Published : 26 Dec 2018 09:43 AM
Last Updated : 26 Dec 2018 09:43 AM
விடைகொடுப்பதற்கில்லை, அன்பின் பிரபஞ்சன்!
பிரபஞ்சன் காலமாகிவிட்டார். ஒரு படைப்பாளியின் காலத்தை யார் அளப்பது? காலத்தாலேயே அது இயலாது. அடுத்தடுத்த தலைமுறை படைப்பாளிகளை அன்புள்ளத்தோடு நேசிக்கும் ஓர் உயிர் எப்படி மறைய முடியும்? தான் கொண்டாடப்படும் ஒரு மேடையில்கூட, பிற எழுத்தாளர்களை அடையாளப்படுத்திக் கொண்டாடும் ஒரு மனம் எப்படி இல்லாமலாகும்? சமகால அரசியலைத் தொட்டு எழுதவும், சமூக விடியலைப் பற்றிச் சிந்திக்கவும், மேலை நாட்டு இலக்கியங்களை அதனதன் காலத்து அரசியலோடு இணைத்து அறிமுகம் செய்யவுமான ஓர் உன்னத இதயம் எப்படி ஓய்வெடுக்கும்? ஜனநாயகச் செயல்பாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல்கொடுக்கும் இயக்கங்களோடு துணிச்சலோடு ஒருங்கிணைந்து நிற்கும் கால்கள் எப்படி ஓய்வெடுக்கும்? விடைகொடுப்பதற்கில்லை அன்பின் பிரபஞ்சன்!
- எஸ்.வி.வேணுகோபாலன், சென்னை.
எழுத்தாளர்களைக் கவுரவிப்போம்!
மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனுக்குப் புதுவை அரசு இறுதி மரியாதை செலுத்திய நிகழ்வை நெகிழ்ச்சியுடன் பதிவுசெய்திருக்கிறது இந்து தமிழ் நாளிதழ். பிரபஞ்சனின் வாசகர்களில் ஒருவனாய் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். எழுத்தாளர்களை கவுரவிப்பதில் தமிழக அரசு கற்க வேண்டிய பாடங்களையும் இந்தச் செய்தி உணர்த்துகிறது. எழுத்தாளர்களின் மரணத்தின்போது மட்டுமல்லாமல் அவர்கள் வாழும்போதும் உரிய கவுரவத்தையும் அங்கீகாரத்தையும் வழங்க அரசு முன்வர வேண்டும். மூத்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை மிக சொற்பமே. அதை உயர்த்திட வழிவகை செய்ய வேண்டும். எழுத்தாளர்களை, அறிவுசார் பெருமக்களை மதிக்கும் சமூகமே உயர்ந்த சமூகம்!
- என்.ராஜேஷ், மின்னஞ்சல் வழியாக…
வாழ்வார் பெரியார்
‘பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?’ என்ற கட்டுரை (24.12.2018) படித்தேன். பெரியார் என்ற பேராளுமையின் ஆதாரமே அவரது முரண்பட்ட வாதங்கள், செயல்கள்தான். அதைப் பற்றி தான் வாழும் காலத்திலேயே பெரியார் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. காரணம், தன் மனதுக்குப் பட்டதை வெளிப்படையாகச் சொல்லிவிடும் பண்பாளர். காந்தியின் கொள்கைகளை, செயல்பாடுகளை விமர்சித்த பெரியார், அவர் மறைந்தபோது இந்த நாட்டுக்கு ‘காந்தி தேசம்’ எனப் பெயரிட வேண்டுகோள் விடுத்தார். பிராமணியத்தை எதிர்க்கிறோமேயொழிய பிராமணர்களை அல்ல என்று சொன்ன பெரியார் பிராமணியம் என்பதை பிராமணலல்லாதோரிடமும் சுட்டி அதற்கு எதிராகவும் பேசியவர். வரலாற்றில் அவர் என்றும் வாழ்வார்!
- கோமல் தமிழமுதன், திருவாரூர்.
சமத்துவப் போராளி சச்சார்
முஸ்லிம் சமூகம் பின்தங்கிய நிலையில் இருப்பதைத் தனது நாடாளுமன்ற அறிக்கையில் பதிவுசெய்ததுடன் சம வாய்ப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்தவர் நீதியரசர் ராஜிந்தர் சச்சார். சமவாய்ப்பு ஆணையம் தனிப்பட்ட முறையில் முஸ்லிம் இன மக்களுக்கு மட்டுமல்லாது அதன் பயன்பாட்டை எல்லா இனமக்களும் பயன்படுத்தும் வாய்ப்பை அளித்திருப்பதாலேயே அவர் போற்றப்படுகிறார். அவர் பணிஓய்வுக்குப் பின், சமூகநீதியுடன் சமூக சீர்திருத்தத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தருமபுரி மாவட்டத்தில் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவித்தது அவரின் சிறப்புக்கு மெருகூட்டுவதாகும்.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT