Published : 20 Mar 2018 09:43 AM
Last Updated : 20 Mar 2018 09:43 AM
வணிக உறவுகளைக் கைவிடலாமா?
மா
ர்ச் 19 ‘வணிகவீதி’ இணைப்பில் வெளியான ‘இணைவோம்... பிரிவோம்!’ கட்டுரை படித்தேன். இந்திய நிறுவனங்களுடன் இணைந்து புதிய தொழில்களைத் தொடங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள், ஒப்பந்தங்களை ரத்துசெய்துகொண்டு நாடு திரும்புவதற்கான காரணங்களை அலசியிருக்கிறது அந்தக் கட்டுரை. தொழில் துறையில் முன்னேறிய நாடுகள் இந்தியாவில் முதலீடுகளைச் செய்கிறபோது வேலைவாய்ப்பு அதிகரிப்பதோடு தொழில் திறனும் மேம்படுகிறது. இந்திய நிறுவனங்கள், நவீன தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொள்ளவும் பயிற்சி பெறவும் வாய்ப்பிருக்கிறது. இந்தக் காரணங்களால்தான் அந்நிய நேரடி முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. நமது தலைவர்கள் உலக நாடுகளையெல்லாம் சுற்றிச் சுழன்று முதலீடுகளை ஈரப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வெளிநாட்டு நிறுவனங்களோ தங்களுடைய ஒப்பந்தங்களை பாதியிலேயே முறித்துக்கொண்டுபோய்விடுகின்றன. அதற்கு, நம்முடைய நிர்வாக நடைமுறைகளும் காரணமாக இருக்கின்றன என்பது துரதிர்ஷ்டவசமானது.
- கலைச்செல்வன், புதுக்கோட்டை
பட்டம்மாளுக்கு உரியஅஞ்சலி
மா
ர்ச் 19-ல் வெளியான 'டி.கே. பட்டம்மாள் 100’ என்ற வீயெஸ்வியின் கட்டுரை படித்தேன். ஒரு பெண்ணாக, அதுவும் கட்டுப்பாடு மிகுந்த குடும்பத்தில் பிறந்து தன் சங்கீதத்தால் இசை உலகில் முடி சூடா அரசியாக வலம் வந்த பட்டம்மாளுக்கு உரிய அஞ்சலியை 'தி இந்து' வழங்கியுள்ளது. இளம் வயதில் தன்னுடைய இசை ஞானத்தை வெளிப்படுத்த அவர் பல சங்கடங்களைச் சந்தித்திருக்கக்கூடும், அதையும் மீறி அவருடைய அன்புக் கணவர் ஈஸ்வரனின் முயற்சியால் காலத்தை வென்ற கானசரஸ்வதியாகத் திகழ்ந்துள்ளார். பாரதியாரின் பாடல்களைப் பாடி அவரது மனைவியையே உருகி அழவைத்திருக்கிறார் என்பது அவரது ஈடுபாடுள்ள சங்கீதத்துக்குச் சான்று.
- பி.கே. ஜீவன், கும்பகோணம்.
ஆறுதல்தரும்இடைத்தேர்தல்முடிவுகள்
மா
ர்ச் 19-ல் வெளியான ‘பாஜகவால் புறக்கணிக்க முடியாத தோல்விகள்’ கட்டுரை படித்தேன். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது கட்சிகளின் கொள்கை, செயல்பாடுகள், ஆட்சியாளர்களின் அணுகுமுறை ஆகியவற்றை வாக்காளர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. நீண்ட காலமாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகளே வெற்றி பெறும் என்ற புதிய விதியை உருவாக்கிவிட்டார்கள். ஆனால் சமீப கால இடைத்தேர்தல்கள் சற்று வித்தியாசமான முடிவுகளைக் கொடுத்திருக்கின்றன. ஜனநாயகத்தில் மக்களே எஜமானர்கள் என்பதை நிரூபித்துவருவது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளோருக்கு ஆறுதலாக உள்ளது.
- கூத்தப்பாடி மா.பழனி, தருமபுரி.
கர்நாடகமுதல்வரின்முன்னெடுப்பு
க
ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் கட்டுரை (‘ ஓங்கட்டும் மாநில உரிமை’) தமிழர்களுக்கு முக்கியச் செய்தியை உணர்த்துகிறது. ‘மாநில சுயாட்சி’ என்கிற முழக்கத்தை உரக்க ஒலித்துவந்த தமிழ்நாடு இன்று ஒடுங்கிக்கிடக்கிறது. இந்நிலையில், தமிழர்களுக்கு வழிகாட்டுவதுபோல, கர்நாடக முதல்வரின் முன்னெடுப்பு அமைந்துள்ளது. மாநில உரிமைகளுக்காக ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் அரசியல் முதிர்ச்சி இங்கு காலந்தாழ்ந்தே வந்துள்ளது. கர்நாடகத்தைப் பார்த்தாவது மத்திய அரசின் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரான போக்கை முறியடிக்க தமிழகம் ஒன்றுபடட்டும்!
- ப.பா.ரமணி, கோவை.
கண்களைப் பாதிக்கும்
விளக்குகள் கூடாது
தி
ருநெல்வேலியில் தொடக்கப் பள்ளி ஆண்டு விழாவில் அதிக வெளிச்சம் உமிழும் விளக்குகளின் பயன்பாட்டினால் குழந்தைகளுக்குக் கண் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி தருகிறது. இதேபோல் பொதுக் கூட்டங்கள், நகைக் கடைகள், துணிக் கடைகளிலும் அதிக வெளிச்சம் உமிழும் விளக்குகளின் பயன்பாட்டுக்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது அவசியம்.
- கே.ராமநாதன், மதுரை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT