Published : 27 Jun 2018 12:00 AM
Last Updated : 27 Jun 2018 12:00 AM
அவலங்களை அம்பலப்படுத்திய ஜி.நாகராஜன்!
எ
ழுத்தாளர்களின் படைப்புகளை அவர்களின் தனிப்பட்ட வாழ்வியல் வலிகள் ஏதும் அறியாமலேயே அவர்கள் எழுதிய படைப்புப் பிரதிகள் வழியே உள்நுழைந்து வாசிக்கிறோம். சி.மோகனின் ‘நடைவழி நினைவுகள்’ இன்று ஜி.நாகராஜனை மறுபடியும் வாசிக்கவைத்தன. அடித்தள மக்களின் வாழ்வியலை உள்ளதை உள்ளபடியே சொன்னவர் ஜி.நாகராஜன். ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவல் படிக்கும் வாசகரின் சட்டையைப் பிடித்து உலுக்கும் உண்மைகளைத் தன்னுள்ளே பொதிந்தது. அதில் வரும் கந்தனும் மீனாவும் கீதாவும் பரமேஸ்வரனும் சமுதாயத்தால் பாடாய்ப் படுத்தப்பட்டு, யாரும் கேட்கத் தயங்குகிற கேள்விகளை மிக இயல்பாகக் கேட்டு உரையாடலை நகர்த்துகிறார்கள்.
தமிழின் உண்மையான யதார்த்தப் படைப்பு ஜி.நாகராஜனின் ‘குறத்தி முடுக்கு’. திருநெல்வேலியைக் களமாகக் கொண்டு அவர் படைத்துக் காட்டும் அந்தக் குறுநாவல், மௌனத்தின் அலறலாகவே தெரிகிறது. ‘மனிதன் மகத்தான சல்லிப் பயல்’ என்கிற வரியைப் படிக்கும்போதெல்லாம் இன்றும் உருத்தெரியாமல் யாரோ கன்னத்தில் அறைகிற உணர்வு ஏற்படவே செய்கிறது. ஆழமான வாசிப்பின் மூலமே ஜி.நாகராஜன் அழுத்தமாய் உணர்த்த விரும்பும் பிம்பங்களின் பின் ஒளிந்துள்ள போலி முகங்கள் பிடிபடும். ‘வாழ்வின் முட்கள் மீது நான் விழுந்தேன் ரத்தம் வடிக்கிறேன்’ எனும் ஷெல்லியின் கவிதை வரியைத்தான் ஜி.நாகராஜன் கடைசி நிமிடத்தில் உச்சரித்தார் எனும் சி.மோகனின் பதிவு எந்த இதழிலும் வராதது. பாரமாய் மனதை அழுத்துவது. இப்படியும் ஒரு படைப்பாளியை நெருக்கமாய் அறிமுகப்படுத்த முடியும் என்று காட்டுகிறார் சி.மோகன். கலை ஞாயிறு தனி இலக்கிய இதழாய் உருவெடுத்தால் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது.
- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி.
சீரழிகிறது தமிழகம்
‘மதுவுக்கான செலவு மீதமாவதால், பிஹாரில் மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டிருக்கிறது’ என்று ஆசிய மேம்பாட்டுக்கான ஆராய்ச்சி நிறுவனம் தன் ஆய்வில் வெளியிட்டிருப்பதாகச் செய்தி படித்தேன். மது இல்லாததால் பெண்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் மன நிறைவுடனும் இருக்கிறார்கள். குடும்ப வருமானம் இப்போது சேமிப்பாக மாறியிருக்கிறது என்று பிஹார் அரசைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறார்கள். பின்தங்கிய மாநிலமான பிஹார் முன்னேறுகிறது. முன்னேறிய மாநிலமான தமிழகம் மதுவால் சீரழிந்துகொண்டிருக்கிறது.
-க.கணேசமூர்த்தி, சென்னை.
விவசாயிகளை வஞ்சிக்கிறதா அரசு?
பசுமைவழிச் சாலைத் திட்டம் விவசாயிகளைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. காலம்காலமாக விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்களைத் தண்ணீர் தராமல் வஞ்சித்த அண்டை மாநில அரசுக்கு ஒரு படி மேலே சென்று, விவசாய நிலங்களை அபகரித்துப் பெருமைகொள்கிறது நம் அரசு.
- இரா.கிருபாகரன், துறைமங்கலம்.
இந்து தமிழின் இரு செய்திகள்
இந்து தமிழ் நாளிதழில், ஜூன் 25 அன்று வெளியான மகளிரைப் பற்றிய செய்திகள், வீட்டுக்குள்ளே பெண்களைப் பூட்டிவைத்திருக்கும் மனிதர்களை நிச்சயம் தலைகுனிய வைத்திருக்கும். டீக்கடைக்காரரின் மகள் ஆன்சல் கங்க்வால் போர் விமானியானதும், சவுதி அரேபியாவில் மகளிர் கார் ஓட்ட அனுமதி அளித்ததால் பறவைகளைப் போல் உணர்வு பெற்றேன் என்னும் சமர் அல்மோக்ரனின் பேட்டியும் பெரும்மகிழ்வைத் தந்தன. இச்செய்திகளை வெளியிட்டதன் மூலம், மகளிர் மத்தியில் முற்போக்குச் சிந்தனை வளர வேண்டியதன் அவசியத்தை அழகாகச் சொன்னது இந்து தமிழ்.
- எஸ்.ஸ்ரீகுமார், கல்பாக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT