Published : 19 Jul 2016 12:56 PM
Last Updated : 19 Jul 2016 12:56 PM

காவல் மட்டும் போதுமா?

அரசினர் கூர்நோக்கு இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பிச் சென்ற நிகழ்வு பெரும் விவாதமாகியிருக்கிறது. நடந்த நிகழ்வுக்கு யாரைக் குற்றம் சாட்டுவது என்ற மனப்போக்கை விட்டுவிட்டு, ஆக்கபூர்வமாக ஆராய்வது மட்டுமே நல்ல தீர்வைத் தரும்.

சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டு வழக்குகளை எதிர்கொள்ளும் சிறுவர்களைப் பராமரித்திடவும், அவர்களை நல்வழி நோக்கி நகர்த்தவுமே ஏற்படுத்தப்பட்டது இவ்வகை கூர்நோக்கு இல்லங்கள்.

சமூகத்துக்கு ஏற்றவர்களாக மாற்றப்பட வேண்டிய சிறுவர்களை, அந்நிகழ்வு நோக்கி அவர்கள் நகர்வதற்கான செயல்திட்டங்கள் எதையும் செய்யாது, நான்கு சுவர்களுக்குள் அடைத்துவைத்து உணவளிப்பதால் மட்டும் எத்தகைய மாற்றங்களை அவர்களிடம் காண இயலும். தங்களைத் தாங்களே தாக்கிக்கொள்ளத் தயாரான சிறுவர்களால், கொடூரத் தாக்குதலுக்குப் பணியாளர்கள் உள்ளான பல சம்பவங்களை இதே இல்லம் கண்டுள்ளது.

இவர்களைச் சட்டப் புத்தகங்களின் வழியே மட்டும் மாற்றிவிட முடியாது. மாறாக அரசு, குடும்பம், பள்ளிகள் மற்றும் சமூகம் என அத்தனை பேரின் ஒருங்கிணைந்த முயற்சி மாற்றத்துக்கு வழிவகுக்கலாம். இனியும் தாமதித்தால், தங்களையே ஆயுதங்களால் தாக்கிக்கொண்ட பிள்ளைகள், நாளை இந்தச் சமூகத்தை நோக்கித் தன்னுடைய ஆயுதங்களைத் திருப்பும் அபாயம் இருப்பதை நாம் உணரத் தவறக்கூடாது.

- வளவன்.வ.சி, சென்னை.

*

மக்கள் சேவகர்கள்

தமிழகத்தில் காவல் துறையின் வெறியாட்டத்தைத் தெளிவாக விளக்கியது, 'காவல் துறையின் வெறியை எப்படித் தணிக்கப்போகிறோம்?' தலையங்கம்.

காவல் துறையின் இந்தப் போக்குக்குக் காரணம், காவல் துறையைச் செல்லப் பிள்ளைபோல அரசு நடத்துவதே. மூன்று, நான்கு தனித் தனித் துறையிடம் இருக்க வேண்டிய அதிகாரம் மொத்தமாக காவல் துறை வசம் குவிக்கப்பட்டுள்ளது.

காவல் துறையின் அதிகாரத்தைக் குறைத்து, அவர்களை மக்கள் சேவகர்களாக்குவது மட்டுமே காலத்தின் தேவை. இல்லையேல், இந்த நாட்டில் மனித உரிமை என்பது அர்த்தமற்ற வார்த்தையாகிவிடும்.

- டி.வி.பாலசுப்ரமணியம், நாகர்கோவில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x