Published : 06 Mar 2018 10:24 AM
Last Updated : 06 Mar 2018 10:24 AM
கனடாவின் மனிதாபிமானம்!
ப
ல முனை உள்நாட்டுப் போர் மூண்டிருக்கும் சிரியா ஒரு நரகமாகவே காட்சியளிக்கிறது என்று ‘சிரியா எனும் நரகம்’ என்ற (மார்ச் - 4) கட்டுரை விவரிக்கிறது. சிரியா பற்றி வரும் வீடியோ காட்சிகள் கல்நெஞ்சையும் கரைய வைக்கும். தலையிலிருந்து கன்னங்கள் வழியாகக் குருதி சொட்டச் சொட்ட அழுதுகொண்டே வரும் குழந்தைகள், இறந்துபோன மகன்களைக் கண்டு கண்ணீர்விட்டுக் கதறி அழும் தாய்மார்கள், கட்டிட இடிபாடுகளில் இறந்து கிடக்கும் சொந்தங்களைக் கண்டு மரண ஓலமிடும் உறவுகள் என மனதைக் கசக்கிப்பிழிகிறது காட்சிகள். ஐ.நா. சபை என்ன செய்துகொண்டிருக்கிறது? ‘பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவோம்; உலக அமைதிக்காகப் பாடுபடுவோம்’ என ஜி8, ஜி20 நாடுகளும், ஆசியான் நாடுகளும் கூட்டம் போட்டுக் கைகோத்து, கைகளைத் தூக்கி போட்டோவுக்கு போஸ் கொடுத்ததெல்லாம் வெறும் நாடகம்தானா? உலக நாடுகள் கண்டனம்கூடத் தெரிவிக்காமல் மெத்தனமாக இருக்க, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டும் தனி விமானம் அனுப்பி, சிரிய நாட்டு அகதிகளை அரவணைத்து தன் மனிதாபிமானத்தை உணர்த்திவிட்டார். ஏனைய நாடுகளும் கனடாவை அடியொற்றி, சிரியா மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற தன்னாலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- அ.ஜெயினுலாப்தீன், சென்னை.
வங்கிக் கொள்ளைக்கு அரசும் உடந்தையா?
வ
ங்கி ஏடிஎம்மை உடைத்துக் கொள்ளையில் ஈடுபட்டவர்களை அரசு நிர்வாகம் சரியாகச் செயல்பட்டு, கொள்ளையர்களைப் பிடித்துத் தண்டித்தது. அதே வேளையில், விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி போன்றோர் வங்கியை நூதன முறையில் ஏமாற்றுவதும் ஒருவகைக் கொள்ளையே. ஆனால், அவர்களை வெளிநாட்டுக்குத் தப்பவிட்டு, அதே அரசு நிர்வாகம் வேடிக்கை பார்க்கிறது. ஏழை, நடுத்தர மக்களின் வைப்புநிதி மூலம் திரட்டப்படுகிற தொகையினைக்கொண்டே, பெருமுதலாளிகள் வங்கிகளில் கடன் பெற்று, திரும்பச் செலுத்தாமல் ஏமாற்றுகின்றனர். மேலும், எந்த முதலாளியும் பெருநிறுவனமும் தனியார் வங்கியில் கடன் பெறுவதில்லை.
சில வங்கிகள் ‘கன்சார்டியம்’ என்கிற பெயரில் ஒன்றிணைந்து, ஒரே நபருக்கு ஒவ்வொரு வங்கியும் ரூ.1,000 கோடி ரூ.500 கோடி எனக் கடன் வழங்குவதை சலுகைசார் முதலாளித்துவத்தின் ஓர் அங்கமாகப் பார்க்கிறோம். வங்கி விதிகளில் உள்ள ஓட்டைகள், அரசியல் செல்வாக்கு இவற்றைப் பயன்படுத்தி, அவர்களால் பொதுத் துறை வங்கிகளை ஏமாற்ற முடிகிறது. இந்தியாவின் வளர்ச்சிக் காக வழங்கப்படும் சலுகைகளை தவறாகப் பயன்படுத்தி, ஒட்டுமொத்தமாகச் சுரண்டுகிற நிலையைக் காண்கிற போது உலகமயமாக்கல் குறித்த ஒரு பரிசீலனை தேவைப் படுகிறது.
- சே.செல்வராஜ், தஞ்சை.ஓட்டுக்கு மட்டுமா பழங்குடிகள்?
மா
ர்ச் -5 அன்று வெளியான ‘பழங்குடி மக்களைக் காப்பாற்றுங்கள்!’ கட்டுரை படித்தேன். சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் பழங்குடி, மலைவாழ் மக்களின் சமூக, பொருளாதார, ஆரோக்கிய நிலையில் எந்தவித மேம்பாடும் இல்லை. சுரண்டலுக்காகவும், வாக்குகளுக்காகவும் அவர்களை அதே நிலையில் வைத்திருக்கவே அரசும் தனியாரும் விரும்புகிறார்கள். காட்டிலும் மலையிலும் கிடைக்கும் பொருட்களைத் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக மலிவு விலையில் கொடுத்து வாழ்க்கை நடத்துகின்றனர். அரசு மலைவாழ் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உண்டுறையும் பள்ளிகளை அதிக அளவில் திறந்து, திறன் வளர்ப்புப் பயிற்சிகள் அளிக்க வேண்டும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து, பொருளாதாரரீதியில் மலைவாழ் பெண்கள் சொந்தக்காலில் நிற்க வழிசெய்ய வேண்டும்.
- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT