Published : 28 Feb 2017 08:52 AM
Last Updated : 28 Feb 2017 08:52 AM
பழனிசாமியா, பன்னீர்செல்வமா, ஸ்டாலினா என்பது அல்ல இன்றைய தமிழ்நாட்டின் பிரச்சினை. சொத்துக்கு உரிமையுள்ளவர் அரசியலுக்கு வாரிசுரிமை கொண்டாடுவதும் ஏற்கத்தக்கதல்ல. சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகள் என்ன, அவற்றைச் செயல்படுத்த முன்னிறுத்தும் திட்டங்கள் என்ன என்பவையே மக்கள் தங்கள் ஆட்சியாளர்களைத் தெரிவுசெய்ய வேண்டிய அடிப்படைகள். தொழிற்கொள்கை, வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், தாய்மொழி வளர்ச்சி, பேதமற்ற கல்வி முறை, நோயற்ற வாழ்வு போன்றவற்றை உறுதிசெய்ய வகுக்கப்படும் செயல்பாடுகள் ஆகியவையே மக்கள் முன் நிறுத்தப்பட வேண்டும். வெறுமனே தனிப்பட்ட ஆளுமைகளின் பின்னால் ஓடி எப்பயனும் இல்லை. ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் என்ற கோட்பாட்டுடன் முன்செல்வோம்.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
எழுத்தாளரின் பின்னணி
ஒவ்வொரு எழுத்தாளருக்கும் எழுதத் தொடங்கியதற்கான ஏதோ ஒரு பின்னணியும் காரணமும் இருக்கும். ஏதோ ஒரு தூண்டுதலாகக்கூட இருக்கலாம். எழுத்தாளர் சாரு நிவேதிதா எழுதத் தொடங்கியதற்கான காரணத்தை நூல்வெளி (பிப்.25) கட்டுரை மூலம் விளக்கியுள்ளார். அவருக்கு என்று இலக்கிய உலகில் ஒரு தனி அடையாளம் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. அவரது வாசிப்பு அனுபவத்துக்காக அடுத்த சனிக் கிழமையை எதிர்நோக்கியிருக்கிறேன்.
- பொன்.குமார், சேலம்.
தவறுக்குக் கிடைத்த குட்டு
பிப்.23-ம் தேதி வெளியான, ‘அப்பாவிகளின் வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குக்கு முடிவு எப்போது?’ தலையங்கம் மிக அருமை. டெல்லியில் 2005-ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு, 12 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக்கிடந்த முகமது ஹுசைன், முகமது ரஃபிக் ஷா ஆகிய இருவரும் குற்றமற்றவர்கள் என்று அறிவித்து விடுவித்ததோடு, வழக்கில் அரசுத் தரப்பு தவறுகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறார் நீதிபதி. இனி இதுபோன்ற அப்பாவி வாழ்க்கையைச் சீரழிக்கும் போக்குகள் எந்த ஒரு குடிமகனுக்கும் வரக் கூடாது.
- சாகுல், தேனி.
மருத்துவர்களின் நலனும் சமூகமும்
இன்றைய வணிக உலகில் அனைவருமே மன அழுத்தத்துடன்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதில் மருத்துவர்கள் மட்டும் எப்படித் தப்ப முடியும்? (‘மக்களைக் காக்கும் மருத்துவர்களை யார் காப்பது?’- பிப்.23) மருத்துவமும் லாபம் தரும் தொழிலாகக் கருதப்படுவதால், அதனை நிறைவேற்றும் பணியாட்களாகவே மருத்துவர்கள் நடத்தப்படுகிறார்கள்.
பணிச் சுமை அவர்களைத் தன்னைப் பற்றிய சிந்தனைகூட இல்லாமல் சுழலவைக்கிறது. வியாபார மருத்துவம் தந்த பக்க விளைவே மருத்துவர்களின் ஆரோக்கியமின்மை. கர்ப்பிணியாக இருக்கும் மருத்துவர்கள் கூட நாள் முழுவதும் நின்றுகொண்டு வேலை செய்வதும் ஓய்வெடுக்க அனுமதிக்காததையும் கண்கூடாகப் பார்க்கிறோம். போதிய மருத்துவர்கள் இல்லாதபோது இரவு, பகல் எனத் தொடர்ந்து ஓய்வின்றிப் பணியாற்றும் மருத்துவர்களையும் பார்க்கிறோம். எனவே, மருத்துவர்களின் ஆரோக்கியமின்மையை அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையாக அல்லாமல், சமூகத்தின் பிரச்சினையாகக் கருதுவதுடன், மருத்துவர்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு இந்த சமூகம் குரல் எழுப்ப வேண்டும்.
- கு.செந்தமிழ் செல்வன், மின்னஞ்சல் வழியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT