Published : 15 Sep 2016 06:22 PM
Last Updated : 15 Sep 2016 06:22 PM
மணிப்பூரின் யதார்த்தம் குறித்த பதிவு அருமை. இரோம் ஷர்மிளாவின் நேர்காணல், அவருடைய இயல்புத்தன்மையைச் சரியாகப் புரிந்துகொள்ள உதவியது. இயல்பு வாழ்க்கையைத் தொடர்வதற்கான சூழல் அதிகாரம், ஆதிக்கம் போன்றவற்றின் காரணமாக இடையூறுக்கு உள்ளாகும்போது, அவற்றை எதிர்த்துப் போராடுவதுதான் மனித இயல்பு. பெரும்பாலான மனிதர்கள் இந்த இயல்புத்தன்மை மழுங்கடிக்கப்பட்ட நிலையில்தான் இன்று காணப்படுகின்றனர்.
ஒரு சமூகம் அதிகாரத்தின் மூலம் அடக்கப்படும்போது, எவரேனும் சாகச நாயகர்கள் வந்து காப்பாற்ற மாட்டார்களா என்றுதான் நினைக்கிறது, இன்றைய மனித மனம். தங்கள் தேவைகள் நிறைவேறிவிட்டால், அந்த நாயகர் களின் போர்க் குணத்தையோ தியாக வாழ்வையோ அங்கீகரிக்கக்கூட மறந்துவிடுகின்றனர். நாயகர்களின் தன்னலமற்ற போராட்டத்துக்கு உடனடித் தீர்வு எதுவும் கிடைக்காவிட்டால், அவரை மறக்கவும் தயாராகிவிடுகின்றனர்.
மக்களின் நோக்கத்தை இரோம் ஷர்மிளா புரிந்துகொண்டார். பின்னரே, புதிய அரசியல் தளத்தில் செயல்பட முடிவெடுத்தார். அவரை, சுயநலத்தையே இயல்பாக்கிக்கொண்டுள்ள மக்கள் கூட்டம், எந்த அளவுக்கு - எவ்வளவு காலத்துக்கு ஆதரிக்கப்போகிறது என்பதுதான் தெரியவில்லை.
- மருதம் செல்வா, திருப்பூர்.
*
சேவையும் லாபமும்
காலத்தின் தேவை கருதி எழுதப் பட்டிருக்கிறது, ‘ஏகபோகத்தை எதிர்கொள்ள பிஎஸ்என்எல் தயாரா?’ தலையங்கம். இணையப் பயனாளி களில் 50% மேல் இளைஞர்களே. அவர்களை இலக்காகக் கொண்டு இத்தகைய திட்டங்கள் அறிவிக்கப் படுகின்றன. அதிக உபயோகிப்பாளர் களே அவர்களது தொழிற்கூட்டாளி கள். மித உபயோகிப்பாளர்களுக்கு 1 ஜி.பி. ரூ.50-க்குக் கிடைக்காது என்பதே நிதர்சனம்.
வேகம்.. வேகம்.. மிக வேகம் எனும் தாரக மந்திரத் துடன் இயங்கும் இக்கம்பெனிகளுடன் அரசுத் துறையும் போட்டியிட வேண்டிய சூழல். லாபமும் சேவையும் எதிரெதிர் திசை என்றாலும், இரண்டையும் நெருங்கச் செய்வதில்தான் ஒரு நிறுவனத்தின் வெற்றி அடங்கியுள்ளது. இதில் பி.எஸ்.என்.எல். வெல்ல வேண்டும் என்பதே நம் விருப்பம்.
- பி.சந்தானகிருஷ்ணன், தஞ்சாவூர்.
*
பாரதிக்கு மரியாதை
பாரதி பற்றிய கட்டுரை, இது நாள் வரைக்கும் எந்தப் பத்திரிகையிலும் வெளிவராத படைப்பாக இருந்தது. பிரிட்டிஷ் ஆட்சிப் பகுதிக்குள் வசிக்கையில் பாரதிக்கு சுதந்திர வேட்கையும், பிரான்ஸ் ஆட்சிப் பகுதி (புதுச்சேரி)க்குள் வசிக்கையில் பத்திரிகை வேட்கையும் இருந்துள்ளதை இக்கட்டுரை காட்டுகிறது.
பாரதி பற்றிய தேடுதல் படைப்புகளாக இல்லாமல், வாழ்வியல் கூறுகளைத் தேடுவது ஒன்றே இன்றைக்கு பாரதிக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும்! அதை நிறைவுசெய்கிறது இக்கட்டுரை.
- அண்டனூர் சுரா, கந்தர்வகோட்டை.
*
பரிசு தருவாரா சல்மான்?
பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடை பெற்றுவரும் நிலையில், ஏற்கெனவே ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட இந்திய விளையாட்டு வீரர்களுக்கு, இந்தி நடிகர் சல்மான்கான் தலா ஒரு லட்சம் பரிசு கொடுத்த செய்தி நினைவுக்கு வருகிறது.
முன்னுதாரணமான இந்தச் செயல் மூலம், தனது தேசப்பற்றை யும், விளையாட்டு வீரர்களிடம் கொண்ட தனது பிரியத்தையும் நிரூபித்தார். முன்னர் வீரர்களுக்குப் பரிசு அளித்ததுபோலவே, இப்போது பாரா ஒலிம்பிக்கில் சாதித்த மாரியப் பனுக்கும், வருண்சிங்குக்கும் பரிசளித்தால் நன்றாக இருக்கும்.
- ஆர்.வடமலைராஜ், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT