Published : 08 Mar 2017 10:28 AM
Last Updated : 08 Mar 2017 10:28 AM
மார்ச் 4-ம் தேதி நூல்வெளியில் வெளியான, ‘தீப்பொறி பரவட்டும்’தலையங்கம் வாசித்தேன். அறிவின் சிறகோடு சிந்தனை வானில் உயரப் பறக்கவைக்கும் விந்தையைப் புத்தகங்களால் மட்டுமே செய்ய முடியும். எல்லோர் வீடுகளிலும் தொலைக்காட்சிப் பெட்டி உள்ளது. ஆளுக்கு இரண்டு திறன்பேசிகள் உள்ளன. வசதியாய் பயணிக்க வாகனங்கள் உள்ளன.
ஆனால், பலமுறை வாசிக்க.. நெஞ்சு நிறைய நேசிக்க புத்தகங்கள் உள்ளனவா என்று கேட்டால், இல்லை என்கிற பதில்தான் வரும். பேருந்தின் ஜன்னலோர ரசிப்புகள்கூடத் தொழில்நுட்பச் சாதனங்களால் மனிதம் கண்மூடி உள்ள நிலையில், ஆசுவாசப்படுத்திக்கொள்ள அருமையான வாய்ப்பு புத்தகங்கள்தான். விழாக்களில் பொன்னாடைகளைப் போர்த்துவதைவிட நூல்கள் தாருங்கள் என்ற மாற்றம் நல்ல விஷயம். திருமண வீடுகளிலும் நல்ல நூல்களைப் பரிசளிப்போம். அனைத்து வீடுகளிலும் சிறு நூலகங்கள் அலமாரியிலாவது தொடங்கப்பட வேண்டும்.
- சௌந்தர மகாதேவன், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி.
வாக்குரிமையின் உண்மையான மதிப்பு
ராமசந்திர குஹா எழுதிய கட்டுரையை (‘அன்றே சொன்னார் ராஜாஜி!’ மார்ச்.5) படித்ததும், ‘லஞ்சம் கொடுத்து வாக்குகளைப் பெறும் நடைமுறை எதிர்காலத்தில் நிகழும்’ என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்த ராஜாஜியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எப்போது வாக்காளரிடையே பணத்தாசையை அரசியல்வாதிகள் தூண்டிவிட்டார்களோ அப்போதே ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிட்டது, மக்களும் ஊழல்மயமாகிவிட்டனர்.
அரசியல்வாதிகள் நியாயமற்ற முறையில் சம்பாதித்த பணத்தைக் கொடுக்கிறார்கள் என்றால், மக்களும் அதை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். தேர்தல் காலங்களில் வாக்கு வியாபாரம் படுஜோராக நடந்துகொண்டிருக்கிறது. வாக்குகளுக்கு லஞ்சம் கொடுக்கும் முறையை ஒழிக்க, முதலில் அரசியல்வாதிகள் தன்னை திருத்திக்கொள்ள வேண்டும். மக்களும் வாக்குரிமையின் உண்மையான மதிப்பு என்னவென்பதை உணர வேண்டும்.
- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
அறியாமையும் திட்டங்களும்
நான் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் (1985), அப்போது ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் முழுதும் பெட்ரோல் எடுப்பதாகச் சொல்லி வயல்வெளிகள், பள்ளித்திடல்கள், குளக்கரை, ஆற்று ஓரம் எனப் பல்வேறு இடங்களில் ஆய்வுசெய்வதற்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தினர் ஆழ்துளைக்கிணறு அமைத்தார்கள். பள்ளி இடைவேளை நேரங்களில் அங்கு சென்று வேடிக்கை பார்ப்பது, அவர்கள் பயன்படுத்திய ராட்சத வாகனங்களைக் கண்டு பிரமித்து வாய் பிளந்து நின்றது தவிர, வேறு ஒன்றும் எங்களுக்குத் தெரியாது. அன்றைக்கு இருந்த மக்களின் அறியாமையை எப்படி எம்.ஜி.ஆர். பயன்படுத்திக்கொண்டாரோ அதையே ஓ.என்.ஜி.சி.யும் பயன்படுத்தி வெற்றிபெற்றது வரலாறு.
இப்போதும் அதையே செய்ய நினைக்கிறார்கள் அரசியல்வாதிகள். இன்றைய கணினியுகத்தில் இதெல்லாம் எடுபடாது. விவசாயிகள் படிக்காவிட்டாலும், ஒவ்வொரு விவசாயி வீட்டிலும் ஒரு பட்டதாரி இருக்கிறான்.. ஊடகங்கள் இருக்கின்றன.. இனி திட்டம் பற்றி எடுத்துச் சொல்லி, மக்கள் சம்மதம் பெறாமல் நீங்கள் எந்தத் திட்டத்தைத் தொடங்கினாலும் தோல்வியே மிஞ்சும்.
- இரா.முத்துக்குமரன், குருங்குளம் மேல்பாதி, தஞ்சை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT