Published : 24 Jun 2016 09:44 AM
Last Updated : 24 Jun 2016 09:44 AM
முன்பு அதிமுக தனியாக சட்டசபையில் நேரத்தை வீணடித்தது. இப்போது திமுகவோடு சேர்ந்து வீணடிக்கிறது. ஆக வேண்டிய வேலைகள் எவ்வளவோ இருக்கும்போது, கச்சத்தீவைப் பற்றிப் பேசி திமுகவும், அதிமுகவும் சண்டையிடுகின்றன.
ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டுமே தவிர, கச்சத்தீவை மீட்டுவிட்டால், மீனவர் பிரச்சினை எல்லாம் தீர்ந்துவிடும் என்று போலியாகப் பேசக் கூடாது. இம்முறை சட்டசபை ஆரோக்கியமாக நடைபெறும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு வழக்கம்போல் ஏமாற்றமே.
- ஷங்கர், 'தி இந்து' இணையதளம் வழியாக.
*
தொழிற்பேட்டையா.. குற்றப்பேட்டையா?
முன்னணித் தொழிற்பேட்டை நகரமாக விளங்கும் ஓசூர், இப்போது கொலை நகரமாக மாறிவரு வதைச் செய்திகள் உணர்த்துகின்றன. ஆந்திரம், கர்நாடகம் எல்லைகளைத் தொட்டவாறு உள்ள தமிழ்நாட்டின் தொழில் நகரமாகப் பல்லாயிரம் குடியிருப்புகளுடன் வளர்ந்துவரும் ஓசூர் நகரத்தின் பாதுகாப்பு போதுமானதாக இல்லை. அரசு இதில் தீவிர கவனம் செலுத்தி கொலை, கொள்ளைச் சம்பவங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
- கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.
*
இங்கு விளையாதா பருப்பு?
இந்தியாவில் பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த வெளிநாட்டில் நிலங்களைக் குத்தகைக்கு எடுத்து பருப்பை விளைவிக்கப்போவதாக வந்த மத்திய அரசின் செய்தி சிரிப்பைத்தான் வரவழைத்தது.
நம் நாட்டில் பயன்படாத விளைநிலங்களையும், தரிசு நிலங்களையும் பண்படுத்தி பருப்பு விளைவித்தாலே போதுமே. இதன் மூலம் பருப்பு மட்டுமல்ல, தேசத்தின் சாகுபடிப் பரப்பும் அதிகரிக்குமே? விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறுவதோடு, அந்நியச் செலாவணியும் மிச்சமாகுமே? செய்யுமா மத்திய அரசு?
- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT