Published : 02 Mar 2017 10:34 AM
Last Updated : 02 Mar 2017 10:34 AM

இப்படிக்கு இவர்கள்: ஒரு விபத்து எண்ணூர் துறைமுக மதிப்பைக் குறைத்துவிடாது!

நாங்கள் மிகவும் மதிக்கின்ற நாளிதழ் ‘தி இந்து’ தமிழ் நாளிதழ். அதில் பிப்.24 அன்று வெளியான ‘எண்ணூர் துறைமுகச் சீர்கேட்டை இனியாவது பேசுவோமா?’ எனும் கட்டுரை மிகுந்த வருத்தம் அளித்தது. மிகச் சிறப்பாக செயல்பட்டுவரும் எண்ணூர் துறைமுகம் கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்திய அரசிடமிருந்து சிறப்பான சேவை விருதைப் பெற்றதாகும். இரண்டு முறை ஆண்டின் ‘மிகச் சிறந்த பெரும் துறைமுகம்’ என்ற விருதையும் அது பெற்றுள்ளது.

மிகக் குறுகிய காலத்துக்குள்ளாகவே இந்தத் துறைமுகத்தின் கொள்ளளவு ஆண்டுக்கு 30 மில்லியன் டன்கள் என்பதிலிருந்து ஆண்டுக்கு 100 மில்லியன் டன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. துறைமுக நுழைவாயிலில் இரு கப்பல்கள் மோதி எண்ணெய்க் கசிவுக்கு வழிவகுத்த விபத்து மிகவும் அரிதானதொரு விபத்தாகும். இந்த ஒரு நிகழ்வை வைத்தே எண்ணூர் துறைமுகத்தின் செயல்பாட்டை ஒட்டுமொத்தமாகக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

- எம்.ஏ.பாஸ்கராச்சார், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், காமராஜ் துறைமுக நிறுவனம்.



தொடரட்டும் பணி

உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் ‘தி இந்து’வில் ‘உள்ளாட்சி - உங்கள் உள்ளங்களின் ஆட்சி’ தொடர் மீண்டும் வருவது மகிழ்ச்சி. தகுதியுள்ள நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் எந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் நல்லவர்கள் கைகளில் உள்ளாட்சி அதிகாரம் வரவேண்டும். அப்பொழுதுதான் காலப்போக்கில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் மாற்றம் வரும். நல்லவர்கள் தனித்தனியாக இயங்குவதால் எவ்விதப் பிரயோசனமும் இல்லை. அவர்கள் குழுவாக இயங்கும்போதுதான் மாற்றங்கள் நிகழும். அத்தகைய மாற்றத்திற்கு வித்திடும் தொடரை எழுதும் டி.எல்.சஞ்சீவிகுமாருக்கு வாழ்த்துகள்.

-ஜீவன்.பி.கே., கும்பகோணம்.



கரகாட்டத்தைக் காப்போம்!

எஸ்.மலைச்சாமி எழுதிய, ‘கரகாட்டம் பாதுகாக்கப்படுவது யார் கையில் உள்ளது?’ (பிப்.28) கட்டுரை வாசித்தேன். ஒரு காலத்தில் சக்தியின் வடிவமாகப் பார்க்கப்பட்ட கரகாட்டம், இன்று திரைப்படத் துறையின் கடுமையான போட்டியினை எதிர்கொள்வதற்காக ஆபாசக் கூத்தாகிவிட்டது. ஆபாசத்துடனும் ஆடைக்குறைவுடனும்தான் ஆடுவேன் என்று எந்த கரகப்பெண்மணியும் அடம்பிடிப்பதில்லை என்றாலும், எல்லை மீறாமல் இருப்பதை கலைஞர்கள் உறுதி செய்ய வேண்டும். பார்வையாளர்களும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும். அரசுத் தரப்பிலும் போதுமான உதவிகள் வழங்குவதோடு, தகுதியான கலைஞர்களைக் கொண்டு நிறைய இளைஞர்களுக்கு இக்கலையைப் பயிற்றுவிக்கவும் வேண்டும். அதுதான் இக்கலையைக் காப்பாற்றும்.

-பழ.அசோக்குமார், புதுக்கோட்டை.



பேரதிர்ச்சி!

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயலலிதாவின் படங்களை அரசு அலுவலகங்களில் வைப்பதை நியாயப்படுத்தும் வகையில், ‘காந்தியையும், சுபாஷ் சந்திர போஸையும் அன்றைய பிரிட்டிஷ் அரசு தண்டித்து சிறையில் அடைக்கவில்லையா?’ என்று பேசியிருக்கிறார். அப்பேச்சைக் கண்டிக்கும் விதமாக பிப்.23 ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் ‘அட அறிவுக்கொழுந்தே’ என்று கேலி செய்யப்பட்டிருந்தது.

இதன் பின்னர், குற்றவாளி என்று தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படம், பெயர் அரசு திட்டங்களுக்கும் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவர், “மகாத்மா காந்தியடிகள் கூட தண்டனை பெற்றவர் தானே?” என்று கேள்வியெழுப்பியதாகப் பத்திரிகைகளில் படித்தேன். அமைச்சரின் பேச்சை ஊழலுக்கு எதிரானவர்களும், தேச பக்தர்களும் கண்டிக்காமல் விட்டதன் விளைவு மற்றவர்களும் அதைப்போன்ற கருத்தைப் பதிவு செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

-க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x