Published : 29 Mar 2018 09:25 AM
Last Updated : 29 Mar 2018 09:25 AM

இப்படிக்கு இவர்கள்: இணையத்தின் இருண்ட பக்கம்!

இணையத்தின் இருண்ட பக்கம்!

வி

ரல்நுனியில் தகவல்களைக் கொட்டும் இணையத்தின் இன்னொரு இருண்ட பக்கத்தை அறியாமல் நம் சொந்தத் தகவல்களை இணையதளங்களில் இட்டுநிரப்பிக்கொண்டிருக்கிறோம். அவை நம் தகவல்களை விற்று, குரூரப் பார்வையால் நம்மை வேவு பார்த்துக்கொண்டிருக்கின்றன. ஸ்மார்ட் போன்களின் கூட்டணியாக இணையம் மாறி, நாம் செல்லும் இடம், பேசும் மனிதர்கள், நமக்கு விருப்பமான உணவுகள், நாம் தேடும் உடைகள் யாவற்றையும் நுட்பமாகப் பதிவுசெய்து, வேண்டியவர்களுக்கு விற்று, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிப்பதை உணர முடிகிறது. நிறுவனங்களின் கணக்கு வழக்குகள், நிறுவனங்களில் நடைபெறும் வாட்ஸ்அப் செய்தித்தொடர்புகள் எல்லாம் ரகசியமாக இன்னொரு நிறுவனத்துக்குக் கடத்தப்படுவதைக் காண முடிகிறது. மின்னஞ்சல் மூலம் நடைபெறும் செய்தி மற்றும் ஆவணங்களின் பரிமாற்ற நிலை இன்று கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. செயலிகளின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் நம் அகவாழ்வையும் புறவாழ்வையும் பாதிக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது. நம் பிறந்தநாள், திருமண நாட்கள் வணிக நிறுவனங்களுக்கு விற்கப்பட்டு, அங்கிருந்து தொடர்பில்லாமல் வரும் வாழ்த்து அட்டைகளால் வணிகமயமாகிக்கொண்டிருக்கின்றன. இலவசமாகத் தரப்படும் இணைய வசதிக் குப் பின்னால், அதிவேக செல்பேசிகளின் விற்பனைச் சந்தை மறைந்திருப்பதை மறுக்க முடியாது. இணைய நிறுவனங்கள் உலக நாடுகளின் பாதுகாப்பு விவகாரங்களிலும் தேர்தல்களிலும் தலையிடத் தொடங்கியுள்ள நிலையில், இணையங்களுக்குக் கடிவாளமிடாவிட்டால், ஏற்படும் பேரழிவைத் தடுப்பது கடினம்!

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.

இளையராஜாவுக்கு கௌரவம்!

மிழர்களின் கலாச்சார அடையாளமான இளையராஜா பத்மவிபூஷண் விருதுபெற்ற செய்தியையும் படத்தை யும் மார்ச் 21 நாளேட்டின் முதல் பக்கத்தில் வெளியிட்டு, அவரைக் கௌரவப்படுத்தியிருந்தது ‘தி இந்து’. அவரது இசைப் பங்களிப்பின் தத்துவத்தையும் அழகியலையும் பற்றி எழுதப்பட்ட புத்தகத்தை மார்ச் 25 கலைஞாயிறு பக்கத்தில் அறிமுகப்படுத்தி, மேலும் அவருக்குப் பெருமை சேர்த்திருக் கிறது. இளையராஜா ரசிகர்களின் சார்பில் ‘தி இந்து’வுக்கு நன்றி!

- அ.சாமித்துரை, ஒரத்தநாடு.

நியாய தர்மம் மறந்த நிலை

ழிப்பறையின் கழிவுநீரை செப்டிக் டேங்கில் விடாமல், தெருவில் விட்டால் என்ன ஆகும்? செலவைக் குறைக்க அப்படிச் செய்தேன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அதேபோல்தான், நிறுவனத்தின் கழிவுகளை முறையாக வெளியேற்ற அல்லது மறுசுழற்சி செய்ய விதி முறைப்படி சுத்திகரிப்பான் அமைக்க வேண்டும். அதற்கு ஒப்பு தல் அளித்தே நிறுவனம் தொடங்கப்படுகிறது. ஆனால், லாப நோக்கம் அதிகமாகும்போது எல்லாம் மறந்துவிடுகிறது.

- சு.பாலகணேஷ். மாதவன்குறிச்சி.

காலத்தின் வாசனை

வா

ரா வாரம் மனித உணர்வுகளில் ஒன்றை ‘காற்றில் கரையாத நினைவு’ களாக, அழகாக வர்ணித்துவருகிறார் வெ.இறையன்பு. இந்த வாரம், கடிதங்களைப் பற்றி விலாவாரியாக எழுதியிருக்கிறார். கடிதப் போக்குவரத்து இரு மனங்களின் சங்கமம். இன்றுபோல் கைபேசி வசதி இல்லாத, 1980- களில், நான் பணிபுரிந்த ம.பி -யிலிருந்து, என் தகப்பனாருக்குக் கடிதம் எழுதினால், அன்றைய மதுரை மாவட்டமான சின்னமனூரைச் சேர்வதற்கு ஒரு வாரம் பிடிக்கும். அதேபோல், கடிதம் கிடைத்த மறுநாள் அவர் எனக்குப் பதில் கடிதம் எழுதி, கடந்த இரண்டு வாரத்தில் வீட்டில் நடந்த வரலாற்றையே அதில் அனுப்புவார். அவை எல்லாம் பாசத்தின் வெளிப்பாடுகள். குறுந்செய்தியும், வாட்ஸ்அப்பும், டுவிட்டரும் ஃபேஸ்புக்கும் வந்துவிட்டன. ஆனால், பாதுகாத்து வைத்த முக்கியமான கடிதங்களைத் தொட்டுப் பார்க்கும்போது வரும், பழைய சம்பவங்களின் நினைவையும், காகிதத்தின் வாசனையையும் மறக்க முடியுமா?

- அ.ஜெயினுலாப்தீன்,

சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x