Published : 22 Sep 2016 07:10 PM
Last Updated : 22 Sep 2016 07:10 PM
சுவாதியில் ஆரம்பித்து தொடர்ச்சியாக நிகழும் பெண் கொலைகள் கவலை தருகின்றன. ஆணின் ஒருதலைக் காதலால், பலியாவது பெண்கள். என்ன கொடுமை இது? பெண்களுக்கு தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை இல்லை; தனக்கு விருப்பம் இல்லாததை நிராகரிக்கவும் உரிமை இல்லை.
ஆனால், விரும்பியதை அடைந்தே தீர வேண்டும்; இல்லையென்றால், அதை அழித்துவிட வேண்டும் என்கிற கொடூரமான ஆண்களின் மனநிலை, பெண்களுக்கு மேலும் மேலும் பேராபத்தைத் தருகிறது. இப்படி, இன்னும் எத்தனை காலம்தான் ஆண்கள் செய்யும் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு இருப்பது என்று தெரியவில்லை. பெரும் போராட்டங்கள் நடத்தியும் பயனில்லை. கடுமையான சட்டங்கள் இருந்தும் பயனில்லை. என்ன செய்தால் திருந்துவீர்கள் ஆண்களே?
- ச.நி.தாரணி தேவி, தர்மபுரி.
*
மது விருந்துகளும் விபத்துகளும்
'அசுர வேகத்தில் ஆட்டோ ஸ்டாண்டில் புகுந்த சொகுசு கார்; ஒருவர் பலி'- செய்தி வாசித்தேன். மது அருந்திய காரோட்டிகளால் நிகழ்த்தப்படும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 'போதையில் வாகனம் ஓட்டுபவர்கள், மனித வெடிகுண்டுகளுக்குச் சமம்' என்று உச்ச நீதிமன்றமே சொல்லியிருக்கிறது.
ஆனால், நடவடிக்கையில்லை. குடித்தவர்களை வீட்டுக்குக் கொண்டுவிடும் பொறுப்பை மது விருந்து ஏற்பாட்டாளர்கள் அல்லது அந்த ஹோட்டல்கள் ஏற்க வேண்டும். இல்லை என்றால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீதும் நடவடிக்கை பாயும் என்று காவல் துறை எச்சரித்தால்தான், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கலாம்.
- கணபதி சுப்பையா, 'தி இந்து' இணையதளம் வழியாக.
*
அறிவான அலசல்
'அண்ணா ஒரு நாள் இந்தியாவுக் குத் தேவைப்படுவார்' கட்டுரை படித்தேன். அழகான, அறிவார்த்தமான அலசல். அவர் இந்தியாவுக்குத் தேவைப்படுகிறார் என்பது, மக்களுக் கான அவருடைய தேவை இன்னும் குறைபாடுகளோடு இருப்பதையே உணர்த்துகிறது. தி.க.வைவிட்டு வெளியேறிய பின்பும், இயக்கத்தின் 'தலைவர் பெரியாரே' என்று அறிவித்த பண்பு, இன்றைய அரசியல்வாதிகள் கற்க வேண்டிய பாடம்.
'எங்களுக்கு இயக்கமும் வேட்டியும் கொள்கை யைப் போன்றது, பதவியோ தோளில் போட்டுக்கொள்ளும் துண்டு போன்றது. துண்டைக் காப்பாற்ற வேட்டியை இழக்க உடன்பட மாட்டோம்' என்றார். அவர் பெயரைச் சொல்லி அரசாள வந்தவர்கள், வேட்டி - துண்டு இரண்டையும் இழந்துவிட்டார்கள் என்பதுதான் வேதனை!
- மு.சுப்பையா, தூத்துக்குடி.
*
வளர்ச்சிக்கு அடித்தளம்
அரவிந்தனின் 'எழுவாயை எங்கே வைப்பது?' ஒரு சிறப்பான அலசல். தமிழ் மொழியின் சிறப்பு, அதன் இலக்கண அமைப்பு மற்றும் ஒரு சொற்றொடரில் எழுவாய் எப்படி, எங்கே அமைப்பது என்பது குறித்து அரவிந்தன் சிறப்பாக எழுதியிருந்தார்.
மொழிகள் அனைத்திலும் இத்தகைய குழப்பங்கள் இன்றும் நிலவுகின்றன. இதைப் படிப்போர் தெளிவடையலாம். 'தி இந்து' சிறப்பாக இத்தகைய கட்டுரைகளை வெளியிடுவது, செம்மொழித் தமிழின் வளர்ச்சிக்கு அடிகோலுவதாக அமையும்.
- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT