Published : 06 Feb 2017 10:33 AM
Last Updated : 06 Feb 2017 10:33 AM
தென்மாவட்ட மக்கள், தலைநகர் சென்னைக்குச் செல்ல ரயில் பயணத்தைத் தேர்வுசெய்ய முடியாத சூழல் 40 ஆண்டுகளாக நீடிக்கிறது. கனவுத் திட்டமான சென்னை - கன்னியாகுமரி இரட்டை வழிப் பாதை இதுவரையில் விழுப்புரம் வரையில் மட்டுமே முழுமை பெற்றிருக்கிறது. விழுப்புரம் திண்டுக்கல் வரை இரட்டை வழிப் பாதை பணி முடியும் நிலையில் இருக்கிறது என்றாலும், எஞ்சிய பகுதிக்கான நிதி ஒதுக்கீடு ஏமாற்றம் தருகிறது. இந்தத் திட்டம் பாஜக ஆட்சியிலும் நிறைவேறாது என்பதையே இது காட்டுகிறது. இந்த விஷயத்தில், மத்திய அரசை மட்டும் குறைசொல்ல முடியாது. மாநில அரசும் 50 எம்பிக்களும் என்ன செய்கிறார்கள்?
- கே.ரோஸ்லின், தேவகோட்டை.
அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்
மத்திய அரசும் ரயில்வே துறையும் தமிழகத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இவ்விஷயத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா இரு ஆட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல என்பதை நிரூபித்துவருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் ரயில்வே கோரிக்கைகளை மத்திய அரசு செவிமடுப்பதாகவே தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் தமிழகத்திலிருந்து செல்லும் எம்பிக்கள் தமிழகத்துக்கு உரிமை கோருவதாகவும் தகவல் இல்லை. ஒரு சில எம்பிக்கள் அவையில் எப்போதாவது பேசுகிறார்கள். கோரிக்கைக்காக அயராது முயன்றால் மட்டுமே வெற்றிகிட்டும். அழும் பிள்ளைதான் பால் குடிக்கும். ஆகவே, அனைத்து எம்பிக்களும் எஞ்சியுள்ள பதவிக் காலத்திலாவது போர்க் குரல் எழுப்ப வேண்டும். இதுபோன்ற புறக்கணிப்புகள் காரணமாக ‘தை எழுச்சி’யைப் போல மீண்டும் ஒரு போராட்டம் ரயில்வே திட்டங்களுக்காகத் தமிழகத்தில் வெடித்தால் ஜல்லிக்கட்டைவிட அதிக ஆதரவு உருவாகும்.
- அ.அப்பர் சுந்தரம், மயிலாடுதுறை.
ஏன் இப்படி?
கல்விக்கு 6 % நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது கல்வியாளர்களின் பரிந்துரை. ஆனால், மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு 1.4 % தாண்டாதது அதிர்ச்சியளிக்கிறது. விளையாட்டுத் துறைக்கு ரூ. 1,943 கோடி நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்க விஷயம். அதேநேரத்தில், மாற்றுத்திறனாளி போட்டிகளுக்கான நிதியாக கடந்த ஆண்டு ரூ.4 கோடி வழங்கப்பட்ட நிலையில், இம்முறை வெறும் ரூ.1 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது நியாயமற்ற செயல். தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் போன்ற மாற்றுத்திறனாளிகள் நாட்டுக்குப் பெருமை சேர்த்ததை அரசு மறந்துவிட்டதா?
- சீனிவாசகன், மும்பை, முகநூல் வழியாக.
உச்சவரம்பை உயர்த்தியிருக்கலாம்
மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானத்துக்கான வரியை 10 % - லிருந்து 5% ஆகக் குறைத்திருப்பது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில், வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்சமாக உயர்த்தியிருக்கலாம். சேவை வரி விதிப்பைக் குறைத்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். வருமான வரி விதிப்பில் குறைந்தபட்ச வரிவிதிப்பை ஏற்படுத்தினால், அனைத்துத் தரப்பினரையும் வருமான வரி விதிப்புக்குள் கொண்டுவரலாம். அந்த வகையில் பட்ஜெட் ஏமாற்றமே.
- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.
ஏமாற்றிய பட்ஜெட்
‘எதிர்பார்க்க வைத்து, ஏமாற்றிய பட்ஜெட்’ கட்டுரை வாசித்தேன் (பிப்ரவரி-3). தலைப்பு வேறு மாதிரி இருந்தாலும், கட்டுரையின் பல இடங்களில் பட்ஜெட்டைச் சிலாகித்துதான் வார்த்தைகள் வந்துள்ளன. ‘இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளித்திருந்தாலும், நல்ல மாற்றங்களுக்கு வித்திட்ட பட்ஜெட்டாக எதிர்காலத்தில் நினைவுகூரப்படும்’ என்ற இறுதிவரியை ஏற்கிறேன்.
- ஜவஹர், ‘தி இந்து’இணையதளம் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT