Published : 24 May 2017 10:50 AM
Last Updated : 24 May 2017 10:50 AM

இப்படிக்கு இவர்கள்: வலைப்பூவில் எழுதுவோம்!

மே 21-ல் வெளியான, ‘வலைப்பூ எனும் இணைய சிலேட்டு’ தலையங்கம் நியாயமான கவலையை முன்வைத்தது. முகநூலும் டுவிட்டரும் வந்த பின்னர் வலைப்பூவில் எழுதும் பதிவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனது. வலைப்பூ, இணையப் பதிவர்களுக்கு எழுதிப் பழகும் சிலேட்டாகத் திகழ்கிறது. நாம் எழுதிய எழுத்துகளை மிக நேர்த்தியாக ஆவணப்படுத்தும் களமாகவும் திகழ்கிறது. உரிய குறிச்சொற்களோடு நாம் வலைப்பூக்களில் சேமித்துவைக்கும் நம் கட்டுரைகளைத் தேடுபொறிகள் உரியவர்களுக்கு எடுத்துத் தந்துவிடுவதால், நமக்கான எழுத்தறிமுக அட்டையாகவும் விளங்குகிறது.

காலவரிசையில் இணையம் நம் படைப்புகளைச் சேமித்து வைத்திருப்பதால், அவற்றைத் தொகுப்பதும் நூலாக மாற்றுவதும் வெகுஎளிதாக அமைகிறது. நமக்குப் பிடித்த வலைப்பதிவுகளை நம் கவனத்துக்குக் கொண்டுவந்து வாசிக்கத் தூண்டுகிறது. நம்முடைய இணையப்பதிவு உலகளாவிய அளவில் இன்று எத்தனை மக்களால் வாசிக்கப்பட்டது என்று தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. வலைப்பூக்களில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களில் பலர், உடனே கிடைக்கும் வாசகர்களின் எதிர்வினைக்காக முகநூலில் அதிக கவனம் செலுத்திவருகின்றனர். ஆனால், தொடர்ந்து வலைப்பூக்களிலும் அவர்கள் எழுத வேண்டும்.

- பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.



கிரிக்கெட்டும் விக்கெட்டும்

ஐ.பி.எல். போட்டி நிறைவடைந்திருக்கிறது. மும்பை அணி 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்தது. புனே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்துத் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளும் முழுமையாக 20 ஓவர்கள் விளையாடியுள்ளனர். புனே அணியின் பெளலர்கள் எட்டு விக்கெட்டுகள் எடுக்க, மும்பை அணி பெளலர்கள் 6 விக்கெட்டுகளையே வீழ்த்தினர். ஆனால், வென்றது வேறு. எனவே, பெளலர்களது திறனை அங்கீகரிக்காது, போட்டி முடிவுகள் ரன்கள் அடிப்படையிலேயே உள்ள விதி மாற்றப்பட வேண்டும். மழையால் தடைபடும் ஆட்டங்களிலும் டி/எல் முறையில் ரன்களே முன்னிறுத்தப்படுகின்றன. மட்டை வீரர்களைவிடப் பந்து வீச்சாளர்கள் பங்கு பலமுறையும் சிறப்பாக இருக்கும்.

- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.



நினைவூட்டல்!

‘காலத்தின் வாசனை'யில் (மே.21) தஞ்சாவூர்க் கவிராயர் நினைவூட்டிய போதுதான் வானத்தைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. மண் பானை நீர் போய் குளிர்சாதன நீர்க்குவளை கிடைத்த நாள்தான் கடைசியாக வானம் பார்த்தது. பேய் மழையும் வார்தா புயலும்கூட வானம் பார்க்க நிர்ப்பந்திக்கவில்லை. பால்ய காலத்தில் களங்கமற்ற வானத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்!

- எஸ்.மைக்கேல் ஜீவநேசன், சென்னை.



பாராட்டாவிட்டாலும் குறை கூறாதீர்கள்!

தமிழகம் முழுவதும் வறட்சி தாண்டவமாடுகிறது. இயற்கை பொய்த்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து வர வேண்டிய தண்ணீர் வந்து சேராததாலும், நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீரும் குறைந்துகொண்டே வருகிறது. இச்சூழலில் தமிழக அரசை எதிர்பார்க்காமல், திமுகவினர் தமிழகம் முழுவதும் சில நீர்நிலைகளைத் தூர்வாரும் பணியைச் செய்கிறார்கள். கரூரில் பெருமழை பெய்ததால் இவ்வாறு தூர்வாரிய ஏரியில் நீர் நிரம்பி மக்களின் மனதைக் குளிர வைத்துள்ளது.

இதனைப் பாராட்ட மனமில்லாவிட்டாலும், கொச்சைப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபடக் கூடாது. முடிந்தால் தாங்களும் நீர்நிலைகளைத் தூர்வாரலாம். அல்லது அண்டை மாநிலங்களிடமிருந்து உரிய தண்ணீர் உரிமையைப் பெற்றுத்தர மத்திய அரசிடம் வலியுறுத்தலாம். எந்த அரசியலாக இருந்தாலும், அது தமிழக மக்களுக்குப் பயன்படுவதாக இருக்க வேண்டுமே தவிர, நடக்கிற நல்லதையும் நிறுத்துகிற போக்கு கூடாது.

- அ.அப்பர்சுந்தரம், மயிலாடுதுறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x