Published : 19 Aug 2016 06:28 PM
Last Updated : 19 Aug 2016 06:28 PM
சரியான நேரத்தில் 'தி இந்து' தமிழ் நாளிதழில் 'நம் கல்வி… நம் உரிமை!' தொடர் வெளியாகியிருக்கிறது. 'ஆயிஷா' புத்தகத்தின் மூலம் தமிழகத்தின் கல்விச் சூழலில் சலனத்தை ஏற்படுத்தியவர் இரா.நடராஜன். அவரது கட்டுரையோடு விவாதங்கள் தொடங்கியிருப்பது பொருத்தமானது.
இதுவரையில் ஏற்பட்டுள்ள பெரும்பாலான கல்வி சார்ந்த மாற்றங்கள், கல்விக் கொள்கைகளின் தாக்கங்களே என்பது பெரும்பாலான ஆசிரியர்களுக்கே புரிவதில்லை. நம் பெற்றோர்கள் படித்தது பி.யூ.சி. நாம் ஏன் அந்தப் பி.யூ.சி படிக்கவில்லை எனக் கேட்டால், எம்ஜிஆர் அதை மாற்றிவிட்டார் என்று தட்டையாகப் பதில் தருவார்கள். அது கோத்தாரி கல்விக் கொள்கையின் பரிந்துரை என்பது பலருக்குத் தெரியாது.
புதிய கல்விக் கொள்கை என்று அறிவிக்கப்பட்டுள்ளதில் இரண்டு வார்த்தைகள் உறுத்துகின்றன. ஒன்று, சலித்தெடுத்தல். இரண்டாவது, வேலைவாய்ப்புத் திறன் குறைவு. 'எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி'என்கிறபோதே நம்மால் 100-க்கு 76 குழந்தைகளைத்தான் 8-ம் வகுப்பு வரை படிப்பில் நீடிக்க வைக்க முடிகிறது. சலித்தெடுத்தால் என்னாகும்? தெருக்களிலும் பாலங்களின் அடியிலும் ரயில் பாதைகளிலும் பணியிடங்களிலும் இன்னும் அதிகமான குழந்தைகள் துன்புறுவதுதான் நடக்கும்.
- வி.வெங்கட், கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு, தேனி.
*
மாணவரை மையமாக வைத்துத் தயாரித்தால்தான் எந்தக் கல்விக் கொள்கையும் வெற்றி பெறும். இல்லையேல், ஆண்டுக்கு ஒரு கொள்கை வரும்... தோற்கும்.
மத்திய அரசை ஆயிரம் குறைகள் சொல்லலாம். ஆனால், மத்திய அரசுப் பள்ளிகளைப் பாருங்கள். தூய்மை யான வகுப்பறைகள், திறமையான ஆசிரியர்கள், தரமான பாடத்திட்டம், இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் தேர்வுகள், ஆசிரியர்களுக்குப் பயிற்சி என்று கலக்குகின்றன. அந்தப் பள்ளிகளின் சுகாதாரமான கழிப்பறை கூட நம் மாநிலத்தில் இருப்பதில்லையே?
- ச.வைரமணி, புதுக்கோட்டை கோட்டையூர்.
*
பிரின்ஸ் கஜேந்திர பாபு எழுதிய, 'சமூக நீதியை மறுக்கும் கல்விக் கொள்கை' கட்டுரை படித்தேன். திறன் குறைந்த, மெல்லக் கற்கிற, மாணவர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தருவதே நல்ல வழிமுறை. அவர்களுக்கு வாழ்வாதாரத்துக்கான பயிற்சி தருகிறோம் என்ற பெயரில், தொழிற்கல்வி நெருக்கடி தருவது நல்லதல்ல.
குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்கிவிட்டு, பின்னர் அவர்களின் எதிர்காலத்துக்குப் பொறுப்பேற்க வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுவிடக்கூடாது. தும்பை விட்டு வாலைப் பிடிப்பானேன்?
- அ.மயில்சாமி, கண்ணம்பாளையம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT