Published : 22 Aug 2018 09:27 AM
Last Updated : 22 Aug 2018 09:27 AM

இப்படிக்கு இவர்கள்: பாலிதீன் இல்லா உலகம் உருவாக்குவோம்

பாலீதின் உபயோகத்தைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் எடுத்துள்ள முடிவு பாராட்டத்தக்கது.

பாத்திரம் கொண்டுவரும் வாடிக்கையாளர்ளுக்கு 5% தள்ளுபடி கொடுக்கப்படும் என்ற அறிவிப்போடு மட்டுமல்லாமல், அண்டை மாநிலமான கேரளாவில் நடைமுறையில் இருப்பதுபோல், பாத்திரம் கொண்டுவராவிட்டால் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மக்கும் காகிதப்பை / மெல்லிய அலுமினியத்தால் ஆன பாத்திரத்தில் அதற்குரிய கட்டணத்தை வாங்கிக்கொண்டு பார்சல் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பையும் சேர்த்து வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

இந்த விஷயத்தில் வணிகர் சங்கங்களும் இப்போதே ஆயத்தமாவது நல்லது. மேலும் அரசு ஆணை வெளியிடுவதோடு மட்டும் நின்றுவிடாமல், அதை அமலாக்குவதில் தீவிர கண்காணிப்பும் கண்டிப்பும் இருத்தல் அவசியம்!

- அ.பட்டவராயன், திருச்செந்தூர்

 

என்றைக்கும் பாதுகாப்பு

ஆக்ஸ்ட் 20-ல் வெளிவந்த ‘கருணாநிதி: இந்தி பேசாத மக்களின் உரிமைகளைக் காத்தவர்’ கட்டுரையைப் படிக்கப் படிக்க கருணாநிதியின் மேல் இருந்த மதிப்பு மேலும் மேலும் உயர்கிறது. வங்காளத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் கர்க சாட்டர்ஜி, இந்தி திணித்தலை எதிர்த்து திராவிட இயக்கங்கள் ஆற்றிய பங்கை சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அன்றைய இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவாக, இந்தியை ஒரே அலுவல் மொழியாக்குவது எனும் முடிவைத் தள்ளிவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது மட்டுமல்ல, இந்தி பேசாத மக்கள் ஒப்புக்கொள்ளும்வரை இந்நிலை தொடருமென அறிவிக்கப்பட்டது. இந்த இமாலய வெற்றி தமிழர்களுக்கு மட்டுமல்ல; இந்தியை தாய்மொழியாகக் கொண்டிராத அனைத்து இந்தியர்களுக்கும் என்றைக்கும் மொழிப் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பது மிகச் சரியானதே.

- ப.சரவணன், கோயம்புத்தூர்.

 

இசைக்கு ஏது மதம்!

வீயெஸ்வியின் 'இசைக்கு மதம் உண்டா?' கட்டுரை படித்தேன் (21.08.18). மொழி, மதம், சாதி, இனம், தேசம் கடந்தது இசை. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை இசையோடு சம்பந்தப்பட்டுள்ளான். இசை கேட்டு செடி கொடிகள்கூடச் செழித்து வளரும் என்பது அறிவியல் தரும் உண்மை.

உயிரினங்கள் அனைத்தும் இசைக்கு மயங்கியிருக்க, மதக் காழ்ப்புணர்ச்சியில் இந்து சமயம் சார்ந்தோர் பிற மதப் பாடல்களைப் பாடினால் ‘புல்லுருவி, பச்சோந்தி’ என இகழ்வது சனாதன தர்மம் பேசுவோர்க்கு அழகல்ல. கிறிஸ்தவரான யேசுதாஸின் பாட்டைக் கேட்டுதானே சபரிகிரிவாஸன் கண் உறங்குகிறார்.. கண் விழிக்கிறார். காயல்பட்டணம் மறைந்த ஷேக் முகமதுவின் கர்னாடக இசை கேட்டு மயங்காதவர் உண்டா? ஷேக் சின்ன மெளலானா சாஹேப்பின் நாதஸ்வர இசைக்கு மயங்காதவர் உண்டா? அர்த்தமுள்ள இந்து மதம் எழுதிய கண்ணதாசன்தானே இயேசு காவியம் எழுதி அழியாப் புகழ்பெற்றார்.

‘அருட்பாவா.. மருட்பாவா?’ என வாதம் எழுந்தபோது வள்ளலாரின் துணைநின்றவர் செய்குத்தம்பி பாவலர்தானே. திருவாசகத்துக்கு உருகி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் கிறிஸ்தவரான ஜி.யு.போப் என்பதை மறக்க முடியுமா? அவருடைய திருவாசக மொழிபெயர்ப்பு கண்டு ‘இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தையெல்லாம் வரு விளையாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்’ என போப்பைப் பாராட்டியவரும் கிறிஸ்தவரான ஜூலியஸ் வில்சன்தானே?

இன்று தமிழ் சங்கப் பாடல்களுக்கு இசை அமைத்துப் பாடிவருபவர் இஸ்லாமியரான மம்மதே ஆவார். இனியாவது சாமி அறையோடு மதத்தை வைத்துக்கொள்வோம். சமூகப் பிளவைத் தவிர்ப்போம்.

- எஸ்.ஸ்ரீகுமார், கல்பாக்கம்.

 

enna ninaikkiradhujpg100 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x