Published : 23 Oct 2018 09:36 AM
Last Updated : 23 Oct 2018 09:36 AM
அக்.18 அன்று வெளியான ‘டாடா நிறுவனம் ஏன் பேசப்பட வேண்டியதாகிறது?’ என்கிற கட்டுரை உட்பட டாடா தொடர்பான எல்லா கட்டுரைகளையும் படித்தேன். உண்மையில், நம் தேசத் தந்தை காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் காலத்தில், டாடாவின் 150-வது ஆண்டு வரலாற்றையும் படித்துக் கொண்டாடுவதில் இந்திய மக்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் டாடா குழுமத்தின் ஐந்து தலைவர்களும் அருந்தொண்டாற்றியுள்ளார்கள் என்பதைக் கட்டுரைகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. ‘சமூகத்திடமிருந்து பெற்றதை இந்தச் சமூகம் பயன்பெறத் திருப்பியளிக்க வேண்டும் என்ற தர்ம’த்தைப் பின்பற்றி வாழ்ந்தவர்கள், வாழ்கிறவர்கள் டாடா குழுமத்தினர். மக்கள் நலனுக்கான அரசே மக்களின் நலனுக்குத் தீங்கு விளைவிக்கும் மதுக் கடைகளைச் சட்டப்படி நடத்தும்போது, டாடா குழுமத்தவர்கள் பீடி, சிகரெட், மதுபானம் போன்ற தொழிலை மேற்கொள்ளாதது மக்கள் நலனில் எவ்வளவு அக்கறை கொண்டிருந்தார்கள் என்பதை உணர்த்துகிறது. தொழிலாளர்களுக்கு முதன்முதலாக வருங்கால வைப்புநிதித் திட்டத்தை அமல்படுத்தியது, பணிக்காலம் முடிவதற்கு முன்பான ஓய்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியபோது வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் அவர்களின் உண்மையான பணி ஓய்வு வயது வரும் வரை அவர்களுக்கு இறுதியாக வழங்கிய ஊதியத்தைத் தொடர்ந்து வழங்கியது எனில், டாடா குழும முதலாளிகள் தொழிலாளர்களின் உணர்வோடு வாழ்ந்துள்ளார்கள் என்பதையே காட்டுகிறது.
- முத்துசொக்கலிங்கம், கல்பாக்கம்.
டாடா நிறுவனங்களின் அறக்கட்டளைகள் இந்திய மக்களுக்குச் செய்யும் தொண்டு ஒன்றே அவர்களின் பெயர் என்றென்றும் நிலைத்து நிற்பதற்குப் போதுமானதாக இருக்கும். இந்நிறுவனத்தைக் கௌரவிக்கும் முகமாக இந்து தமிழ் வெளியிட்ட சிறப்புக் கட்டுரைகள் பாராட்டுக்குரியது.
- ஜீவன்.பி.கே. கும்பகோணம்.
ஊழலற்ற சமூகம் அமைப்போம்
காந்தி-150 தொடரில் வரும், ‘கரம்சந்த் சிந்திய கண்ணீர்!’ என்கிற ஆசையின் கட்டுரை சமூக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது (அக். 17). கட்டுரையை வாசிக்கும்போதே நம் வாழ்வில் நாம் நேர்மையைப் பின்பற்றிய நிகழ்வுகளும் நேர்மை தவறிய நிகழ்வுகளும் நினைவில் வந்துசெல்கின்றன. நேர்மை தவறுவதால்தான் தவறுகள் நிகழ்கின்றன. அப்துல் கலாமிடம், ‘ஊழலை ஒழிக்க முடியுமா?’ என்ற கேள்விக்கு... ‘சிறு வயதிலேயே குழந்தைகளிடம் அப்பா, அம்மா, ஆசிரியர் மூவரும் நேர்மை எண்ணத்தை வளர்த்தால், ஊழலை ஒழிக்க முடியும்’ என்றாராம். காந்தியின் 150-வது தருணத்தில், காந்தியின் வாழ்க்கை வரலாற்றுச் சம்பவங்களைத் தொகுத்து, புத்தகமாக அனைத்து மாணவர்களுக்கும் அரசு இலவசமாக வழங்க வேண்டும். ஒரு காலத்தில் சத்திய சோதனை மாணவர்களுக்குத் துணைபாடப் புத்தகமாக இருந்திருக்கிறது. எல்லா பணியிடங்களிலும் நேர்மையான மனிதர்கள் பணியாற்றும்போது பாகுபாடுகளற்ற அற்புதமான சமூகம் உருவாகும். அந்த உயர்வான சமூகத்தை உருவாக்கி, வளர்த்தெடுப்பது நம் அனைவரின் கடமை. காந்தி கட்டுரைகள் தொடரட்டும்.
- கூத்தப்பாடி மா.கோவிந்தசாமி, தருமபுரி.
இந்தத் தலைமுறை காந்தியைப் புரிந்துகொள்ளவும், காந்தியை வாசிப்பதற்கும் களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது இந்து தமிழ். சத்திய சோதனையைத் தாண்டி வராத என் போன்றோருக்குப் புதிய வெளிச்சத்தை ஆசையின் கட்டுரை தருகிறது. வாய்ப்பு இருப்பின், தமிழில் இதுவரை வெளிவந்துள்ள காந்தி குறித்த முக்கிய புத்தகங்களின் அறிமுகப் பட்டியலைத் தரலாம். அது என் போன்றோர்க்குப் பேருதவியாய் அமையும்.
- பாஸ்கர், நாமக்கல்.
‘நானும்’ இயக்கத்தின் அதிர்வுகள்
‘நானும்’ இயக்கம் வழக்கு, தண்டனை, ஆதாரம் என இத்யாதிகளைக் கடந்து, பல ஆண்டுகள் கழித்தும் தன் மனக்குமுறலை இறக்கிவைத்து கறுப்பு ஆடுகளை அடையாளம் காட்டுவதே அதன் உன்னத நோக்கம். பாதிக்கப்பட்ட பெண்களின் வலியைப் புரிந்துகொள்ளாமல் சாதி, அரசியல் சாயம் பூசிக் கயவர்களைக் காக்க முற்படுவது பெண்களுக்கு இழைக்கும் பெரும் அநீதியாகும்.
- இரா.பொன்னரசி, வேலூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT