவின் ஒரு சகோதரர் திவாகரன். அவர் மன்னார்குடியில் வசிப்பதாலேயே சசிகலா மன்னார்குடியைச் சேர்ந்தவர் என்று எழுதலாமா? அப்படிப் பார்த்தால், சசிகலா உடன்பிறந்த ஐந்து பேர் குடும்பங்களில் பெரும்பான்மையோர் செட்டில் ஆன இடம் தஞ்சாவூரும், சென்னையும். ஏதோ ஒரு காலத்தில், ஏதோ ஒரு பத்திரிகை ரைமிங்குக்காக ‘மன்னார்குடி மாஃபியா’ என்று எழுத.. இன்றைக்கும் எல்லோரும் சசிகலா மன்னார்குடி குடும்பம் என்று எழுதுவதும், பேசுவதும் நியாயம் அல்ல!

- எஸ்.ராஜகோபாலன், மன்னார்குடி.



முன்னரே சொன்னது ‘தி இந்து’!

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சோனியா பிரச்சாரம் செய்ய மாட்டார் என்று முன்னரே ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டது. “உடலநலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாகப் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்பதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தவிர்த்துவருகிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடந்தபோதும், பெரும்பாலான நாட்கள் அவர் அவைக்குச் செல்லவில்லை. அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேசம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்காக நடத்தப்படும் எந்தவொரு பொதுக்கூட்டத்திலும், பிரச்சாரத்திலும் கலந்துகொள்ளப் போவதில்லை” என்று அந்தச் செய்தியில் குறிப்பிட்டவாறே இன்று நடந்துவிட்டது.

- எஸ்.விஸ்வநாதன், திண்டுக்கல்.



இளையோர் குரல்

வெறும் செய்தி இதழாக மட்டுமல்லாமல், சமூகத்தை ஆக்கபூர்வமாக விமர்சனம் செய்யும் திறனாய்வுப் பணியையும் சேர்த்துச் செய்யும் சமூகப் பொறுப்புள்ள நாளிதழாக ‘தி இந்து’ திகழ்வதில் மகிழ்ச்சி. ஆயிரமாயிரம் இளைய சிந்தனையாளர்கள் ஆங்காங்கே இணையப் பக்கங்களில் வெகு சுதந்திரமாக எழுதிவரும் சூழலில், அவர்களின் நிமிடக் கட்டுரைகளை வெளியிட வாய்ப்பளித்துள்ளது பாராட்டுக்குரியது. வழக்கமான எழுத்துகளைத் தாண்டி, இளையோரின் புதிய குரல்களை, சமகால நிகழ்வுகளைத் திரிக்காமல் இயல்பான பார்வையில் எழுதப்படும் இளையோரின் கட்டுரைகளை எதிர்நோக்குகிறோம். குறிப்பாக கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களின் எழுத்துகளுக்கு அதிகம் வாய்ப்பளிக்க வேண்டும்.

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.



மாண்பை உணர்வோம்

பல வருடங்களுக்கு முன் தடுப்பூசி அறிமுகப்படுத்திய காலங்களில், தடுப்பூசி போட்டால் வலியும் காய்ச்சலும் வரும் என்று மக்கள் பயந்து ஒளிந்த நிலை இருந்தது. தடுப்பூசி போட வரும் மருத்துவர்களை விரட்டி அடித்ததும் நடந்ததாகக் கூறுவர். ஆனால் இந்த அறிவியல் உலகிலும், ரூபெல்லா தடுப்பூசி குறித்து தவறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்புவது, நம் வருங்காலச் சந்ததியினரை நாமே அழிப்பதுபோல் உள்ளது. மருத்துவத் தொழில்நுட்பத்தின் மாண்பை நாம் உணர்ந்து ஒத்துழைக்க வேண்டுமேயன்றி, துவேஷம் செய்யக் கூடாது.

- எம்.விக்னேஷ், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x