Published : 08 Mar 2018 10:13 AM
Last Updated : 08 Mar 2018 10:13 AM

இப்படிக்கு இவர்கள்: உறவுகளால் நிரம்பி வழியும் வீடுகள்!

உறவுகளால் நிரம்பி வழியும் வீடுகள்!

றையன்புவின் ‘காற்றில் கரையாத நினைவுகள்’ காலத்தால் அழியாத பால்ய வயது நிகழ்வுகளை மனதில் மறு ஒளிபரப்புசெய்தது. மயிலாடுதுறையில் எங்கள் அப்பாவோடு மூன்று சகோதரர்கள், ஐந்து சகோதரிகள் என ஒன்பது பேர் உடன் பிறந்தவர்கள். தாத்தா - பாட்டி, பேரன் - பேத்தி கள் என இருபது பேருக்கு மேற்பட்ட கூட்டுக் குடும்பம். அக்கம் பக்கத்துக் கிராமங்களில் உள்ள உறவுக் குடும்பங்களிலிருந்தும் யாராவது தங்கிப் படித்துக்கொண்டிருப்பார்கள். கோடை விடுமுறை ஆனாலும் விழாக் காலங் கள் ஆனாலும் வீடு உறவுகளாலும், நட்புகளாலும் நிரம்பிவழியும். கட்டுரையில் விரிக்கப்பட்ட அனைத்து நிகழ்வு களுமே அனுபவத்தில் கண்டதாகவே இருந்தது. ஒருமுறை தந்தை பெரியார் எங்கள் வீட்டுக்கு வருகை தந்த போது (1971) பெரியாரிடம் உறவினர்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார் எனது தந்தையார். அக்கா என ஒருவரை அறிமுகப்படுத்தியவர், மேலும் சிலரை அறிமுகப்படுத்திவிட்டு, மீண்டும் மற்றொருவரை அக்கா என அறிமுகப்படுத்தி யிருக்கிறார். அதை உன்னிப்பாகக் கவனித்த பெரியார், ‘முன்பே ஒருவரை அக்கா என்று சொன்னீர்களே’ என்று கேட்டாராம். அப்பா எந்தப் பதிலும் சொல்லாமல் புன்னகைத்திருக்கிறார். அப்பா முதலில் அறிமுகப்படுத்தியவர் அவருடைய சித்தப்பா மகள். எங்கள் வீட்டிலேயே வளர்ந்தவர். ஆனாலும், சித்தப்பா மகள் என்று பிரித்துச் சொல்ல மனம் இடம்கொடுக்காததால் என்னால் பெரியாரின் கேள்விக்கு உடனே பதில் சொல்ல இயலவில்லை என்று அந்நிகழ்வை என்னிடம் பகிர்ந்துகொண்டது உண்டு. இப்படித்தான் இருந்தன குடும்ப உறவுகள். காலப்போக்கில் இவை அருகிப்போனது வேதனைப்பட வேண்டிய செய்தி.

- கி.தளபதிராஜ், மயிலாடுதுறை.

நீர் மேலாண்மையும் மரம் வளர்ப்பும்!

மிழகத்தில் அதிகரித்துவரும் வெப்பம் என்ற தலைப்பில் மதுரை, சேலத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவு என்ற செய்தியை 2.3.18 அன்று படித்தேன். மார்ச் மாதமே 100 டிகிரி என்றால் ஏப்ரல், மே மாதங்களின் நிலை என்ன? மரங்களை அளவுக்கு அதிகமாக வெட்டி, பூமியை வெப்பமயமாதலுக்குக் கொண்டுவந்துவிட்டோம். நீர்நிலைகளில் கட்டிடம் கட்டி ஆக்கிரமிப்பு செய்து நீர் சேமிப்புக்கு இடமில்லாமல் செய்துவிட்டோம்.இயற்கையைப் பாதுகாப்பதில் நாம் மிகுந்த அலட்சியத்துடன் செயல்படுகிறோம். சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் அரசாங்கத்தையோ, சில சமூக அமைப்புகளையோ மட்டுமே நம்பியிருக் கிறோம். ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். வெப்பத்தைக் குறைக்க நம்மிடம் உள்ள ஒரே தீர்வு நீர் மேலாண்மையும் மரம் வளர்ப்பும்தான்.

- எம்.ஆர்.லட்சுமிநாராயணன், நாமக்கல்.

பெருமை கொண்ட மாணவர்கள்

மெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட தம் சிறு கரங்களால் நிதி சேகரித்து அளித்த சிவகாசி ஹயக்ரீவாஸ் பள்ளி மாணவர்களின் செயல், புளகாங்கிதமளிக்கிறது. கம்பீரமாக அமையவிருக்கும் தமிழ் இருக்கையினை நாளை இவர்கள் பெரியவர்களானதும் பார்க்கையில், சிறு வயதில் இதற்காகத் தாம் எடுத்த முயற்சியின் நினைவில் மனநிறைவு கொள்வது நிச்சயம். தமிழ் வாழ்வதற்குப் பொருள் கண்ட இம்மாணவர்கள் தமிழ்த் தாயைப் பெருமைப்படுத்திய பெருமை கொண்டவர்கள்!

- கே.ராமநாதன், மதுரை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x