Published : 16 Sep 2016 04:17 PM
Last Updated : 16 Sep 2016 04:17 PM

ஒரு விவசாயி எழுதுகிறார்...

வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. கன்னடக்காரர்கள் செய்கிறார்களே என்று பதிலுக்குப் பதில் வன்முறையில் ஈடுபடுவது முட்டாள்தனமானது. அப்படிச் செய்கிறவர்கள் விவசாயிகளின் நியாயமான, அறவழிப் போராட்டங்களில் கலந்துகொண்டவர்களாக ஒருபோதும் இருக்க முடியாது.

எங்களைப் போன்ற இரு மாநில விவசாயிகளுக்கு இடையே எந்தப் பிணக்கும் இல்லை. அரசியல் ஆதாயத்தின் மூலம் அற்ப லாபம் தேடும் கயவர்களும், விளம்பர மோகம் கொண்ட மட்டமான ரசனை கொண்டவர்களும்தான் கலவரத்துக்குக் காரணம்.

- இரா.முத்துக்குமரன்,விவசாயி, குருங்குளம் மேல்பாதி, தஞ்சை.

*

காவிரிக் கலவரமும் தமிழர்களின் பொருளாதாரமும்

விபத்தில் சிக்கியவர்களை மீட்கச் செல்லாமல், அவர்களது பைகளைத் துழாவுவார்கள் சில பேர். இதன்நீட்சியை கர்நாடகக் கலவரங்களில் காண முடிந்தது. பெங்களூருவில் கடை வைத்திருக்கும் தமிழர் ஒருவர், கடன் இல்லை என்றோ வட்டிக்குப் பணம் இல்லை என்றோ சொல்லியிருப்பது, தன் வீட்டருகில் தன்னைவிடப் பெரிய வீட்டைக் கட்டி தமிழன் வாழ்வது, தனியார் ஆம்னி பஸ் ஒன்றில் ஏறிப் பயணம் செய்ய இயலாத நிலை, தன்னைவிடத் தமிழன் ஒருவன் மென்பொருள் நிறுவனத்தில் கூடுதலாகச் சம்பாதிப்பது போன்றவை எல்லாம் சேர்ந்தே இந்தக் கலவரத்தில் வேலை செய்திருக்கிறது.

கர்நாடக விவசாயிக்குத் தண்ணீர் இல்லை என்பது மட்டுமே பிரச்னை இல்லை. கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரம் விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டார்களே, அப்போது எங்கே போயிருந்தார்கள் இந்த கலவரக்காரர்கள்? குறைந்தபட்சம் உண்ணாவிரதம் இருந்தார்களா? இருப்பவன் இல்லாதவன் என்ற சமூகக் கட்டமைப்பு வழியாக வளர்ந்து நிற்கும் பொறாமை என்னும் கலாச்சார எதிர்வினை அரசியல் - இவைதான் கலவரத்தின் மையம்.

- பேரா.நா.மணி, பொருளியல் துறைத் தலைவர், ஈரோடு கலைக் கல்லூரி.

*

காவிரி மட்டும்தான் பிரச்சினையா?

பூங்கா நகரமான பெங்களூரு, நரகமாகி வருவது குறித்த மருதனின் கட்டுரை உண்மையைத் தேடுகிறது. பிரச்சினை காவிரி இல்லை என்பது உண்மைதான். உலகமயாக்கலினால் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி மையப்படுத்தப்பட்ட வளர்ச்சியாகவே உள்ளது.

தமிழகத்தில் சென்னை, ஆந்திரத்தில் ஹைதராபாத், கர்நாடகத்தில் பெங்களூரு போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் குறிப்பிட்ட சில நகரங்கள் மட்டும் வளர்வதே பல பிரச்சினைகளுக்குக் காரணம்.

தொழில் வளர்ச்சியை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பரவலாகக் கொண்டுசெல்ல மத்திய - மாநில அரசுகள் திட்டமிட்டால், நிச்சயமாக ஒரே நகரில் மக்கள் குவிவது, சுற்றுச்சூழல் சீர்கேடு, சுகாதாரச் சீர்கேடு ஆகியவற்றைத் தடுக்கலாம். இம்மாதிரியான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் குறையும்.

- சே.செல்வராஜ், தஞ்சாவூர்.

*

ஆளுநர் அரசியல்

ஆளுநர் மூலம் மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தலையிடுவதை முதன்முதலில் காங்கிரஸ் துவங்கி வைத்தது என்றால், இந்த விஷயத்தில் மிகக் குறுகிய காலத்தில் பாஜக வரலாறு படைக்கும் என்றே தோன்றுகிறது (ஆளுநர் அரசியல்: அன்றும் இன்றும், செப்.13).

துளியும் அரசியல் அனுபவம் இல்லாத பலர் இத்தகைய உயர் பதவியில் நியமிக்கப்பட்டது தவறான அணுகுமுறை. அதன் பலனாக அருணாசலப் பிரதேசம், உத்தராகண்ட் போன்ற மாநிலங்களில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கு நீதிமன்றக் கண்டனங்களை மத்திய அரசு பெறும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, ஆளுநர்கள் மூலம் அச்சுறுத்தும் செயல்பாடுகள் வென்றதாகச் சரித்திரம் இல்லை என்பதை மத்திய அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

- ஜா.அனந்த பத்மநாபன், திருச்சி.

*

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x