Published : 12 Jul 2018 08:35 AM
Last Updated : 12 Jul 2018 08:35 AM

இப்படிக்கு இவர்கள்: தமிழகத்தின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்

தமிழகத்தின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்

ஜூ

லை - 10 அன்று வெளியான ‘டிஎன்பிஎஸ்சி இணையவழித் தேர்வு; மிச்சமிருக்கும் நம்பிக்கைக்கும் மோசமா?’ என்ற செ.இளவேனில் எழுதிய கட்டுரை வேலைவாய்ப்புகளுக்காக முயற்சித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைய தலைமுறையினரின் ஆதங்கத்தையும் கவலையையும் பிரதிபலிப்பதாக இருந்தது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நம்பகத் தன்மையைச் சீர்குலைப்பதில் ஏன் ஆட்சியாளர்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்? ‘மத்திய அரசின் தேர்வுக் கொள்கையை மாநில அரசும் அடிபிறழாமல் பின்பற்றுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது’ என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார் . உண்மையில், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகளைத்தானே முன்மாதிரியாக மாநிலத் தேர்வாணையம் கொள்ள வேண்டும்? மத்தியில் இதுவரை பல்வேறு அரசுகள் ஆட்சியில் இருந்துள்ளன. ஆனால், எந்த அரசும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் பணிகளில் குறுக்கிட்டு செல்வாக்கு செலுத்தியதில்லை. சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாகவே யுபிஎஸ்சி இதுவரை இருந்துவருகிறது. அதன் உறுப்பினர்கள் மற்றும் தலைவர் நியமனத்திலும் எந்தவிதச் சந்தேகமும் யாருக்கும் வந்ததில்லை. ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை தகுதியைப் புறந்தள்ளிவிட்டு, ஆளுங்கட்சி சார்புடையவர்கள் தேர்வாணைய உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள் என்ற விமர்சனங்களை எப்படி எடுத்துக்கொள்வது. இவையெல்லாமே மாநில நிர்வாகத்தைப் பாதித்து, தமிழக மக்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதற்குச் சமம். யுபிஎஸ்சி போன்று நேர்மைக்கும் நிர்வாகத் திறமைக்கும் பெயர்பெற்ற மூத்த அலுவலர்களைத் தலைவராகவும் உறுப்பினர்களாகவும் நியமித்து, வெளிப்படைத் தன்மையுடன் மாநிலத் தேர்வாணையம் செயல்பட வழிவகுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.

- நா.புகழேந்தி, பழனி.

மாணவர்களுக்காகக் குரல்கொடுக்கும்

இந்து தமிழுக்கு நன்றி!

டி

என்பிஎஸ்சி நடத்தும் நேர்காணல் தேர்வுகள் பற்றிய மாணவர்களின் மனக்குமுறலைக் ‘மிச்ச மிருக்கும் நம்பிக்கைக்கும் மோசமா?’ (ஜூன் 10) என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்ட ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நன்றி. கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே, நேர்காணல் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர் கள் குலுக்குச் சீட்டு முறையில் தங்களை நேர்காணல் தேர்வுசெய்யும் உறுப்பினர் குழுவைத் தேர்ந்தெடுக்கலாம் என்ற அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. மாணவர்களின் நீண்டகால நியாயமான குரலை தமிழ் இந்து அழுத்தமாகப் பதிவுசெய்திருந்தது. அந்த அழுத்தம் தேர்வுமுறையிலேயே மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது.

- தாமரை செந்தில்குமார், தாம்பரம்.

நிஜத்தில் நடந்த நகைச்சுவை

தி

ரைப்படங்களில் இடம்பெறும் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சிகள் போன்று நிஜவாழ்விலும் நடந்து, வாழ்க்கையை ரசிக்கவைக்கிறது. ஒரு திரைப்படத்தில் ஆடு திருடிய தன் மீது பிராது கொடுத்த பெரியவர் ஒருவரைப் பொத்தாம்பொதுவில் மிரட்டியும் அரிவாளைக் காட்டிப் பயமுறுத்தியும் ஊர் பஞ்சாயத்திலிருந்து புகாரை வாபஸ் வாங்கச் செய்துவிடுவார். தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தா சட்டமும் அவ்வாறுதான் உள்ளது. லோக் ஆயுக்தாவில் பொய்ப் புகார் அளித்தால், ஒரு வருடம் சிறைத் தண்டனையும் ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைக் கேலி செய்து இன்றைய (ஜூலை - 11) ‘இந்து தமிழ்’ நாளிதழில் வெளியான கருத்துச் சித்திரத்தில் ‘ஊழல் செய்ற அரசியல்வாதிகளுக்குக் கிலி ஏத்துவாங்கன்னு பார்த்தா, புகார் கொடுக்க வர்ற மக்களுக்கு ஏற்படுத்துறாங்களே’ என்ற வாசகம் வடிவேலுவின் நகைச்சுவையை நினைவூட்டியது.

- ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x