Published : 04 Dec 2018 10:23 AM
Last Updated : 04 Dec 2018 10:23 AM
இப்படிக்கு இவர்கள்
நவம்பர்-30 அன்று வெளியான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றிய இரண்டு பக்கப் பதிவுகளைப் படித்தேன். அவர் மறைந்துவிட்டாலும் இன்றும் ஒவ்வொரு வீட்டிலும் தந்தையாக, அண்ணனாக, தம்பியாக, ஆசிரியராக, மாணவராக, தொழிலாளியாக, வீரராக இப்படி ஒவ்வொரு பாத்திரப் பதிவுகளாகத் தமிழர்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். கடவுளரையும், சாமானியர்களையும் கண் முன்னே காண்பித்த கலைஞனாக மட்டுமல்லாது, பொது வாழ்க்கையிலும் அள்ளி வழங்கிய வள்ளலாகவும் திகழ்ந்திருக்கிறார். அப்போது முதல்வராக இருந்த காமராஜரிடம் மதிய உணவுத் திட்டத்துக்காக சிவாஜி வழங்கிய ஒரு லட்ச ரூபாயின் இப்போதைய மதிப்பு சில கோடிகள் பெறும். நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பெருமைப்படுத்தும் விதமாக விழா எடுத்தும், சிறப்புக் கட்டுரைகள் தீட்டியும் மகிழும் ‘இந்து தமிழ் திசை’க்கு சிவாஜி ரசிகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
- மு.சுப்பையா, தூத்துக்குடி.
நடிகர் திலகத்தின் குடும்ப வாரிசுகளுடனும், திரைப்பட வாரிசுகளுடனும் ‘சிம்மக் குரலோன் - 90’ விழாவினை இந்து தமிழ் நாளிதழ் சார்பில் கொண்டாடிய செய்தி நெகிழ்ச்சியைத் தந்தது. அந்த மாபெரும் கலைஞனுக்குப் புகழாரம் சூட்டிய, அவருடன் நடித்த கலைஞர்கள் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தது தன் தொழிலில் அவர் கொண்டிருந்த மரியாதையினையும், ஈடுபாட்டினையும் உணர்த்தியது. சிவாஜி கணேசனின் நெகிழ்ச்சி தரும் நினைவுகள், அந்த மாபெரும் கலைஞனின் புகழ் என்றும் மங்காது நிலைத்திருக்க வித்திடும் என்பதில் ஐயமில்லை.
- கே.ராமநாதன், மதுரை.
நல்ல விவசாயியிக்கு உதாரணம்
டிசம்பர்-1 அன்று வெளியான ‘திருவாரூர் மாவட்டம் இடும்பா வனம் கிராமத்திலுள்ள சீனு என்ற விவசாயி மட்டும் கஜா புயல் பாதிப்பிலிருந்து குறைந்த சேதங்களோடு தப்பியுள்ளார்’ என்ற செய்தி படித்தேன். இதற்குக் காரணமாக இருந்தது, ‘தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறிய வானிலை முன்னறிவிப்பு’ என்ற செய்தி ஆச்சரியத்தைத் தந்தது. சில வருடங்களாகவே செல்வகுமாரின் வானிலை செய்தியைக் கேட்டு விவசாயம் செய்வதாக விவசாயி சீனு கூறியிருந்தார். அதன் பலன், இன்றைக்கு அவருடைய இழப்பு கணிசமாகக் குறைந்துள்ளது. தன்னுடைய பேட்டியினூடே அவர், ‘ஊரே அழிந்து கிடக்கும்போது தன்னுடைய மரங்கள் காப்பாற்றப்பட்டதற்குச் சந்தோஷப்பட முடியவில்லை’ என்ற அவரின் பேச்சு, ஒரு விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தது.
- ஜெ.விக்னேஷ், பாப்புநாயக்கன்பட்டி.
மக்களை மகிழ்ச்சிப்படுத்துங்கள்
நவம்பர் 29, அன்று வெளியான ‘பேரழிவு அம்பலப்படுத்தும் ஓட்டைகள்; ரயில் திட்டங்களை உடனே நிறைவேற்றுங்கள்’ என்கிற தலையங்கம் வாசித்தேன். மோசமான இயற்கைப் பேரிடர் காலங்களில் ரயில் போக்குவரத்து எந்த அளவுக்கு இன்றியமையாதது என்பதை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அவர்கள் ரயில் போக்குவரத்தை இதுபோன்ற சூழலில் எப்படிச் சிறப்பாகக் கையாண்டார்கள் என்பதை மேற்கோள்காட்டி, காவிரிப் படுகைக்கு ரயில்வே திட்டங்கள் எவ்வளவு முக்கியத்துவம் என்பதை ஆட்சியாளர்களுக்கு விளக்கும் விதமாக அமைந்திருந்தது தலையங்கம். தமிழகத்திலிருந்து ஏ.கே.மூர்த்தி, வேலு, டி.ஆர்.பாலு போன்றவர்கள் நாடாளுமன்றத்தில் பல நேரங்களில் குரல்கொடுத்துப் பல திட்டங்களை நிறைவேற்றினார்கள். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழகம் பல வகையில் ரயில்வே திட்டங்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையில் வஞ்சிக்கப்படுகின்றன. ரயில் நிலையங்கள் தூய்மை, விளம்பரங்கள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்று, காவிரிப் படுகையின் கடைமடைப் பகுதிகளுக்கு ரயில் போக்குவரத்தைப் போர்க்கால அடிப்படையில் மேம்படுத்தினால் மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சிகொள்வார்கள். அடிப்படைக் கட்டமைப்பில் நாம் கவனம் செலுத்தவில்லை என்றால், வல்லரசு என்ற முழக்கம் எல்லாம் வெறும் கனவாகவே போய்விடும்.
- இரா.முத்துக்குமரன், அற்புதபுரம்.
லண்டனை நேரில் காணும் உணர்வு
நான் தற்போது பிரிட்டனில் என் மகள் வீட்டுக்கு வந்திருக்கிறேன். இந்து தமிழ் நாளிதழின் (ஆங்கில இந்துவும் கூட) காலைச் செய்தி, குறிப்பாக கட்டுரைகள் வாசிக்காமல் என்னால் அடுத்த வேலை செய்ய இயலாது. சமஸின் லண்டன், பிரிட்டன் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போது நேரில் பார்ப்பதை அப்படியே படிப்பதுபோல இருக்கிறது. அருமை. பிரிட்டனில் உள்ள சூழலை நம் அரசும் மக்களும் உருவாக்க வேண்டும்.
- முத்துராமன் டிவிஎம், மின்னஞ்சல் வழியாக…
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT