Published : 02 Feb 2017 10:08 AM
Last Updated : 02 Feb 2017 10:08 AM

இப்படிக்கு இவர்கள்: காத்திருக்கிறது கடமை!

ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகப் போராடியவர்கள், பங்கெடுத்தவர்கள், உதவியவர்கள் அனைவருக்கும் ஒரு முதன்மையான பொறுப்பு இருப்பதையும் உணர வேண்டும். ஜல்லிக்கட்டுத் தடைக்கு எதிராகக் களத்தில் நின்றதைப் போலவே, தமிழகத்தின் இன்ன பிற சிக்கல்கள் நிறைந்த தலையாய பிரச்சினைகளைத் தீர்க்க ஒற்றுமையோடும் இன்னும் வலிமையாகவும் போராட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரி போன்ற நீர்ப்பங்கீட்டுச் சிக்கல்கள்.. அணு உலை, மீத்தேன், கெயில், நியூட்ரினோ, மணல் கொள்ளை போன்ற சூழலியல் சிக்கல்கள்.. ஆணவப் படுகொலை மற்றும் சாதிய, தீண்டாமைக் கொடுமை ஒழிப்பு..

கல்வியை வணிகமயமாக்கும், ஏழைகளுக்கு எட்டாக் கனியாக்கும் புதிய கல்விக்கொள்கையைத் தடுத்தல்.. லஞ்சம், ஊழல் ஆகிய சீர்கேடுகளை ஒழித்தல் போன்ற பல கடமைகள் நம் முன் இருக்கின்றன. கூடவே, ஈழத் தமிழர் இனப் படுகொலைக்கு நேர்மையான விசாரணை, தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட எழுவர் விடுதலை போன்றவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும். பாசாங்கு இல்லாமல் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று போராட நமக்குத் தெரியும், வாருங்கள் நண்பர்களே!

- மூ.த.திலீபன், கல்லூரி மாணவர், சென்னை.



நடுநிலைப் பிரதிபலிப்பு

ஜனவரி 31-ல் வெளியான ‘5 கேள்விகள் - 5 பதில்கள்’பகுதியில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனின் பேட்டி படித்தேன். அதில், மாணவர்களின் தன்னெழுச்சியான போராட்டம் குறித்தும், முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரின் செயல்பாடுகள் குறித்தும் அவர் தெரிவித்த கருத்துகள் ஒரு நடுநிலை சிந்தனையாளரின் பதில்களாகவே பிரதிபலித்தன.

- அ.கற்பூர பூபதி, சின்னமனூர் (தேனி).



கனவு பலிக்கலாம்

ஜனவரி 31-ம் தேதியிட்ட, ‘ஆம் ஆத்மி கட்சியின்’ கனவு பலிக்குமா? என்ற தலையங்கம் படித்தேன். பாரம்பரிய மற்றும் தேசியக் கட்சிகள் ஊழல் மற்றும் சந்தர்ப்பவாதக் கூட்டணிகளால் மக்களிடையே சிறுகச் சிறுகத் தங்களது இருப்பை இழந்துவருவதால், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகள், மாநிலம் தாண்டி தேசிய அளவில் படரும் நிலை தவிர்க்க முடியாததே! இதற்கு அரசியலில் அப்பழுக்கற்ற தலைமைக்கு நிலவிவரும் பஞ்சமும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். இது போன்ற சூழலில், மும்முனைப் போட்டியால் பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் கனவு பலித்தாலும் ஆச்சரியமில்லை.

- ஜானகி முருகன், புதுச்சேரி.



புரட்சி வன்முறையல்ல

ஜல்லிக்கட்டுப் போராட்டம் தொடர்பான உள்ளடக்க அரசியலை வேறு கோணத்தில் அணுகி, தொடக்கம் முதலே பல கட்டுரைகளை வெளியிட்டது ‘தி இந்து’ நாளிதழ். ஜல்லிக்கட்டு தொடர்பான சிறப்புச் சட்டத்தைத் தமிழக முதல்வர், ஓய்வுபெற்ற நீதிபதி ஆகியோர் விளக்கிக் கூறிய பின்னர், போராட்டத்தில் கலந்துகொண்ட பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் கலைந்து சென்றனர். ஆனால், அதற்குப் பின்னரும் சில இளைஞர்களைக் கேடயமாக்கியும், அப்பாவி மீனவ மக்களிடத்தில் பொய்யான பரப்புரை செய்தும் வன்முறைக்கு வித்திட்டது வன்முறையாளர்கள்தான். அதனால்தான் முடிவு வன்முறையாகியது. இதை நடுநிலையில் நின்று கட்டுரையாளர் மிக அருமையாக விவாதித்துள்ளார்.

(‘எதிர்பாராத எழுச்சிப் போராட்டம்’ ஜன.29). ‘புரட்சி என்பது அடிதடிக் கலவரம் அல்ல. மக்களின் கருத்தை மாற்றுவதற்கான நிதானமான போராட்டம்தான்’ என்று கூறினார் இத்தாலிய கம்யூனிஸ்ட் அண்டோனியோ கிராம்சி என்பதையும் இங்கு பதிவுசெய்ய விரும்புகிறேன்.

- நிலவளம் கு.கதிரவன், நல்லாண்பிள்ளைபெற்றாள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x