Published : 07 Jun 2018 09:33 AM
Last Updated : 07 Jun 2018 09:33 AM
சிவ.ராஜ்குமார். சிதம்பரம்.
முழுமை பெறுமா காவிரிநீர் ஆணையம்?
கா
விரிநீர் மேலாண்மை வாரியம் அமைத்ததை வெற்றியாகக் கருத வேண்டுமானால், குறுவை சாகுபடிக்காகக் காவிரி நீரைப் பெற்றுத்தர வேண்டும். தவிர, அது நடைபெறாவிட்டால் இதை வெற்றியாகக் கருத இயலாது என ஜி.கே.வாசன், மு.க. ஸ்டாலின், வீரமணி உள்ளிட்ட தலைவர்களின் கருத்தை (ஜூன் - 3)படித்தபோது, அரைக் கிணறு கூட இன்னும் தாண்டவில்லையோ என்ற ஐயம் எழுகிறது. அரசிதழில் வெளியிடப்பட்டதால், காவிரிநீர் தமிழகத்தை நோக்கிப் பாய்ந்துவரும் என்பதுபோல முதல்வர் பேரவையில் பெருமிதம் கொள்கிறார். காவிரி ஆணையத்துக்குத் தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுவை ஆகிய மாநிலங்கள் தங்கள் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். நிர்ப்பந்தம் காரணமாகத் தமிழகம் உடனடியாக இருவரை நியமித்துவிட்டது. இதில் கர்நாடகம் தமது பிரதிநிதி உறுப்பினர்களை நியமிக்காவிட்டால் ஆணையம் முழுமை பெறாதல்லவா? இந்த அடிப்படையான, அமைப்புரீதியிலான தடைகளை கர்நாடகம் ஏற்படுத்தினால், அணையைத் திறக்க மத்திய அரசு முன்வருமா? குறுவை சாகுபடிக்காக ஜூன் மத்தி யில் காவிரிநீர் திறக்காவிட்டால், சம்பா பயிர் பொய்ப்பது மட்டுமல்ல.. மேலாண்மை வாரியத்தின் முதல்படியே ஆட்டம் கண்டுவிடாதா? இதற்கெல்லாம் தீர்வுவருவதை ஒட்டியே இந்த மேலாண்மை வாரியம் கொண்டாடப்படும்!
அ.ஜெயினுலாப்தீன், சென்னை.
சுதந்திரம் வேண்டும்
நடிகர் பிரகாஷ் ராஜ் - பிரதமரிடமும் ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசனிடமும் - கேட்க விரும்புவதாகச் சொல்லும் கேள்விகள், பெரும்பாலான மக்கள் கேட்க விரும்பும் கேள்விகளே. ஞாயிறு அரங்கம் ‘ரஜினி சார்... மத்தியில் சிஸ்டம் எல்லாம் சரியா இருக்கா?’ (ஜூன் - 3). எழுத்தாளர் கெளரி லங்கேஷ் கொலை - கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான கொலை. கேள்வி கேட்டால், நீ இந்துவுக்கு எதிரானவன், இந்தியாவுக்கு எதிரானவன், தேசப்பற்று இல்லாதவன், தேசத் துரோகி என்ற பட்டம். மதப் பற்றுடன் ஒருவர் இருக்கலாம். ஆனால், மத வெறி இருக்கக் கூடாது. முதல்வராக வேண்டும் என்ற கனவில் இருக்கும் ரஜினி, தூத்துக்குடி போராட்டக்காரர்களைப் பற்றிப் பேசிய பேச்சில் அரசியல் முதிர்ச்சி வெளிப்படவில்லை. கருத்துச் சுதந்திரமும், மதச் சுதந்திரமும், வன்முறையற்ற போராட்டச் சுதந்திரமும் உள்ள நாடே ஜனநாயகத்தில் மிளிரும் நாடாக திகழும்.
மாதவம் மினி, மின்னஞ்சல் வழியாக.
அழியா நினைவலைகள்
எனது பள்ளிப் பருவ நாட்கள் பாடல்கள் கேட்கப் பிடித்தக் காலங்கள். அதுவும் மிகமிக அதிக ஒலியில். கிராமப்புற கல்யாண நிகழ்ச்சிகளில் குழாய் ஒலிபெருக்கி கட்டுகிறவரே பெரிய இசை மேதை என்று நினைத்து அவருக்கு உதவிகள் செய்ததும்.. அவரிடம் பிடித்த பாடல் போடச்சொல்லி கெஞ்சிக் கிடந்ததும் அழியா நினை வலைகள். இளையராஜாவின் இசையில் சொக்கிக்கிடந்த காலங்களில் அவற்றின் காரணமும் தெரிந்ததில்லை.. ஆழமும் அறிந்ததில்லை. ஆசையின் கட்டுரை வாசித்த பிறகுதான் ரசனை மிகுந்த காலங்களின் மதிப்பு மணந்துகொண்டே இருந்தது புரிகிறது.
எப்படி இளையராஜாவோடு நம்மால் இணைய முடிகிறது என்பதற்கு ஒரு தத்துவ விளக்கம் தந்திருப்பது, புதிர் ஒன்றை அவிழ்ப்பது போன்றிருந்தது. நாம் அவரிடம் பெற்றுக்கொள்ளவில்லை.. அவரோடு சேர்ந்து நாமும் இசை நிகழ்த்துகிறோம். அதனால் நாம் கட்டுண்டு கிடக்கிறோம் போன்ற யதார்த்தமான வரிகளை மொத்தக் கட்டுரை யின் உயிர் வரிகளாகக் காண்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT