Published : 23 Mar 2018 09:36 AM
Last Updated : 23 Mar 2018 09:36 AM
கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்வைக் காப்போம்!
மா
ர்ச் 22 அன்று வெளியான ‘கைவிடப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள்!’ கட்டுரை படித்தேன். வேதனையே மிஞ்சியது. கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பணிமுறை, நேரம், குறைந்தபட்ச ஊதியம் போன்றவை வரையறுக்கப்பட வேண்டும். கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டிருக்கும்போது பணியாளர்கள் அனைவரும், தலைக் கவசம், முகக் கவசம், கையுறை, காலுறை போன்ற பாதுகாப்புக் கவசங்களுடன் பணிபுரிவதை அரசு கட்டாயமாக்க வேண்டும். பணியில் ஈடுபட்டிருக்கும் சமயத்தில், பணியாளர்களின் குழந்தைகளைப் பாதுகாப்பதற்கெனக் காப்பகங்கள் உருவாக்கப்பட வேண்டும். மின்கசிவு, கட்டுமானச் சரிவு, உயரமான இடத்திலிருந்து விழுதல் போன்றவற்றால் ஏற்படும் காயம் மற்றும் உயிர்ச் சேதத்துக்கு உரிய காப்பீடு, இழப்பீடு வழங்கப்படுகிறதா என்பதை, அவர்களுக்கென ஓர் அமைப்பை உருவாக்கி, அதன்மூலம் கண் காணிக்க வேண்டும். ‘பாடுபட்டு உழைக்கும் பாட்டாளிகள், அதற்குரிய பலனை அனுபவிக்க முடியாமலே போய்விடுவதற்கு மாநில அரசுகளின் அலட்சியமே காரணம்’ என உச்சநீதி மன்றம் சுட்டிக்காட்டி, கண்டித்துள்ளதை அடுத்து, அவர்களுக்குரிய நிதிப் பலன்களை இனியும் தாமதியாது வழங்க வேண்டும். ஆட்களை நிராகரித்துவிட்டு, அவர்தம் வாக்குகளை மட்டும் பயன்படுத்திக் கொள்ளும் அசிங்கத்தனத்தை ஆட்சியாளர்கள் கைவிடவேண்டும். கட்டிக் காக்கப்பட வேண்டியது கட்டிடங்கள் மட்டுமல்ல; விலை மதிப்பில்லாத கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்க்கையும்தான்.
- வெ.பாஸ்கர், அலங்காநல்லூர்.
பேரபாயத்தில் தமிழகம்?
சி
ல மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி, திடக்கழிவு மேலாண்மை பற்றி நலச் சங்கங்களுடன் கலந்தாய்வு நடத்தியது. அதில் கலந்துகொண்ட அதிகாரிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அமல்படுத்த சுமார் ரூ.1,000 கோடி செலவில் பெருங்குடி மற்றும் கொடுங்கையூரில் குப்பையிலிருந்து மின்சாரம் உற்பத்திசெய்யும் உலைகள் அமைக்கப்படும் எனக் கூறினார்கள். ஆனால், இந்த பட்ஜெட்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு சொற்ப தொகையான ரூ. 16 கோடி ஒதுக்கீடு என்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. மாநகராட்சி தினமும் பல்லாயிரக்கணக்கான டன் குப்பைகளைக் கொட்டுகிறது. குப்பைக் கழிவுகள் தொடர்பான பிரச்சினைகள் வருங் காலத்தில் பூதாகாரமாக வளரும். நிலத்தடி நீர் மாசுபடும்.. காற்றில் நச்சு பரவும்.. இதனால் பெரும் சுகாதாரச் சீர்கேடுகள் நிகழ வழியேற்படும். இந்தப் பேரபாயத்திலிருந்து நாம் விஞ்ஞானபூர்வமாக மீள்வது எப்போது? தமிழக அரசு பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து, உடனடியாகச் செயல்படுத்தத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- வெ.இராம ராவ், சமூக ஆர்வலர்,
சென்னை.
தேவை..
நேர்மையான வங்கி நிர்வாகம்தான்
மா
ர்ச் 22 அன்று வெளியான தாமஸ் ஃபிராங்கோ பேட்டியின் சுருக்கம், வங்கி மோசடிகளைப் பற்றியும் அதற்குக் காரணமானவர்கள் பற்றியும் புரிந்துகொள்ள உதவியது. கனிஷ்க் கோல்டு மோசடிப் புகார் உட்பட, ரிசர்வ் வங்கி - இந்திய அரசின் நிதித் துறை - வங்கி நிர்வாகம் ஆகிய மூன்றின் பொறுப்பற்ற செயலால் நடைபெற்றதைச் சுட்டிக் காட்டியிருக் கிறார். நடக்கும் மோசடிகளுக்கு ஜனநாயக நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்றே கருதுகிறேன். வங்கித் துறை தனியாரிடம் இருக்கும்போது அதனைப் பாதுகாக்கவே பொதுத் துறையாக மாற்றப்பட்டது. இரண்டு நிலையிலும் பொதுமக்களின் பணம், வங்கிகளின் தவறான நிர்வாகத்தின் மூலம் சூறையாடப்பட்டது. இந்தப் பிரச்சினைக்கான தீர்வு வங்கி தனியார்மயம் ஆதல் அல்ல; வங்கிகளின் நேர்மையான, தவறற்ற நிர்வாகம்தான்!
- என்.மணி, ஈரோடு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT