Published : 20 Jan 2017 11:34 AM
Last Updated : 20 Jan 2017 11:34 AM
அலங்காநல்லூரில் இறுதிவரை ஒரே அலைவரிசையில் போராடிய நமது இளைஞர்கள், பெண்கள் மற்றும் கிராம மக்களின் எழுச்சிப் போராட்டம் (ஜன.17) கண்களைக் குளமாக்கியது! தமிழின மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு, அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, மத்திய - மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்பதே கோடானுகோடி தமிழ் மக்களின் ஆவல். கூடவே, பாரம்பரியம் தெரியாமல் மூக்கை நுழைத்து, தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்திய ‘பீட்டா’ அமைப்பையும் தடை செய்ய வேண்டும்!
- இரா.பொன்னரசி, வேலூர்.
விலங்கு அரசியல்
எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கடவுளின் நாக்கு’ கட்டுரை, (ஜன.17) மொரீஷியஸ் தீவில் டோடோ என்ற பறவையினம் அழிந்துபோனது பற்றி விவரித்ததோடு, ‘இயற்கை ஒவ்வோர் உயிரையும் இன்னொரு உயிருடன் இணைத்து ஒரு சமநிலையை ஏற்படுத்தக்கூடியது. எந்த உயிரினமும் இயற்கையால் வீணாக உருவாக்கப்பட்டதே இல்லை’என்ற முத்தாய்ப்பான வரிகள் அருமை. ‘மனிதர்களுக்குப் பிடித்தமான விலங்குகள் அடிமைப்படுத்தப்படுகின்றன; பிடிக்காத விலங்குகள் அழிக்கப்படுகின்றன’என்ற வரிகள் உண்மையிலும் உண்மை. உயிரினங்கள் ஒவ்வொன்றும் அதனதன் நோக்கத்துக்காகத்தான் படைக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மை மனதில் கல்வெட்டாகப் பதிவாகிவிட்டது. வித்தியாசமான தகவல்களைத் தரும் எழுத்தாளருக்குப் பாராட்டுகள்.
- ஜீவன்.பி.கே, கும்பகோணம்.
பண்பாட்டு அடையாளம்
எச்.பீர்முஹம்மது எழுதிய ‘மதப் பண்டிகையா பொங்கல்?’ கட்டுரை, மத அடையாளம் வேறு, இனம் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் வேறு என்பதை அறிவியல் மற்றும் நடைமுறை யதார்த்தங்கள் வாயிலாகச் சொன்னது. தமிழகத்திலும் இந்தியாவிலும் உள்ள மத அடிப்படைவாதிகள் இதனை கவனத்தில்கொள்ள வேண்டும்.
- பி.சி.மணி, திருநின்றவூர்.
நிமிர்ந்தெழட்டும்
கே.கே.மகேஷ், ‘திமுக மீண்டும் நிமிர்ந்தெழ என்ன செய்ய வேண்டும்?’ என்ற கட்டுரையை சரியான நேரத்தில் எழுதியிருக்கிறார். தமிழக மக்களின் மனங்களிலிருந்து மெல்ல மெல்ல அதிமுக விலகிவரும் சூழலில், திமுக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சரியாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சரியான தலைமை இல்லாமல் தடுமாறும் தமிழகத்துக்கு, ஸ்டாலினை விட்டால் வேறு மாற்று சமீப காலத்தில் தெரியவில்லை. கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ளபடி, ஸ்டாலின் நடந்துகொள்வாரானால், அவர் தமிழக முதல்வராக உயர்ந்து, ஆட்சியிலும் அமர முடியும்.
- எஸ்.தணிகாசலம், கோபிசெட்டிபாளையம்.
எம்ஜிஆர் நூற்றாண்டு
நாடு போற்றும் நாயகன் எம்ஜிஆர் பிறந்தநாளில் வெளியான வைகோவின் சிறப்புக் கட்டுரையில், இதுவரை நான் கேள்விப்படாத பல செய்திகள் இருந்தன. இப்படி ஒரு மனிதரா எனும் ஆச்சரியம் மேலெழுந்தது. ஈழ வரலாற்றில் இன்னும் சில ஆண்டுகள் எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால், தனி ஈழம் அமைந்து தமிழனுக்கு என்று ஒரு நாடே உருவாகியிருக்கும் என்று தோன்றுகிறது. திரை உலகம், அரசியல் என்று தன் உழைப்பால் இமயத்தைத் தொட்டவர் எம்ஜிஆர்.
- பொன்விழி, அன்னூர்.
கருத்துப் பெட்டகம்!
‘தி இந்து’வின் பொங்கல் மலர், கலைகளை நுட்பமாகப் பயில வாய்ப்பில்லாத என்னைப் போன்ற வாசகர்களுக்கு நாட்டிய, சங்கீதக் கலைகளைப் பற்றிய புரிதலை மலர் வழங்கியது. கலையுலக முன்னோடிகளைப் பற்றிய ரத்தினச் சுருக்க அறிமுகம், தமிழ் சினிமா நடன, பாடல் காட்சிகளைப் பற்றிய கூடுதல் புரிதல், சங்கரதாஸ் சுவாமிகளின் ஆளுமையால் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட தாக்கம், சூழலியல் சார்ந்த கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் என்று கருத்துப் பெட்டகமாக இருந்தது தி இந்து பொங்கல் மலர்.
- ம.கதிரேசன், மதுரை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT