Published : 15 Mar 2018 09:07 AM
Last Updated : 15 Mar 2018 09:07 AM
மாணவிகளின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுமா?
கி
ராமப்புற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்கும் வகையில், தேசிய பெண்கள் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தை, கடந்த 2007-08ல் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அந்தந்தப் பள்ளிகள் மூலமாக வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, மாணவிகளுக்கு ஆண்டுக்குத் தலா ரூ. 3,000 வீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
11-வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இதற்காக ரூ.1,553.76 கோடியை அப்போதைய காங்கிரஸ் அரசு ஒதுக்கியது. இதன் அடிப்படையில், கடந்த 2008-09-ம் கல்வி ஆண்டில் பயனாளிகளின் பட்டியல் தயார்செய்யப்பட்டு, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறைக்குப் பரிந்துரைசெய்யப்பட்டது. அதன்பேரில், மாநிலக் கல்வித் துறைக்கு சுமார் ரூ.36 கோடி நிதியும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், மனிதவள மேம்பாட்டுத் துறை பரிந்துரையின் அடிப்படையில், டெல்லியில் உள்ள கனரா வங்கிக்கு இந்த நிதி மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து, 2009-10-ம் கல்வி ஆண்டு முதல் 2017-18-ம் கல்வி ஆண்டுவரை இந்த மாணவிகளுக்குக் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை. தலித் விடுதலை இயக்கம் சார்பாக, இதுதொடர்பாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலனில்லை.
இதுதொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு, 18.09.2017-ல் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி, சென்னை பள்ளிக் கல்வித் துறை இயக்ககத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தோம். காவல் துறையின் முன்னிலையில் வியாழன் அன்று பள்ளிக் கல்வித் துறைச் செயலாளரின் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மறுநாள் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரையும் சந்தித்துப் பேசியிருக்கிறோம். இதையடுத்து, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் டெல்லி சென்று, மனிதவளத் துறையினரைச் சந்தித்து, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகையைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. நல்லது நடக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்!
- ச.கருப்பையா, மாநிலப் பொதுச் செயலாளர்,
தலித் விடுதலை இயக்கம், மதுரை.
இழிநிலை அறுத்தெறிந்த
அலைபேசி!
‘அ
லைபேசியை இரண்டு நாள் பிடுங்கி வைத்துக்கொண்டால் மூளைக் கோளாறு ஏற்பட்டுவிடும்..’ ‘வருவதையெல்லாம் இரண்டு நாள் தொடர்ந்து படித்தால் புத்தி சுவாதீனம் ஏற்பட்டுவிடும்’ என்பவை சத்திய வார்த்தைகள். அலைபேசியின் அற்புதப் பயன்பாட்டில் ஒன்று, கிராமப் புறங்களில் உயர் சாதியினர் வீட்டுத் துக்க காரியங்களை அறிவிக்க தாழ்த்தப்பட்டோர் மிக நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டனர். அலைபேசி, அந்த இழிநிலையை அறுத்தெறிந்துவிட்டது. தீண்டாமையின் ஒரு கண்ணியை உடைத்ததில் அலைபேசியின் பங்கு மகத்தானது. அதேபோல் இறையன்பு வரிசைப்படுத்தும் அதன் அற்புதப் பயன்பாட்டை வீணடித்து, அஞ்சத் தக்க கருவியாக நம்மவர்கள் அதன் பயன்பாட்டைக் கொச்சைப்படுத்திவிட்டனர். இந்த இரண்டு நிலைகளை யும் தொடர் அழகுற விவரிக்கிறது.
- என்.மணி, ஈரோடு.
வெ.
இறையன்பு எழுதிவரும் ‘காற்றில் கரையாத நினைவுகள்!’ கட்டுரைத் தொடர் (13. 3.18) வாசித்தபோது, பெரியார் ஈ.வெ.ரா. ‘திராவிட நாடு’ 28.03.1943 வார இதழில் ‘இனிவரும் உலகம்’ எனும் தலைப்பில் எழுதிய கட்டுரை நினைவுக்குவந்தது. அதில், ‘கம்பியில்லாத தந்திச் சாதனம் ஒவ்வொருவர் சட்டைப் பையிலும் இருக்கும். ரேடியோ - ஒவ்வொருவர் தொப்பியிலும் அமைக்கப்பட்டிருக்கும். உருவத்தைத் தந்தியில் அனுப்பும்படியான சாதனம் எங்கும் மலிந்து, ஆளுக்காள் உருவம் காட்டிப் பேசிக்கொள்ளத்தக்க சவுகரியம் ஏற்படும். மேற்கண்ட சாதனங்களால் ஒரு இடத்தில் இருந்துகொண்டே பல இடங்களில் உள்ள மக்களுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கச் சாத்தியப்படும்’ என்று 75 ஆண்டுகளுக்கு முன்னரே தொலைநோக்குப் பார்வையுடன், மனித குல முன்னேற்றத்தைப் பற்றியும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும் எடுத்துரைத்து, இனி வரும் உலகின் சிற்பிகளாக இருக்க, ‘வாலிபர்கள், பகுத்தறிவாளர்கள் ஆசைப்பட்டு உழைக்க முன்வர வேண்டி இதை முடிக்கிறேன்’ என்கிற அழைப்பை விடுத்துக் கட்டுரையை நிறைவுசெய்கிறார். இக்கட்டுரை ‘இனிவரும் உலகம்’ என்னும் தலைப்பில் சிறு நூலாகவும் வெளிவந்திருக்கிறது.
- மா.உதயகுமார், மென்பொருள் பொறியாளர், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT