Published : 26 Mar 2018 09:28 AM
Last Updated : 26 Mar 2018 09:28 AM

இப்படிக்கு இவர்கள்

வங்கிகள் தனியார்மயம் எனும் வாதம் விபரீதமானது!

மா

ர்ச் 22 அன்று வெளியான ‘வங்கி மோசடிகளுக்குத் தனியார்மயம் எப்படித் தீர்வாக முடியும்?’ (தாமஸ் ஃபிராங்கோ பேட்டி), அரசாங்கக் கூட்டமைப்பு, பொறுப்பற்றதனத்தின் உச்சியில் உள்ளதையே காட்டுகிறது. சமீபத்தில் ஒரு தனியார் செல்போன் கம்பெனி, சொல்லாமல் கொள்ளாமல் வியா பாரத்தை இழுத்து மூடி, பொதுமக்களை வருத்தியதில் தகர்ந்துபோயுள்ளது, தனியார் மீதான நம்பிக்கை. அதனால்தான் தமிழகத்தில் இரண்டு லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தைத் தேடி வந்துள்ளனர் என்கிறது ஒரு தகவல். இதில் பொதுமக்கள் முன்நிறுத்தும் வாதம், ‘அரசுத் துறை நிறுவனங்கள் இதுபோல் திடீரெனக் கழுத்தறுக்காது’ என்பதே. வங்கி மோசடியில் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், ‘சாமானியனோ.. ஏழை விவசாயியோ இதுபோன்ற வங்கி மோசடி முயற்சியில் ஈடுபடுவதில்லை. தவிர்க்க இயலாமல் தவணை தவறும் சில இக்கட்டான தருணங்களில்கூட, சில வங்கிகள் கடன் வாங்கிய சாமானியர்களின் புகைப்படங்களை வெளியிட்டு, கடன் நிலுவைத்தொகை செலுத்தாதவர்கள் என அவர்களை அசிங்கப்படுத்தும். அவர்களும் பதறி, தற்கொலை நிகழ்வுகள் வரை நடந்ததும் உண்டு. ஆனால் இதுபோன்ற விவகாரங்களில் பெரு நிறுவன முதலாளிகளும், கார்ப்பரேட்களும்தான் ஏமாற்றுவதில் வெற்றிபெறுகிறார்கள். இத்தருணத்தில் தேவை வலுவான கண்காணிப்பும், சட்ட மறு வரையறைகளும்தான். அதைத் தவிர்த்து, திசை திருப்பும் கருத்துகள் மோசடியாளர்களைக் காப்பாற்றவே வழிவகுக்கும். தனியாரிடம் என்றும் சமூக நீதியோ, மக்கள் அனைவரும் சமம் எனும் சிந்தாந்தமோ எக்காலத்திலும் கிடைக்கப் பெறாது. எனவே, வங்கிகள் தனியார்மயம் எனும் வாதம், யானையைப் பிடித்துப் பானைக்குள் அடைக்க நினைக்கும் விபரீத விவாதமே.

- எம்.விஜய் ஆரோக்கியராஜ், குடந்தை.

கை

க்குப் புண் வந்தால் அதற்கு மருந்திட்டுச் சிகிச்சை மேற்கொள்வோமே தவிர, கையை யாரும் வெட்டி எறிய மாட்டோம். அப்படித்தான் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிகழும் தவறுகளைக் களைய மத்திய அரசு அக்கறையுடன் திட்டமிட்டுச் செயல்பட வேண்டுமே தவிர, வங்கிகளைத் தனியாருக்குத் தாரைவார்த்தல் ஆகாது. ஒருசமயம், உலகின் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், இந்தியாவில் பெரும் பாதிப்பு ஏற்படாததற்குக் காரணம், இந்தியாவின் முதலீடுகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பாதுகாப்பாக இருந்ததுதான். அத்தகைய அரசுத் துறை வங்கிகளைத்தான் தனியாருக்குத் தாரைவார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு. இதை முறியடிக்க வேண்டியது காலத்தின் அவசியம்.

- சேகரன், பெரணமல்லூர்.

தீர்வுக்கான மந்திரச் சொல்

ழைப்பொழிவு குறைவாக உள்ள நிலையிலும், நீரின் தேவை அதிகரித்துவரும் காலத்திலும் அதன் தீர்வுக் கான மந்திரச் சொல் - மழைநீர் சேமிப்பு. பவானி ஊராட்சி கோட்டை பகுதியில் வாழும் பொறியாளர் சிவசுப்பிரமணியன், ஆண்டு முழுவதற்குமான தண்ணீர்த் தேவைக்கு மழைநீர் சேகரிப்பின் வழியாகவே பூர்த்திசெய்து கொள்கிறார். ஒவ்வொரு குடியிருப்பாளரும் முடிந்த அளவு மழைநீரைச் சேகரிப்பதும் ஒவ்வொரு விவசாயியும் தன் பங்கு நிலத்தில் விழும் மழைநீரைத் தடுப்பணைகள் மூலம் தடுத்துப் பயன்படுத்துவதும் எளிய செயலே. எளிமையைக் கடினமாக நினைப்பதும், அதை அமலாக்க முனையாமல் தவிர்ப்பதும் ஒரு வகைக் கலாச்சாரப் பாதிப்பே. தண்ணீர் கிடைப்பது குறைந்தாலும், அதற்கான மாற்றுச் சிந்தனை நோக்கிப் பயணிக்க மறுப்பதும் ஒருவகை மரபார்ந்த சிந்தனையே. தண்ணீர் பற்றாக் குறையால் ஏற்படும் விளைவுகளை மிகச் சுருக்கமாக, ஆனால் பெருமளவில் பிரச்சாரம் செய்தல், சில எளிய செயல்கள் மூலம் தீர்வுகள் சாத்தியம் என்பதைப் புரியவைத்தல் ஆகியவை பலன் தரலாம்.

- என்.மணி, ஈரோடு.

திருத்தம்

மா

ர்ச் 25 - ‘தி இந்து’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழின் கடைசிப் பக்கத்தில் ‘பேசும் படம்’ பகுதியில் வெளியான படக்குறிப்பில் ‘தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி, விசாகப்பட்டினத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது’ என்று வந்திருக்க வேண்டும். தவறுதலாக ஆந்திர மாநிலத்தின் தலைநகர் என்று வெளியாகிவிட்டது. தவறுக்கு வருந்துகிறோம்.

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x