Published : 01 May 2017 08:48 AM
Last Updated : 01 May 2017 08:48 AM

இப்படிக்கு இவர்கள்: மார்க்ஸ் நூலகம் தொடங்கப்பட்ட தேதி!

ஜி.ராமகிருஷ்ணன் எழுதிய ‘கண்ணன் எனும் அழியாச் சுடர்!’கட்டுரை (ஏப்.27) சிறப்பான நினைவஞ்சலியாக இருந்தது. அக்கட்டுரையில், காரல் மார்க்ஸ் நூலகம் தொடங்கப்பட்ட தேதியில் சிறு திருத்தம் இருக்கிறது. அந்நூலகம் 1981-ம் ஆண்டு எஸ்.எஸ்.கண்ணன், எஸ்.வி.ராஜதுரை மற்றும் பி.என்.ரங்கசாமி ஆகியோர் இணைந்து அன்றைக்கு சென்னை அசோக் நகரில் இருந்த எஸ்.வி.ராஜதுரையின் வீட்டில்தான் தொடங்கப்பட்டது. ஓராண்டுக்குப் பின்னர், அது எஸ்.எஸ்.கண்ணன் வீட்டுக்கு மாற்றப்பட்டது. 2014-ம் ஆண்டு பெரும் பகுதி நூல்களை மார்க்ஸ் நூலகத்தைப் பொதுநூலகமாக எடுத்து நடத்த முன்வந்த இடதுசாரி இளைஞர்களுக்குக் கொடுத்தார் கண்ணன். அதன்படி, அவர் கொடுத்த புத்தகங்களைக் கொண்டு 7.12.2014 முதல் 6/28, தமிழ்க் குடில், புதுத் தெரு, கண்ணம்மாபேட்டை தி.நகர், சென்னை என்ற முகவரியில் மார்க்ஸ் நூலகம் இயங்கிவருகிறது. அதை எஸ்.எஸ்.கண்ணனும், எஸ்.வி.ராஜதுரையும் மறுதிறப்பு செய்துவைத்தார்கள்.

- சதீஷ்குமார், நிர்வாகக் குழு உறுப்பினர், மார்க்ஸ் நூலகம்.



அரசுப் பள்ளிகள் செய்ய வேண்டியவை!

‘அரசுப் பள்ளிகளின் தரம் உயரும்’ என்று உறுதியாகக் கூறியிருக்கும் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளரின் பேட்டி (ஏப்.28) நம்பிக்கை தருகிறது. பள்ளிகளில், மாணவ - மாணவிகளுக்கு நல்ல சிந்தனைகளை ஊட்டுதல், பொதுஅறிவை வளர்த்துக்கொள்ள தினசரி செய்தித்தாள்களை வாசிக்கப் பழகுதல், சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல், மற்றவர்களிடம் அன்பாகப் பழகுதல் போன்ற நடவடிக்கைகளையும் ஆசிரியப் பெருமக்கள் மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். விளையாட்டுக்கும் சமூக நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிராமல் நல்ல மதிப்பீடுகளை உருவாக்கும் கல்விமுறையாகப் பரிணமிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் வகுப்பறையில் காற்றோட்டம், குடிநீர்வசதி, கழிப்பறை வசதிகளையும் கவனத்தில் எடுத்து பள்ளிகளை மேம்படுத்தினால், அரசுப் பள்ளிகளில் பெற்றோர்களே தங்களது குழந்தைகளைக் கட்டாயமாகச் சேர்ப்பார்கள்.

-நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.



வேகம் தேவை!

ஏப்ரல் 28-ல் வெளியான, ‘தமிழ்த் தாத்தா இல்லம் நினைவிடம் ஆகுமா?’ கட்டுரை வாசித்தபோது மனம் வேதனை அடைந்தது. மகாகவி பாரதியார் இல்லத்தைப் போலவே உ.வே.சாமிநாதய்யரின் நினைவு இல்லத்தையும் கட்டி எழுப்ப வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு இடம் தேடுவதில் அதிகாரிகளுக்கு இருக்கும் வேகமும் கடமை உணர்ச்சியும், தமிழ்த் தாத்தா இல்லத்தை நினைவிடமாக்குவதிலும் இருக்க வேண்டும்.. இருக்குமா?

- பாபநாசம் நடராஜன், தஞ்சாவூர்.



விடுமுறை தேவையா?

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் (பெட்ரோல் பங்க்) ஞாயிறு தோறும் மூடப்படுவதாகவும், அதனால் மாநிலம் முழுவதும் வாரத்தில் ஒரு நாளுக்கான எரிபொருள் மீதமாகும் என எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சங்கங்கள் அறிவித்திருப்பது ஏற்புடையதல்ல. எரிபொருள் தேவையிருப்போர் சனிக்கிழமையே நிரப்பிவைப்பர் அல்லது திங்களன்று நிரப்பிக்கொள்வர். இதனால் சனிக்கிழமைகளில் செயற்கைத் தேவை தோற்றுவிக்கப்பட்டு, மக்களுக்குத் தேவையற்ற நெருக்கடிதான் ஏற்படும். மேலும் தீயணைப்பு, விபத்து போன்ற அவசர கால வாகனங்களும் தேவையற்ற சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். எரிபொருள் நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் திறந்திருந்து, மக்களுக்கு எரிபொருள் சிக்கனம் பற்றிய விழிப்புணர்வை எந்த வழியில் ஏற்படுத்தலாம் என சிந்திப்பதுதான் நலம் விளைவிக்கும்.

-சு.தட்சிணாமூர்த்தி, பி.என்.புதூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x