Published : 09 Mar 2018 10:24 AM
Last Updated : 09 Mar 2018 10:24 AM

இப்படிக்கு இவர்கள்: அரசுக் காவலர் அத்துமீறலாமா?

அரசுக் காவலர் அத்துமீறலாமா?

தி

ருச்சி, துவாக்குடியில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் பயணித்தவர், போக்குவரத்து ஒழுங்கு காவலரின் சோதனைக்குப் பயந்து, தப்பிக்க முயன்று, தன் கர்ப்பிணி மனைவியைப் பரிதாபமாகப் பறிகொடுத்துள்ளார். இதற்குக் காரணம், இவர் சட்டம் - ஒழுங்குக்குக் கட்டுப்படாமல் அத்துமீறியதுதான் என்றாலும், காவல் துறை போக்குவரத்து ஆய்வாளர் அவரை ஒரு கிரிமினல் குற்றவாளியைப் போல ஜீப்பில் விரட்டிப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? அத்துமீறிய வாகன எண்ணைப் பதிவுசெய்து, சட்டரீதியான நடவடிக்கை எடுத்திருக்கலாம். பகுதிவாழ் பொதுமக்கள் திரண்டு, சாலை மறியலில் ஈடுபட்டு எதிர்ப்பைக் காட்டும் அளவுக்கு, ஓர் ஆய்வாளரின் கண்ணை ஆத்திரம் மறைக்குமா.. ஆய்வாளருக்கான தகுதியுடன் நடந்துகொண்டிருக்க வேண்டாமா? போன உயிர் திரும்புமா? இருசக்கர வாகன சங்கிலிப் பறிப்புத் திருடர்களைத் தப்பிக்கவிட்டு, எளிதாக வாகன எண்ணைப் பதிவுசெய்து தண்டிக்க வேண்டிய சாதாரண மக்களை இப்படி விரட்டலாமா? பொதுமக்களின் நண்பனாகப் பணியாற்ற வேண்டிய அரசுக் காவலர்கள், அதிகாரத்தின் எல்லையை மீறும்போது துறைரீதியாகக் கடும் தண்டனை கட்டாயம் வழங்க வேண்டும் என்பது சரியான கோரிக்கைதான்.

- கு.மா.பா.திருநாவுக்கரசு, சென்னை.

பண்பட்ட தலைமுறைகளை உருவாக்குவதே வளர்ச்சி!

மா

ர்ச் 7 அன்று வெளியான ‘அதிகரிக்கும் குற்றங்கள்: பெண்களை மதிக்கத் தவறுகிறோமா?’ என்கிற தலையங்கம், பெண்கள் மீதான வன்முறை என்பது சட்டம் - ஒழுங்குக்குப் பங்கம் விளைவிக்கும் வெறும் அத்துமீறல் மட்டுமல்ல என்பதை உரக்கப் பேசியது. சாதி வெறியை ஒரு குழந்தையைக் கூட்டு வல்லுறவு கொள்வதன் மூலம் தணிக்க முயலும் ஒரு சமூகத்தில் வாழ்கிறோம் என்பதே பேரச்சத்தைத் தருகிறது. இதனால், இதுவரை இந்த சமூகத்துக்குக் கல்வியெனப் போதிக்கப்பட்டவை மீதே கேள்விகள் எழுகின்றன. இப்போது தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் வளரிளம் பருவ மாணவிகளுக்குத் தற்காப்புக் கலை கள் கற்றுத்தரப்படுகின்றன. அதில் தவறில்லை தான். என்றாலும், திருடர்களை ஒழிக்கத் தவறிய அரசன் குடிமக்களின் வீடுகளுக்குப் பூட்டைப் பரிசாகத் தந்த கதையாகத்தான் அது இருக்கிறது. கணினிமயப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியல்ல வளர்ச்சி; பண்பட்ட தலைமுறைகளை உருவாக்குவதே வளர்ச்சி!

- துளிர், மதுரை.

நீதிமன்றமே இழைக்கும் பெருங்கொடுமை!

ச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரான இந்திரா ஜெய்சிங்கின், ‘ஆம் உச்ச நீதிமன்றம் தடுமாறத்தான் செய்கிறது!’என்கிற பேட்டி, நீதிமன்றங்களில் ஒதுக்கப்பட்டுவரும் பெண்ணினத்தின் அவலங்களைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது. மகளிரின் உரிமைகோரும் பல வழக்குகளை விசாரிக்க அமைக்கப்படும் சட்ட அமர்வுகளில், பெண் நீதிபதி ஒருவர்கூட இடம்பெறாதது நீதிமன்றமே இழைக்கும் பெருங்கொடுமையாகும். இந்தியாவில் உள்ள தனிச் சட்டங்களை மறு சீராய்வுசெய்வதன் மூலமே ‘முத்தலாக் தனிச் சட்டம்’ போன்றவற்றுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும்.

- எல்.மலர்க்கொடி லோகநாதன், சிகரலப்பள்ளி.

சக மனுஷியாக நினைத்தாலே போதும்

பெ

ண்களுக்கு எதிரான குற்றங்கள் நமது பண்பாட்டு வளர்ச்சியின் கண்ணாடிப் பிரதிபலிப்பு என்பது முற்றிலும் உண்மை. இன்றைய சமூகத்தில், பெண்களைக் கேலி கிண்டலுடன் உதாசீனமாகப் பார்க்கும் பார்வையே அவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் வக்கிரங்களுக்கும் வழி வகுக்கின்றன. பெண்களைத் தெய்வமாக மதிக்கத் தேவையில்லை. சக மனுஷியாக நினைக்கும் மாண்பு வளர்ந்தாலே குற்றங்கள் பன்மடங்கு குறையும்.

- இரா.பொன்னரசி, வேலூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x