Published : 27 Mar 2018 09:35 AM
Last Updated : 27 Mar 2018 09:35 AM
மா
ர்ச் 25 அன்று வெளியான ‘மாநிலங்களிலிருந்து ஒரு தேசியத் தலைவர்’ என்ற கட்டுரையைப் படித்தேன். ‘ஒரே நாடு.. ஒரே மொழி.. ஒரே மதம்’ என்று மத்திய அரசு முன்னெடுக்கும் கால கட்டத்தில், கட்டாய கன்னடப் பாடத்திட்டத்தின் மூலமும், பசவர்களைத் தனி மதமாக அங்கீகரித்ததன் மூலமும், கர்நாடகத்துக்கென தனிக் கொடியை அறிமுகப்படுத்தியதன் மூலமும், ‘நாங்கள் இந்தியர்கள் ஆயினும் எங்களுக்கென தனி மதம் உள்ளது, தனி மொழி உள்ளது, தனிப் பெரும் பண்பாடு உள்ளது’ என மத்திய அரசுக்கு உணர்த்தியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. 1960 -70களில் முன்னெடுக்கப்பட்ட இந்தி எதிர்ப்பு, மாநில சுயாட்சி போன்ற விவகாரங்களை முதன்முதலில் முன்னெடுத்த தமிழக திராவிடக் கட்சிகள், தற்போது தனது சுயம் இழந்து, கொள்கைகளில் நீர்த்துப்போய் உள்ளன. தமிழகக் கட்சிகள் கர்நாடக அரசிடம் பாடம் கற்க வேண்டியது அவசியம்.
- ம.சண்முகப்பிரியா, போடிநாயக்கனூர்.
நூலை வாங்கத் தூண்டிய கட்டுரை
மன்னிப்பின் வகைகளை அற்புதமாக விளக்கிய கிருஷ்ணகுமாருக்கு நன்றி (மார்ச் 23 - வணிக வீதி). கட்டுரை, ‘ஒய் வோன்ட் யு அபாலஜைஸ்?’ என்ற நூலை வாங்கவும் வாசிக்கவும் தூண்டியது.
- சாந்தகுமாரி எத்துராசன், திருவள்ளூர்.
காவிரிப் பாசனம் காக்கப்பட வேண்டும்
காவிரிப் பாசன மாவட்டங்களில் இயற்கை வளம் மிகுந்த பகுதிகளை எண்ணெய்க் கிணறுகளாக மாற்றும் வேலையில் மத்திய அரசு ஈடுபட்டுவரு கிறது. கடலூர், நாகப்பட்டினம் மாவட்ட கிராமங்களில் உள்ள நிலங்களைக் கையகப்படுத்தி ‘பெட்ரோ -கெமிக்கல்’ மண்டலம் அமைக்க மத்திய அரசும் தமிழக அரசும் முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது. இந்தத் திட்டம் செயல்பாட்டுக்குவந்தால், ஒட்டுமொத்த காவிரிப் பாசன மண்டலமும் பாலைவனமாவதைத் தவிர்க்க முடியாது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், காவிரி டெல்டா பகுதிகள் வறட்சி அடையும், கடல் நீர் உட்புகுந்து நிலத்தடிநீர் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர். காவிரிப் பாசனப் பகுதிகளில் இதுவரை செயல்படுத்தப் பட்டுள்ள எல்லா திட்டங்களையும் மத்திய அரசு ரத்துசெய்ய வேண்டும். காவிரிப் பாசன மாவட்டங்களை, ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவித்து, வேளாண்மை செழிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.
- அ.பா.கலீல் அஹ்மத் பாகவீ, பரங்கிப்பேட்டை.
எப்படிச் சரிசெய்வார்களோ?
பொதுத்துறை வங்கிகளைப் பற்றிய ‘வழிக்கு வருமா..? வழுக்கி விழுமா..?’ கட்டுரை பொதுத்துறை வங்கிகளின் அஜாக்கிரதை யான நிர்வாகத்தை நன்கு சாடியிருந்தது. மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை வங்கியில் முதலீடு செய்தால், அந்தப் பணத்தைக் கொஞ்சம்கூட மனிதாபிமான சிந்தனை இன்றி, யார் யாருக்கோ கொடுத்து, வங்கியில் பணம் போட்டவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி, அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்து கிறார்கள். வருங்காலத்தில் எப்படி இதைச் சரிசெய்யப் போகிறார்கள்?
- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
பணப் பிடித்தம் சரியா?
உயிர்வாழ்வுச் சான்றிதழ் மற்றும் எனது கையொப்பத்துக்கு மேற்கையொப்பமிடல் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு மேற்கையொப்பத்துக்கும் ரூ.50 + ஜி.எஸ்.டி. 18% வீதம் என்று எனது வங்கிக் கணக்கில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. முன்தகவல் ஏதுமில்லாது இவ்வாறு செய்வது ஏற்புடையதல்ல. நீரவ் மோடி போன்றோர் ஏமாற்றிய தொகையை நேர்மையாளர் களிடம் பெற வேண்டிய நிர்ப்பந்தம் என்பதே ஒருவகை மோசடி என்றுதானே கொள்ள வேண்டியிருக்கிறது.
- ச.சீ.இராஜகோபாலன், சென்னை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT