Published : 30 Mar 2018 09:47 AM
Last Updated : 30 Mar 2018 09:47 AM
சான்றிதழ் அளிப்பதில் அரசுக்குத் தாமதம் ஏன்?
மா
ர்ச் 29 அன்று வெளியான ‘சாதிச் சான்றிதழுக்கான இருளர் இன மக்களின் காத்திருப்பு முடிவுக்குவருமா?’ கட்டுரை, ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமையை நிலைநிறுத்துவதற்கான ஏக்கத்தின் வெளிப்பாடாகத்தான் தெரிகிறது. ‘தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பாகும்’. தமிழகப் பழங்குடியினருக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு, அரசிதழ் மூலமாக அரசு நெறிமுறைகள் வகுத்துக் கொடுத்த பிறகும், அதைச் செயல்படுத்தாமல் இருப்பது அதிகாரிகளின் உச்சபட்ச அலட்சியத்தையே காட்டுகிறது. தமிழகத்தில் உள்ள பழங்குடியினர்களில் இருளர் சாதி மட்டுமில்லாது, மற்ற பழங்குடியினச் சாதியினருக்கும், இந்தப் பிரச்சினை இருந்துகொண்டேதான் இருக்கிறது. தமிழகப் பழங்குடியினருக்கு கோட்டாட்சியர்தான் சாதிச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்த பின்பும், கோட்டாட்சியர் அதற்கான முயற்சி எடுத்து அதில் வெற்றி காண முடியாத நிலை, ஒரு சமூகத்தின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்காமல் இருக்கும் பாவச் செயல் அல்லவா? சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், தனிச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகிய நால்வர் கொண்ட ஒரு குழு அமைத்து, சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கான திட்டத்தை அரசு உடனே செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். அதேவேளையில், சலுகைகளுக்காகத் தாங்களும் பழங்குடியினர் என்று சான்றிதழ் கேட்டு வரும் போலிகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு - இம்மாதிரி தவறு செய்ய நினைப்பவர்கள் அஞ்சும் வண்ணம் - தண்டனை அளிக்க வேண்டும்.
- வெ.பாஸ்கர், அலங்காநல்லூர்.
உண்மையான கல்வி எது?
செ
யின்ட் கோபைன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சந்தானத்தின் ‘படிக்கும்போதே சம்பாதிக்கலாம்’ என்ற திட்டம், வறுமையான.. மேற்படிப்பு தொடர முடியாத சூழலிலுள்ள இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும் (மார்ச் 25). 10-ம் வகுப்பு முடித்த பிறகு, படிக்கும் ஆர்வம் இருந்தும் வேலைக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலையிலுள்ள இளைஞர்களுக்குப் பயன்படும்விதத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ‘ஒருவரைச் சொந்தக்காலில் நிற்க வைக்க உதவும் கல்வியே உண்மையான கல்வியாகும்’என்ற சுவாமி விவேகானந்தரின் அறிவுரையை நினைவுபடுத்துகிறது. பொதுவாக, தாங்களாகவே தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள, வாழ்க்கையின் உண்மை நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள, உழைப்பின் மதிப்பை உணர்ந்துகொள்ள இத்தகைய திட்டங்கள்தான் பெரிதும் உதவும்.
- ஆர்.பிச்சுமணி, திப்பிராஜபுரம்.
வங்கிக் கொள்ளையைத் தடுப்போம்
வ
ங்கிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்கள், வங்கிக் கொள்ளையைத் தடுக்க உதவவில்லை. கொள்ளைபோன பின்பு துப்புத்துலக்கவே ஓரளவு பயன்படுகின்றன. இதனால், கண்காணிப்பு கேமராவின் மானிட்டர் இணைப்பை வங்கி உயர் அதிகாரியின் முழு நேரக் கண்காணிப்பில் இருக்குமாறு, இன்றைய அறிவியலைப் பயன்படுத்தி செல்போன் போன்ற எளிய சாதனங்களில் இணைத்துவிட வேண்டும். அந்த சாதனம் கொடுக்கும் அபாய எச்சரிக்கையை வைத்து கொள்ளையடிப்பதை ஓரளவேனும் தடுக்க இயலும்.
- எஸ்.மோகன், கோவில்பட்டி.
மகிழ்ச்சியான மாற்றம்
மா
ர்ச் 27 அன்று வெளியான ‘செவ்வாய் உணர்வு’ என் உள்ளத்தின் ஆழ்மனதில் ஓர் இனம் புரியாத உணர்வைக் கொடுத்தது. எங்கள் தாத்தா, அப்பாவிடமிருந்து நான் எதிர்பார்த்த கடிதங்களை எனக்கு நினைவூட்டின. அதற்காக தபால் நிலையத்துக்கே சென்று கடிதங்களை வாங்கியது பசுமையான நினைவு. ‘கௌரி கல்யாணம்’ படத்தில் ஜெய்சங்கர் தபால்காரர் வேடத்தில் வந்து பாடும் ‘ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவை இது.. வாழ்வை இணைக்கும் பாலமிது..’என்ற பொருள் செறிந்த பாடலுக்கு ஏற்ப, தபால் துறை மீண்டும் தங்கள் சேவையின் தரத்தை மேம்படுத்துவதில், முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய மாற்றம்.
- வெ.சே.கிரி,
நெசப்பாக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT