Published : 12 Mar 2018 10:06 AM
Last Updated : 12 Mar 2018 10:06 AM

இப்படிக்கு இவர்கள்: நோய் பரப்பும் கிருமிகளை வளரவிடக் கூடாது

நோய் பரப்பும் கிருமிகளை வளரவிடக் கூடாது

மா

ர்ச் 9 அன்று வெளியான ‘உயிர் காக்கும் மருந்துகள் நம் எதிரிகள் ஆகலாமா?’ என்ற கட்டுரை மிகவும் பயனுள்ளது. சரியான தருணத்தில் நமக்கும் அரசுக்கும் எச்சரிக்கை அளித்திருக்கிறார் மருத்துவர் கு.கணேசன். இக்கருத்துக்களை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களையும், விற்பனைசெய்யும் நிறுவனங்களையும் தொடர்ந்து ஆய்வுசெய்துவர வேண்டும். அனுமதி பெறாமல் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களை உடனே மூட உத்தரவிட வேண்டும். இறைச்சிக் கோழிகள் உற்பத்தியாகும் இடத்திலேயே ஆய்வு நடத்தி அதிக ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகளைப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தற்போது எல்லா மருந்துகளுக்கிடையேயும் வாழப் பழகிக்கொண்ட கொசுக்களைப் போல, நோய் பரப்பும் கிருமிகளும் வாழப் பழகிவிடும்.

- புவனகிரி.ச.வேல்முருகன், மேல்மருவத்தூர்.

வல்லரசு அல்ல, நல்லரசே வேண்டும்

சி

ரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கும் சூழலில் மக்களுக்கு உணவு கொண்டுவரும் வாகனங்களுக்கு வழி விடுங்கள் என ஐநா சபை கோரிக்கை விடுத்துள்ளது. மக்கள் உணவின்றித் தவிக்கும் வேளையிலும் அடிப்படைத் தேவையை நிறைவேற்ற இயலாத கையறு நிலையில் ஐநா சபை உள்ளது. இரு பெரும் வல்லரசு நாடுகளின் போட்டி மனப்பான்மை, இன்னொரு நாட்டு மக்களைக் கொன்று குவிக்கிறது. உலகமே இதை வேடிக்கை பார்க்கிறது. நம் மக்கள் வல்லரசுகளை உருவாக்க நினைக்காமல், நல்லரசுகளை உருவாக்க உழைக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.

- சு.பாலகணேஷ், மாதவன்குறிச்சி.

‘காமதேனு’வின் ஒரு துளி!

வா

சகர்களின் ரசனைக்கு முக்கியத்துவம் தந்து, வாரப் பத்திரிகை உலகில் புதுமைசெய்ய வந்திருக்கும் 'காமதேனு' வார இதழுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். முதல் இதழைப் படிக்கவியலாது தவற விட்டோருக்குப் பத்திரிகையின் தரம் புரியும் விதத்தில், அதில் வெளிவந்த சில பகுதிகளை ஞாயிறு அரங்கம் பகுதியில் வெளியிட்டிருப்பது பாராட்டுக்குரியது. இதில் இடம்பெற்றிருக்கும் பகுதிகள் ‘காமதேனு’ இதழின் சிறப்புகளை உணர்த்தின.

- கே.ராமநாதன், மதுரை.

‘பீரங்கி மூக்கனே போற்றி’ கட்டுரை, நகைச்சுவையுடன், அந்த நாளைய காட்சிகளையும் மலரும் நினைவுகளாய் கொண்டு வந்து நிறுத்தியது. மூக்குப்பொடிக்கென பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் பீங்கான் ஜாடியிலிருந்தோ அல்லது உருண்டை வடிவ தகர டப்பாவிலிருந்தோ, அதை அள்ளுவதற்கெனவே பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட நீளமான இரும்புக் கரண்டியிலிருந்து, அதன் குழி அளவை மிஞ்சி விடாதபடி கடைக்காரர் அள்ளிப்போடும் அழகே அலாதிதான்.

பொடிபோடும் பழக்கம் உடையவர்கள், அதை அதற்குரிய டப்பாவிலிருந்தோ, மட்டையிலிருந்தோ இருவிரல்களால் (கட்டை மற்றும் ஆள்காட்டி) அள்ளி, பிடிக்கப்பட்ட பகுதியைத் தவிர, அவ்விரல்களைச் சுற்றி வேறெங்கும் ஒட்டியிராதபடி விரல்களை உதறி, மூக்கில் வைத்து உறிஞ்சுவதே லாவகம்தான். வயதில் மூத்தவர்களாய் இருந்தாலும், அவர்களிடம் சிறுமை காணும்போது, மற்றவர்களால் ‘பொடிப்பய’ என விளிக்கப்படுவதும், சிறுவர்களையும் ‘பொடிப்பயலே’ என விளிப்பதும் இப்போதும் வழக்கம். குறும்புசெய்யும் சிறுவர்களைப் ‘போடா பொடிமட்ட’ என்று சொல்வதுண்டு.

இருவர் உரையாடலுக்கிடையே, ஏதோ ஓர் அர்த்தத்தைப் பிறிதொருவர் மறைமுகமாக உணர்த்தும்போதுகூட, ‘பொடி வச்சுப் பேசுறான்’ என்று சொல்வதுண்டு. மூக்குப்பொடிப் பிரியர்கள் ஒன்றுகூடும்பொழுது, ஒரு அங்குல உயரமுள்ள டப்பாவிலுள்ள மூக்குப்பொடியை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வது நாகரிகமானதாகவும் நட்புக்கு இலக்கணமாகவும் உரையாடல் மூலமான உற்சாகத்தை ஊக்குவிப்பதாகவும் பார்க்கப்பட்டது!

- வெ.பாஸ்கர், அலங்காநல்லூர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x