Published : 24 Aug 2016 11:30 AM
Last Updated : 24 Aug 2016 11:30 AM
கல்வி எப்படி இருக்க வேண்டும், வளர்ந்த நாடுகளில் எப்படி இருக்கிறது, இந்தியத் தன்மைக்கேற்ப எப்படி இருந்தால் நல்லது என்பதை மிகத் தெளிவாக எழுதியிருக்கிறார், மேனாள் துணை வேந்தர் வசந்திதேவி.
>'எப்படி இருக்க வேண்டும் கல்விக் கொள்கை?' என்ற அவருடைய கட்டுரையை ஒரு சிறு கையடக்க நூலாக்கி, ஆசிரியர்கள் அனைவருக்கும் தரலாம்போல அப்படி ஒரு செறிவு!
புதிய கல்விக் கொள்கை கட்டுரையின்படி இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் என்று ஏங்க வைக்கிறது. ஒரே ஒரு மாற்றுக் கருத்தும் உள்ளது.
உள்ளாட்சிகளிடம் கல்வியை ஒப்படைக்க வேண்டும் என்பது சரியான நோக்கம்தான் என்றாலும், தமிழ்நாட்டு அரசியல் - சமூகச் சூழலில் இது சில கெடுபலன்களையும் விளைவிக்கும்.
தற்போதுள்ள பெற்றோர் - ஆசிரியர் கழகங்களே பள்ளியின் மீது ஆதிக்கம் செலுத்தவும் அங்கிருக்கும் சில ஆசிரியர்களை அச்சுறுத்தவுமே பயன்படுகின்றன என்ற செய்தி… உள்ளாட்சிகளிடம் கல்வியை ஒப்படைத்தால் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான ஒரு சிறிய உதாரணமாகக் கொள்ளலாம்.
- நா.முத்துநிலவன்,'தி இந்து' இணையதளம் வழியாக.
*
அரசுப் பள்ளிகள், அதன் கல்வித் தரம் பற்றி ஊடகங்கள் கொண்டுள்ள தவறான கருத்துக்களும், வெளியிடும் செய்திகளும் இதுவரை மக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள் பற்றிய தவறான கண்ணோட்டத்தையே தந்தன.
அந்தக் கண்ணோட்டத்தைப் போக்கி, ஒவ்வொரு நாளும், அரசுப் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் குறித்த சாதனைகளை எடுத்துக் கூற முழுப் பக்கத்தை ஒதுக்கும் 'தி இந்து'நாளிதழுக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் சமூகத்தின் சார்பில் கோடி நன்றிகள்.
இந்த நற்பணியால், திறன்வாய்ந்த ஒரு உன்னத சமூகம் உருவாகும் என்பதில் ஐயமில்லை.
- ம.அந்தோணி கஸ்பார்,திண்டுக்கல்.
*
மாப்பிள்ளை முறுக்கின் மதிப்பு
நம் சமூகத்தில் ஆணவத்தின் உச்சமாகத் திகழும் 'மாப்பிள்ளை முறுக்கு' விஷயத்தைத் தனக்கே உரிய மென்மையான பாணியில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
தனது 'கடவுளின் நாக்கு' தொடரில், முறுக்கிக்கொண்டு திரிந்தால்தான் தன்னை மதிப்பார்கள் என்ற நினைப்பில் நடந்துகொள்கிற மாப்பிள்ளைகளை, இச்சமூகம் அருவருப்புடனோ அல்லது அரைப் பைத்தியத்தைப் பார்ப்பது போலவோதான் பார்க்கிறது. பெண் வீட்டாரை மதிக்காத மாப்பிள்ளையை அந்தப் பெண்ணே மதிக்க மாட்டாள். சம்பந்தப்பட்டவர்கள் இதைப் புரிந்துகொண்டால் சரி.
- ஜே.லூர்து, மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT