Published : 07 Mar 2018 10:13 AM
Last Updated : 07 Mar 2018 10:13 AM

இப்படிக்கு இவர்கள்: விவசாயிகள் வாழ்வு செழிக்க வகைசெய்வோம்!

விவசாயிகள் வாழ்வு செழிக்க வகைசெய்வோம்!

மா

ர்ச் - 6 அன்று வெளியான ‘வேளாண் துறை துயரைப் போக்க அரசு செய்ய வேண்டியது என்ன?’ கட்டுரை படித்தேன். ‘பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, அதன் உற்பத்திச் செலவிலிருந்து ஒன்றரை மடங்காக உயர்த்தி வழங்கப்படும்’ என்று 2018-19க்கான நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்திருப்பது, விவசாயிகளின் மேலுள்ள அரசின் அக்கறையை நம்மால் உணர முடிகிறது. மேலும், இடுபொருட்களின் விலையைக் குறைத்தல், கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் அமைத்தல், தேசிய மின்னணு வேளாண் சந்தையுடன் பெரிய சந்தைகளை இணைத்தல், வேளாண் பொருட்கள் ஏற்றுமதிக்கான தடையை முற்றிலும் அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சந்தையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களைப் போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையேல், அது துளைகள் அடைக்கப்படாத பாத்திரத்தில் நீர் நிரப்புவது போன்று வீணான முயற்சியாகிவிடும். பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்குவதைக் காட்டிலும், நிறைவேற்றக் கூடிய செயல்திட்டங்களை மட்டுமே கையாள வேண்டும் என்று கட்டுரை சுட்டிக்காட்டியிருப்பது, யதார்த்தம் மட்டுமே உதவும்... அதுவே வாழவைக்கும் என்பதையே உணர்த்துகிறது. விவசாயத்தின் முதல்நிலை மற்றும் அடிப்படை ஆதாரமான நீருக்காக, நதிநீர்ப் பங்கீடு மற்றும் நதிநீர் இணைப்பிலும் மத்திய - மாநில அரசுகள் அக்கறை காட்டினால்தான், விவசாயிகள் வாழ்வு செழிக்கும்.

- வெ.பாஸ்கர், அலங்காநல்லூர்.

குற்றம் குற்றமே!

வெ

ள்ளியன்று வெளியான, நீரை.மகேந்திரனின் ‘வங்கி மோசடிகளின் பின்னணியில் இருப்பவர் கள் யார்?’ என்கிற கட்டுரையில் ‘உண்மையை மறைப்பது மட்டுமல்ல; தெரிந்த உண்மை யைச் சொல்லத் தவறுவதும் குற்றம்தான்’ என்ற வைர வரிகள், நிச்சயம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.

- எஸ்.என்.ஆர். மஸ்லஹி, ஈரோடு.

முரணான நடவடிக்கைகள்

பொ

ருளாதார வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் வெவ்வேறானவை அல்ல; பொருளாதார வளர்ச்சியின் மூலமே வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்ற ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னரின் செய்தி படித்தேன். ஒரு சமூகம் முன்னேற வேலைவாய்ப்பு முக்கியம். அதன் மூலம் அச்சமூகத்தின் பொருளாதார நிலை உயரும். அதனால் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டு, ஏற்றத்தாழ்வுகள் அகலும். ஆனால், தற்போது அரசின் நடவடிக்கைகள் இதற்கு முரணாக உள்ளன. காலியாக உள்ள நான்கரை லட்சம் மத்திய அரசுப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதும், தேவையற்ற பணியிடங்கள் எனக் கூறி அவற்றைக் குறைக்க தமிழக அரசு குழு அமைப்பதும் வேலையில்லாத் திண்டாட்டத்தைத்தான் அதிகரிக்கும். மக்களின் வளர்ச்சியே இந்தியாவின் முன்னேற்றம் என்பதை அரசுகள் உணர வேண்டும்.

- சு.பாலகணேஷ் மாதவன்குறிச்சி. திருச்செந்தூர்.

சாகாத மானுடம்!

மா

ர்ச் 5 அன்று வெளியான ‘கலங்கி நின்ற நீதிமன்றம்’ குறுங்கட்டுரையைப் படிக்க ஆரம்பித்தபோது ‘வண்டிக்குக் கொடுக்கக் காசில்லை அய்யா’ என்ற வரிகளும், ‘தெரியல அய்யா.. போலீஸு வண்டியிலேயே கொண்டுவந்து விடச் சொல்லுங்கய்யா’ என்ற வரிகளையும் படித்தவுடன் துக்கம் பந்துபோலத் தொண்டை வரை வர, சட்டென்று கண்களில் நீர் வந்தது. பிறகு, நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன், ‘நான் தப்பு பண்ணிவிட்டேன் அம்மா.. நீ பஸ்ஸுல போ என்று சொல்லியபடி தன் பர்ஸிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார்’ என்ற வரிகளின்போதும் கண்ணீர். மானுடம் எப்போதும் சாகாது என்பதற்குச் சாட்சிதான் அன்றைய இந்நிகழ்வு!

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x