Published : 10 Jul 2018 08:32 AM
Last Updated : 10 Jul 2018 08:32 AM

இப்படிக்கு இவர்கள்: திருமணமும் கல்வியும்

திருமணமும் கல்வியும்

கை

க்குழந்தையோடு வந்த தாய்க்கு, அரசுக் கல்லூரி ஒன்றில் சேர்க்கை மறுக்கப்பட்ட நிகழ்வு சில நினைவுகளைக் கொணர்ந்தது. 1935-ல் என் தந்தை என் அக்காவை கோவை அரசுக் கல்லூரியில் சேர்க்க அழைத்துச் சென்றார். கல்லூரி முதல்வர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, ஐ.ஈ.எஸ் (இந்தியக் கல்விப் பணி) ‘புலிக் கூட்டத்தில் மான் குட்டியை விடுகின்றீரே’ என்றார். என் தந்தை, ‘விருப்பப்படுகிறார்.. தைரியமும் இருக்கிறது.. அவரது கணவரும் மாமியாரும் அனுமதி கொடுத்துவிட்டார்கள்’ என்றதும், முதல்வர் ‘அடுத்த குண்டைப் போடுகிறீரே, திருமணமான பெண்ணை எப்படிச் சேர்ப்பது’ என்றார். ‘விதிகளில் தடையேதும் உண்டோ?’ என்று என் தந்தை வினவ.. என் அக்கா கல்லூரியில் சேர்ந்தார். 1945-ல் நான் அதே கல்லூரியில் படிக்கும்போது ஒரு மாணவிக்குத் திருமணம் நடைபெற்றது. பல்கலைக்கழகத் தேர்வின் பொழுது நிறைமாதக் கர்ப்பிணி. காலையில் குழந்தையைப் பெற்றெடுத்து 10 மணிக்குத் தேர்வு எழுத வந்தார். முதல்வர் இராமநாதன் பிள்ளையின் காரில் அவர் வந்ததாகச் சொல்லப்பட்டது. பிற்காலத்தில் கர்நாடக சட்டமன்ற உறுப்பினரானார் என்று அறிந்தேன். ஆண்கள் திருமணத்துக்குப் பின் கல்வியைத் தொடர முடிந்தது. யாரும் வினா எழுப்பியதில்லை. இவ்வாறிருக்க.. இக்காலத்தில் திருமணமாகிக் குழந்தையைப் பெற்றெடுத்த ஒரு தாய்க்கு இடம் அளிக்கத் தயங்குவது பாலின வேறுபாடு நீங்கவில்லை என்பதையே காட்டுகிறது.

- ச.சீ.இராஜகோபாலன்,கல்வியாளர், சென்னை.

மொழி வளர்ச்சியில்

மாநிலங்களுக்கும் பங்கிருக்கிறது

ஜூ

லை 7 அன்று வெளியான ‘பாயும் இந்தி.. சரியும் ஏனைய மொழிகள்’ கட்டுரை படித்தேன். இதில் இரு முக்கிய விஷயங்கள் உள்ளன. இந்தி தவிர்த்த மற்ற மொழியினர் தம் மொழி வளர்ச்சிக்குப் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. அதைப்போலவே இந்தி தவிர ஏனைய மொழிகளின் வளர்ச்சியை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. ‘இந்தி வளர்ச்சிக்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என அரசியல் சட்டத்தின் 351-வது கூறு வலியுறுத்துகிறது. நூலகங்களுக்கு இந்திப் புத்தகம் கொடுப்பது, ஏடிஎம்மில் மாநில மொழிகளைப் புறந்தள்ளி இந்தியைப் புகுத்துவது, இந்தி தினம் கொண்டாடுவது, சில பகுதிகளில் இந்தி கற்றுக்கொள்ளும் செலவையும் ஏற்பது என்று மத்திய அரசு செயல்படுகிறது. இப்போதாவது, மற்ற மாநில மொழியினர் தம் மாநில மொழி வளர்ச்சிக்கு செய்யத் தவறியதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

மஞ்சள் பை மகிமை

ந்நாட்களில் துணிக் கடைகளிலும், நகைக் கடைகளிலும், திருமணங்களில் தாம்பூலம் வைத்துத் தரப்பட்ட மஞ்சள் பைகள் சிறுவர்களின் பள்ளிப் பையாக, மளிகைச் சாமான்கள் மற்றும் காய்கறிகள் வாங்கும் பையாகப் பல்வேறு விதங்களில் பயன்பட்டு, கடைசியில் மண்ணோடு கலந்து மறைந்தது பற்றிய எஸ்.ராஜகுமாரனின் சுவாரஸ்யமான கட்டுரை பழைய நினைவுகளுக்குக் கொண்டுசென்றது. பாலிதீன் பயன்பாட்டால் ஏற்பட்டுள்ள விபரீதத்தைத் தடுக்க, மீண்டும் துணிப் பைகளைப் பயன்படுத்துவதே சிறந்தது.

- கே.ராமநாதன், மதுரை.

விளக்கம்

நே

ற்றைய நாளிதழின் (09.07.2018) முதல் பக்கத்தில் வந்துள்ள ‘மக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு’ என்ற செய்தியில், ஒரு இடத்தில் அதிமுக ஆதரவு என வந்துள்ளது. 2019-ல் இரண்டுக்கும் சேர்த்து தேர்தல் நடத்த எதிர்ப்பும் 2021-க்குப் பிறகு சேர்ந்து நடத்த ஆதரவும் தெரிவித்துள்ளது அதிமுக. இந்த இரட்டை நிலைதான் தம்பிதுரை பேட்டியில் எதிர்ப்பாகவும் சட்ட ஆணையம் நடத்திய கூட்டத்தில் ஆதரவாகவும் வெளியானது. இரண்டுமே சரிதான்.

- ஆசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x