Published : 03 Jan 2017 10:21 AM
Last Updated : 03 Jan 2017 10:21 AM

இப்படிக்கு இவர்கள்: நம்பிக்கை தரும் நீதி

‘வெள்ளைக்காரன் நாயைச் சுடுவதென்றால்கூடச் சட்டம் போட்டுத்தான் சுடுவான்’ என்பார்கள். ஆனால், உலகிலேயே மிகப் பெரிய அரசியல் சாசனத்தைக் கொண்ட இந்தியாவில், ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’, ‘சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம்’ என்பதெல்லாம் பொய்யான வாசகங்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், ஆளுநர், முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி - இப்படி அரசியல் சாசனத்துக்கு உட்பட்டவர்கள்கூட ஜெயலலிதாவை மருத்துவமனையில் பார்க்க முடியாதவாறு, அரசியல் சாசனத்துக்கு உட்படாத ஒரு கூட்டம் தடுத்ததை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஜெயலலிதாவை தமிழக முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தவர் ஆளுநரா… இல்லை சசிகலாவா? ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி வைத்தியநாதன் எழுப்பிய கேள்விகள் (டிச.29) நம்பிக்கை தருகின்றன.

- சி.பிரகாஷ், முத்தரசநல்லூர்.



‘பேனா’ அப்புசுவாமி

டிச.31ல் வெளியான ‘முத்துக்கள் பத்து’ பகுதியில் பெ.நா.அப்புசுவாமி பற்றிய அரிய தகவல்களைப் படித்தேன். அறிவியல் தமிழின் முன்னோடி என்று அவரை மிகச் சரியாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். அறிவியலை மட்டுமல்ல, சட்டமும் பயின்றவராக இருந்ததால் அறிவியல் நுணுக்கங்களை ஆழ்ந்து அறிந்து அவற்றை எளிய தமிழில் எழுதியவர். அவரது அறிவியல் கட்டுரைகள் நாளிதழ் ஒன்றில் தொடர்ந்து இடம்பெற்று, எண்ணற்ற இளம் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. இவரது கையில் பேனா நடம்புரிந்த காரணத்தால், இவர் செல்லமாக 'பேனா' அப்புசுவாமி என்று அழைக்கப்பட்டார். இவரது மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் மூலநூல் என்றே கருதும் அளவுக்கு எளிமையாகவும் பழகு தமிழிலும் இருக்கும்.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.



இதுதான் அரசு நிர்வாகமா?

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிர்வாகச் சீர்கேட்டையும், அதன் விளைவாக தமிழக அரசு சிறப்புச் சட்டத்தை நிறைவேற்றி பல்கலைக் கழக நிர்வாகத்தை எடுத்துக் கொண்டதையும் அறிவோம். இதன்மூலம் பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரும் அரசு ஊழியர்கள் ஆனார்கள். ஆனால், சில மாதங்களாக நிர்வாகம் ஊழியர்களுக்குச் சரியான தேதியில் சம்பளம் தருவதில்லை. சென்ற மாதம்கூட மிகுந்த போராட்டத்துக்குப் பின்னரே சம்பளம் கிடைத்தது. இம்மாதமும் ஊழியர்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கின்றனர். இதனால், ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர். எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

- த.தினேஷ், கடலூர்.



நவரச நாயகன்

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பி. பாட ஆரம்பித்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற விழா தொடர்பான செய்தியை (டிச.31) வாசித்தேன். எஸ்.பி.பி. பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர். தனது குரலின் மூலம் நவரசத்தை வெளிப்படுத்தவும், கேட்போரை அழ வைக்கவும், சிரிக்க வைக்கவும், கிறங்க வைக்கவும் இயலும். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்றாலும், தமிழை நன்கு கற்று அதன் வல்லின, மெல்லின, இடையின எழுத்தினை அட்சர சுத்தமாக உச்சரிக்கும் வல்லமை பெற்றவர். அதனாலேயே பத்ம விருதுகள் உட்பட அநேக விருதுகளையும் பட்டங்களையும் பெற்றவர். விழாவில், சக பின்னணிப் பாடகரான ஜேசுதாஸுக்குத் தம்பதி சமேதராகப் பாதபூஜை செய்தது நெகிழ வைத்தது.

- கல்கிதாசன், எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x