Published : 13 Mar 2018 09:36 AM
Last Updated : 13 Mar 2018 09:36 AM

இப்படிக்கு இவர்கள்: நிதித் துறையும் ரிசர்வ் வங்கியும் மோசடிக்கு இடம்கொடுக்கக் கூடாது!

பொதுத்துறை வங்கிகளின் இன்றைய நிலைகுறித்துப் பேசும், ‘மக்கள் சேமிப்பையெல்லாம் வங்கிகளுக்குள் கொண்டுவந்துவிட்டு தனியார்மயத்தைப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்!’ (12.03.18) விழிப்புணர்வுக் கட்டுரை, உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட வேண்டும். பொதுத்துறை வங்கிகளில் முன்னுரிமை தந்து, வேளாண் கடன் திட்டங்களை ஊக்கப்படுத்திய சமூகக் காரணங்களைப் பின்னுக்குத் தள்ளி, உலக மயமாக்கலின் தொடர்ச்சியாக, லாபம் ஈட்டும் வங்கிகள் மட்டுமே களத்தில் பிழைத்திருக்க முடியும் என்ற நிலையை ரிசர்வ் வங்கியும், நிதித் துறையும் ஏற்படுத்திவிட்டது.

இதன் விளைவாக, அன்றைய அரசியல் தலையீடுகளால் நஷ்டத்தை ஈட்டிய இருபது அம்சத் திட்டத்தின் தோல்வி கண்டு, தனியார் பெருநிறுவனங்களுக்கு வழங்கும் பெருந்தொகைக் கடன் திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. இதுவே சில செல்வாக்கு மிக்க தனவந்தர்களின் இன்றைய மோசடிகளுக்கு வழிவகுத்தன. ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகளுக்கு வகுத்துள்ள விதிமுறைகள், கண்காணிப்புத் தணிக்கை முறைகள் யாவும் பாதுகாப்பானவைதான். இருந்தாலும் அரசியல் தலையீடுகள், அரசியல் இயக்கங்களாலும் பொதுத்துறை வங்கிகள் பெருத்த நஷ்டங்களைச் சந்திக்கின்றன. இத்தகைய கொல்லைவழிக் கொள்ளை மோசடிகளுக்கு இடம்கொடுக்காமல், பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுப்பதே இந்தியப் பொருளா தார ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும்.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.

வங்கிகளைத் தேசியமயமாக்க இந்திரா காந்தி எடுத்த நடவடிக்கை, காங்கிரஸ் கட்சியினைப் பெருமைப்படுத்தியது. ரிசர்வ் வங்கி கவர்னர், நிதி அமைச்சர், பிரதமர் ஆகியோருக்கு உறைக்கும்படி எழுதப்பட்டுள்ளது.

- ரமீலா ராஜேந்திரன், திருப்பரங்குன்றம்.

பயிற்சிகளால் மறதி நீங்கும்

அவசரகதி வாழ்க்கையில் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் எந்த ஒரு செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடிவதில்லை. முக்கியமாக, தகவல் தொடர்புத் துறையின் அசுர வேக முன்னேற்றத்தினால் பல விஷயங்களை உடனுக்குடன் பார்த்துச் செயல்பட்டாக வேண்டிய நிலையில் உள்ளோம். டி.வி., செல்போன் போன்ற நவீன சாதனங்களால் முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, நம் நினைவலைகள் பலவாறு பாதிக்கப்படுகின்றன. இதனால் ‘மறதி’ என்று நாம் கூறும் ‘நினைவு நழுவுத’லில் சிக்கிக்கொள்கிறோம். வயதானவர்கள் பலரின் அபரிமிதமான நினைவாற்றலை இன்றும் கண்கூடாகக் காண்கிறோம். கட்டுரையில் கூறப்பட்டுள்ள படி சில பயிற்சிகள் மூலம் விஷயங்களை நினைவில் தக்கவைக்க முயலலாம்.

- கே.ராமநாதன், மதுரை.

விழிப்புணர்வு அவசியம்

கு

ழந்தைகளின் வளர்ச்சிக்குக் குறைபாட்டுக்குக் காரணம், உணவின்மையா.. தூய்மையின்மையா? - கட்டுரை படித்தேன். ‘சல் மோனல்லா’ கிருமி, கொக்கிப் புழு, நாடாப்புழு போன்றவை உருவாவ தால் ஏற்படும் தீங்கு, அதைத் தவிர்க்கும் முறைகள் குறித்துத் தெளிவுபடுத்தியது. திறந்தவெளியில் மலம் கழிப்பதாலும், கை, கால்களைச் சரியாகக் கழுவாததாலும் தொற்றுகள் ஏற்படுகின்றன. சாலையோரக் கடைகளில் மூடி வைக்காமல் விற்கும் காய்கறிகளை அலசி, கழுவாமல் சமைக்கும் பழக்கம் நகர்ப்புற மக்களிடமும் தொடர்கிறது. பழங்களையும் வாங்கியவுடன் அப்படியே சாப்பிடுகின்றனர். சாலையோரத் தின்பண்டக் கடை உரிமையாளர்களுக்கும் சுகாதார வழிமுறைகளைக் கற்றுத்தருவது அவசியம்.

- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x