Published : 20 Apr 2017 08:47 AM
Last Updated : 20 Apr 2017 08:47 AM

இப்படிக்கு இவர்கள்: இங்கே நாம் தவறிவிட்டோம்!

கலை ஞாயிறு பகுதியில் மனுஷ்ய புத்திரனின் ‘தமிழுக்கு வெளியே நாம் இருக்கிறோமா?’ (ஏப்.16) கட்டுரையை வாசித்தேன். தமிழின் உன்னதமான படைப்பாளிகளின் படைப்புகள், பக்கத்து மாநிலத்தைக்கூட எட்டவில்லை என்பது எவ்வளவு துயரமானது? நவீன இலக்கியங்களைப் பக்கத்து மாநிலங்களுக்குக் கொண்டுசெல்வதில் கல்விப் புலங்களுக்குப் பெரும்பங்கு உண்டு. படைப்பாளிகளுக்கும் கல்விப் புலங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியை நாம் நிரப்ப வேண்டும். திருக்குறளையும் ஆத்திசூடியையும் அரபியில் மொழிபெயர்ப்பதற்கே இத்தனை நூறாண்டுகள் ஆகியிருக்கின்றன.

அம்முயற்சியை மேற்கொண்டவருக்குக் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு தமிழ் அமைப்பில் பாராட்டியிருக்கிறோமா? சில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துகளை உடனுக்குடன் மொழிபெயர்த்து பல மொழிகளுக்குக் கொண்டுசெல்வதைக் காண முடிகிறது. வட்டாரம்தோறும் உள்ள பிற மொழி அறிந்த கல்வியாளர்களை, மொழிபெயர்ப்பாளர்களை, படைப்பாளிகளை ஒருங்கிணைத்து, தமிழின் சமகால எழுத்துகளை எல்லா மொழிகளுக்கும் கொண்டுசெல்லும் பெருமுயற்சியைத் தொடங்குவோம்.

- பேராசிரியர் சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

அரசுப் பள்ளியின் சாதனை

அமெரிக்க நிறுவனம் நடத்திய சமுதாயச் செயல்திட்டப் பேட்டியில் 2-வது முறையாகத் தங்கப் பதக்கம் வென்ற காளாச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் பற்றிய செய்தி பெருமைக்குரியது. தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்கள் சாதனைகள் புரிய முடியும் என்பதற்கு இவர்கள் ஓர் எடுத்துக்காட்டு. தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தடுமாறுவார்கள் என்ற பொதுக் கண்ணோட்டத்தை மாற்றுவதாக இம்மாணவர்களின் சாதனை அமைந்துள்ளது. முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் இருந்தால், எத்தகைய உயரத்தையும் அரசுப் பள்ளி மாணவர்கள் தொடுவார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.

- பு.அலர்மேல்மங்கை, சென்னை

மக்களே எஜமானர்கள்

ஏப்.13 அன்று வெளியான, ‘காவல் துறைக்கு மனித உரிமைகளைச் சொல்லிக்கொடுங்கள்’ தலையங்கம் காலத்துக்கேற்ற பதிவு. காவலாக இருக்க வேண்டியவர்களே விதி மீறி நடந்துகொள்வது வேதனையளிக்கிறது. காக்கி உடை உடுத்திவிட்டாலே அதிகாரம் தங்கள் கையில் இருப்பதான தலைக்கனம் எவ்வளவு அறியாமை. என்றைக்குமே மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் கொடுக்கும் வரிப் பணம்தான் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் என்பதை மறக்கக் கூடாது.

- கேசவ் பல்ராம், திருவள்ளூர்.



மீண்டும் காந்திய வழியில்...

ஏப்ரல்16 அன்று வெளியான, ‘இந்தியப் புரட்சியின் நூறாண்டு’ கட்டுரை, சம்பாரண் மாவட்டத்தில், வெள்ளையர்களால் அவுரி பயிரிடுமாறு இந்தியர்களை வெள்ளையர்கள் கசக்கிப் பிழிந்த சோகத்தையும், காந்தியின் அறப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியையும் பதிவுசெய்திருந்தது. அதில், ‘காந்தியப் போராட்டத்தின் அடிப்படை அன்பு. எதிர்த் தரப்பின் நம்பகத்தன்மையையும் மதிப்பையும் முதலில் பெறுவது, அவர்களுடைய பேச்சுக்கும் முக்கியத்துவம் அளிப்பது, சமரசமும் விட்டுக்கொடுத்தலும் இங்கே இழிவு அல்ல; அதுவே நெகிழ்வு. அதுவே இருதரப்பு நெருக்கத்துக்கான பாலம்’ என்ற காந்தியின் அணுகுமுறை பற்றிய வரிகள் மதிப்புமிக்கவை. இன்றைய வாழ்க்கை முறைக்கேற்பப் போராட்ட முறைகளும் மாறியதில் வியப்பில்லை. ஆனால், மீண்டும் நாம் காந்தியின் பாதையில் நடைபோட வேண்டிய அவசியம் இருப்பதை உணர முடிகிறது.

- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x