Published : 01 Mar 2018 09:19 AM
Last Updated : 01 Mar 2018 09:19 AM
தனியொருவரின் ஊழலா இது?
பி
ப். 28 அன்று வெளியான ‘நீரவ் மோடி: ஒரு பெருமோசடியின் கதை!’ கட்டுரை வாசித்தேன். தனிநபர் ஒருவரால் மட்டுமே இப்படிப் பெரிய அளவில் மோசடி செய்திருக்க வாய்ப்பில்லை. பிஎன்பி-யின் மும்பைக் கிளையை மட்டும் அல்ல, அக்கிளையை ‘கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள' உயர் அதிகாரிகளையும் நீரவ் மோடி விலைக்கு வாங்கியுள்ளார் என்றே தெரிகிறது. கிளை மேலாளர்களைப் பொறுத்தவரை, சுழற்சி அடிப்படையில், அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை பணியிட மாற்றம்செய்யப்படும்போது, இந்த முறைகேட்டில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கோகுல்நாத் ஷெட்டி மட்டும் எப்படி 7 ஆண்டுகள் மாற்றப்படாமல் பணியாற்றினார்?
கிளைகளின் அன்றாடப் பரிவர்த்தனைகளை, அந்நாளின் முடிவில், தலைமையகக் கணினி சர்வருக்கு அனுப்பும் முறையான ‘இஓடி’ (End Of the Day process) தகவல்கள், தலைமையிட அலுவலர்களால் கவனிக்கப்படாமல் போனது எப்படி?
குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கிளைகளில் மேற்கொள்ளப்படும் உள்தணிக்கை அறிக்கைகள், இவ்வளவு பெரிய மோசடியை உற்று நோக்காமல் போனது ஏன்? உள்தணிக்கைத் துறை சரியாகச் செயல்பட்டிருந்தால் இந்த மோசடியை ஆரம்ப நிலையிலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். துறை ரீதியிலான மேலும் பல கண்காணிப்பு வளையங்களைத் தாண்டி இவ்வளவு பெரிய மோசடி நடந்திருப்பது மிகப் பெரிய அவமானம்.
- வெ. பாஸ்கர், அலங்காநல்லூர்.
அருமையான முயற்சி!
பி
ப். 28 அன்று வெளியான ‘ஜி-யில் என்ன இருக்கிறது?’, அருமையான பதிவு! இனிமையான தமிழ்ச் சொற்களை விட்டுவிட்டு வேற்று மொழிச் சொற்களைக் கொண்டாடுவது வேடிக்கையே! ‘சார்’, ‘மேடம்’ போன்ற சொற்களைத் தவிர்த்தாலேகூட தமிழ் பல மடங்கு நம்மிடையே நிறைந்திருப்பதுபோல் தோன்றும். தமிழ் விரும்பும் அனைவரும் இவ்வாறாக எடுத்து வைக்கும் சிறு சிறு அடிகள் அழகிய மாற்றங்களைக் கொண்டு வரும். தமிழுணர்வை மையப்படுத்தும் இத்தகைய முயற்சிகள் அருமையிலும் அருமை!
- இரா.பொன்னரசி, வேலூர்.
மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்
க
ல்லூரி மாணவர்கள் - குறிப்பாகத் தமிழக மருத்துவ மாணவர்களின் மரணம் இரண்டு ஆண்டுகளாகத் தொடர்வது கவலையளிக்கிறது. பெற்றோரின் மனநிலை எழுத்தில் அடங்காது. அரசும் கல்வி நிறுவனங்களும் இனியும் மெத்தனம் காட்டக் கூடாது. உளவியல் வல்லுநர்களுடன் இணைந்து, நிகழ்வுகளை ஆய்வுசெய்து, இம்மாதிரியான துர்மரணங்கள் மீண்டும் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள், உடன் பயிலும் மாணவர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டும்.
- கே.ராமநாதன், மதுரை.
காவிரித் தீர்ப்பு பற்றி
விவேகமான அணுகுமுறை
கா
விரி தீர்ப்பு, இந்தியா முழுவதும் உருவாக்கும் சேதம் பற்றியக் கட்டுரை (பிப். 27) பல உண்மைகளை ஒருங்கே உரைக்கிறது. கூடுதலாகக் கிடைக்கப்போகும் நீர் கர்நாடக விவசாயிகளின் பாசனத்துக்கு அல்ல. பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்குப் பாதி, அந்நகரின் ஆடம்பரத் தேவைகளுக்காகவுமே; நீர் மேலாண்மை பற்றிய திட்டமிடலே இல்லாமல் நகரங்கள் விரிந்துகொண்டே செல்கின்றன; நகரமயமாக்கல் கலாச்சாரம், ஆற்றுப்படுகையில் காலம்காலமாகத் தண்ணீரை விவசாயத்துக்குப் பயன்படுத்தி நாட்டுக்கு சேவை புரிந்துவரும் விவசாயிகளிடமிருந்து பறிக்கிறது; கான்கிரீட் காடுகளே வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்படுகின்றன. இதற்கு பெங்களூரு ஓர் உதாரணம்தான்; பல ஏரிகளிலிருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் நகர குடிநீர்த் தேவைகளுக் காக அனுப்பப்பட்டு பாதிக்கும் மேல் விரயம் செய்யப்படுகிறது. இந்தப் பின்னணியில் காவிரித் தீர்ப்பை அணுகியது விவேகமானது.
- சிவ.ராஜ்குமார், சிதம்பரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT